Tuesday, May 04, 2010

காயகற்ப மூலிகைகள் ஐந்து.


இப்படியும் அர்த்தம் உண்டாம்,

காயகற்ப மூலிகைகள் ஐந்து.

உடலை இளமை மிடுக்குடன் வைத்திருக்க ஒளவைப்பிராட்டியார் தனது செய்யுளில் காயகற்ப மூலிகைகளை பற்றி கூறியுள்ளார்.

" வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - "பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு."

தும்பிக்கையுடைய விநாயகரை துதிப்பவர்க்கு வாக்குவன்மையும், மனோபலமும், இலக்குமி கடாட்சமும், உடலும் வாடாது. இது சாதாரனமாக கொள்வது.


இதன் உட்கருத்து, (ஒழுக்கத்துடன் இருந்து) உடலை நெடுநாள் வரை மூப்பின்றி, பிணியின்றி வைத்திருப்பதற்கான கற்ப மூலிகைகளை கூறும் செய்யுளாகும்.


இங்கு,

பூ என்பது வெண்தாமரைப்பூ
மேனி என்பது குப்பை மேனி
தும்பி என்பது தும்பை செடி
கையான் என்பது கரிசலாங்கண்ணி
பாதம் என்பது செருப்படை


மேற்கூறப்பட்ட ஐந்து மூலிகைகளும் காயகல்ப மூலிகைகளாகும். அதாவது இச்செய்யுளின் உட்கருத்து இதுவென குறிப்பிடப்படுகின்றது.


இதனை பயன்படுத்தும் முறை,

வெண்தாமரைப்பூ இதழ் -450g
குப்பைமேனி இலை -700g
தும்பை சம்மூலம் -560g
கரிசலாங்கண்ணி இலை -300g
செருப்படை இலை -280g

எல்லாவற்றையும் தனித்தனியாக உலர்த்தி சூரணம் செய்து, ஒரு வேளை 3g வீதம் காலை, மாலை தேனில் குழைத்து சாப்பிட்டு பசும்பால் 200ml குடிக்கவும். தொடர்ந்து 48 நாட்கள் கற்பம் உண்ணவும்.

பத்தியம்

மருந்து முடியும் வரை பால் சாதம், மலைவாழைப்பழம் சாப்பிடவும்.
அதிக அலைச்சல், கடும்வெயிலில் திரிதல், மழையில் நனைதல் கூடாது.
மூன்று மாதம் பெண் சேர்க்கையை தவித்தல் வேண்டும்.

நன்றி : Dr சிற்சபை,சித்த மருத்துவம். திங்கள் இதழ், 01.04.1985, இதழ் 12.

Wednesday, June 24, 2009

மனதோடு!
பஞ்சபூதங்களும் முக்குற்றங்களும்.

திருமூலர் அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில் உள்ளது என்கிறார்.பங்சபூதத்தால் உண்டாகி பஞ்சபூதத்தில் வாழ்ந்து பஞ்சபூதத்தில் அழியும் தன்மை கொண்டவன்தான் மனிதன். பஞ்சபூதங்கள் ஆகாயம், காற்று, அக்கினி, நீர், பூமி என்பனஆகும். இவை மனித உடலில் கீழ்வரும் முக்குற்றங்களை உருவாக்கின்றன.




காற்று + ஆகாயம் - வளி - அசையும், அசைய வைக்கும் தன்மை கொண்டது.
அக்கினி - அழல்
நீர் + நிலம் - ஐயம்

இம்மூன்றும் சேர்ந்து வளி, அழல், வஐயம் என்கின்ற முக்குற்றங்களாக செயற்படுகின்றன.
இவற்றை குற்றங்கள் என்று சொல்வதற்கு காரணம், தாம் கெட்டுப்போவதால் உடலில் உள்ள தாதுக்களையும் கெட்டுப்போக செய்து நோயை உண்டாக்குகின்றன. பஞ்சபூதங்களே முக்குற்ற வடிவில் உடலின் செயற்பாட்டை நிர்ணயிக்கின்றன.

இந்து புராணப்படி,

பிரம்மா - வளி - உருவம் இல்லை.
விஸ்ணு - ஐயம் - இதனை சமப்படுத்தவே வெப்பம் தரும் துளசி விஸ்ணுவிற்கு பயன்படுத்தப்படுகின்றது.
சிவன் - அழல் - இதனாலேயே சிவன் தலையில் சந்திரனையும், கங்கையையும் கொண்டுள்ளார்.

அழல் - சீரண சக்தி, உடல் வெப்பம், பசி, தாகம், கண்பார்வை என்பவற்றை கொடுக்கின்றது.
ஐயம் - உடல் அமைப்பு, உடலின் மூட்டுக்கள், கொழுப்பு, நோய்எதிர்ப்பு என்பவற்றை கொடுக்கின்றது.
வளிக்குற்றம் - ஏனைய இரு குற்றங்களுக்கும் முதன்மையானது. அவற்றை இயக்குவதும் வளிக்குற்றமே. வளியின் செயற்பாடுகள் அதிகம். இதயத்தின் செயற்பாடு, புலன்களின் செயற்பாடு, கழிவகற்றல் என்பவற்றுடன் மூளையின் செயற்பாடு அதனுடன் கூடிய மனதின் செயற்பாட்டுக்கும் இதுவே காரணமானது. எனவேதான் மனம் பாதிக்கப்படும் போது வளி பாதிப்படைகின்றது. இதனால் உடற்தாதுக்கள் பாதிப்படைகின்றன.

இதனாலேயே சித்தர்கள் அட்டாங்க யோகங்களான இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரதிதயாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பவற்றை முக்கியப்படுத்தியுள்ளார்கள். யோகம் என்பது ஐம்பொறிபுலன்களால் மனம் சிதறி போகாமல் ஒரு நிலைப்படுத்தி பேரின்பத்தை மனதில் எண்ணி ஆகம
விதிப்படி ஒழுகுதல் ஆகும்.

இதில் சாதாரண மனிதர்கள் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம் ஆகிய நான்கினையும் கடைப்பிடித்து வந்தாலே மனதினை பாதிக்கக்கூடிய பிரச்சினைகளில் இருந்து தப்புவதோடு, இதனால் ஏற்படும் உடற்பாதிப்புக்களில் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம். மனதும் செயலும் தூய்மையானால் மனிதன் கவலை, துன்பம் ஆகியவற்றால் தாக்கப்படாது நரை, திரை, மூப்பு மற்றும் பிணிகளுக்கு அப்பாற்பட்டு வாழ முடியும் என சித்தர்கள் கூறியுள்ளனர்.




அதாவது மனதின் தொழில் நினைத்தல், நினைத்ததை செயற்படுத்துவது. இவை இரண்டிணையும் ஒன்றுக்கொன்று ஒருங்கிணைத்து செயற்படுத்துவது வளிக்குற்றமாகும். இதன்போது நினைத்தலில் அதாவது எண்ணத்தில் ஏற்படும் விகாரங்கள் வளிக்குற்றத்திலும் விகாரத்தை உண்டுபண்ணுகின்றன. இது உடலில் வேண்டத்தகாத மாற்றத்தினை ஏற்படுத்துகின்றன. மனமாறுதல் உடல் மாறுதல்களையும், உடல் மாறுதல்கள் மனமாறுதலையும் ஏற்படுத்துகின்றன. உள்ளம் தளர்வுறும்போது உடலும் தளர்வுறுகின்றது. இதன் மூலம் உள்ளத்திற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பினை அறிந்துகொள்ளலாம்.

இதனையே வள்ளுவர்,

'காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றும்
நாமங் கெடக் கெடும் நோய்'


எனவும்,

'மனமது செம்மையானால்
மந்திரம் செபிக்க வேண்டாம்
மனமது செம்மையானால்
வாயுவை (வளி) ஏற்ற வேண்டாம்
மனமது செம்மையானால்
வாயுவை நிறுத்த வேண்டாம்"


என சித்தர்களும் கூறியுள்ளனர்.

இவ்வாறு மனதுடன் தொடர்புடைய வளியினது இயற்கைப்பண்புகள் ஆவன,

இயற்கை நிலையில் நின்று ஊக்கம் உண்டாக்கல்,
மூச்சுவிடல். வாங்கல்
மனம் மொழி மெய்களுக்கு செயலை தரல்
மலம் முதலிய பதினான்கு விரைவுகளை வெளிப்படுத்தல்
ஏழு உடற்தாதுக்களுக்கும் ஒருமித்து நிகழ்ச்சியை தரல்
ஐம்பொறிகளுக்கும் வன்மையை கொடுத்தல்.

வளிக்குற்றமானது பரிவு நரம்பு (Sympathetic Nerve), அதிரினல் சுரப்பி ஓமோன்களின் (Adrenal gland Hormones) போன்றவற்றின் செயற்பாட்டுடன் ஒத்ததாக காணப்படுகின்றது. இது பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் முதலான வளிக்குற்றங்களில் உதானன் (முயற்சி,மனதிடம்), நாதன்(அறிவு, பண்பு), கூர்மன் (இதன் இருப்பிடம் மனதில்) என்பன கூடுதலாக மனதுடன் தொடர்புடையனவாக காணப்படுகின்றன.

உடல் நோய் ஏற்பட மனமும் முக்கியமென்பதை கீழ்வரும் சித்தர் பாடலும் கூறுகின்றது.

பிணிக்கேது கரமென்ப பேசுதல்வே றில்லை
தணிக்காத கோபத்தாற் றாகந் - தணிக்காமை
யாலுண்டி யாற்புணர்ச்சி யாரி ரத்தாற் சுமையாகீ
மேலும் பிணிகளநறுமே.


முக்குற்றங்களின் அடிப்படையில் அமைந்த உடல் அமைப்புக்களிலும் வளியை அடிப்படையாக கொண்ட வளி உலமைப்பு (பிரக்ருதி), கூடுதலாக உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டதாகவும் கூடுதலான மனப்பாதிப்புக்களையும் சஞ்சலங்களையும் அடைவதாகவும் காணப்படுகின்றது. அழல், ஐய உடல் அமைப்புடையோர் ஒப்பீட்டளவில் மேற்கூறிய இயல்புகளை குறைவாக கொண்டு காணப்படுகின்றனர். இவ்வுடலமைப்பு பிரிவுகள் தற்கால உளவியல் உடலமைப்பு பிரிவுகளுடன் ஒத்துக்காணப்படுவதாக கூறப்படுகின்றது. அதாவது அகத்தியர், தேரையர், போன்றோரின் உடலமைப்புக்களுடன் (முக்குற்றங்களை அடிப்படையாக கொண்ட), Kretscmer மற்றும் Sheldon போன்றோரின் உடலமைப்பு பிரிவுகளின் குணங்களுடன் ஒத்துக்காணப்படுவதாக கூறப்படுகின்றது.

உடலமைப்பு பிரிவுகள்:-
தேரையர் + அகத்தியர் --- Kretscmer --- Sheldon
வளி உடலமைப்பு --- Asthenic Constitution --- Ectomorphic Constitution
அழல் உடலமைப்பு --- Athletic Constitution --- Mesomorphic Constitution
ஐய உடலமைப்பு --- Pyknik Constitutuion --- Endomorphic Constitution.

Sunday, July 27, 2008


கர்ப்ப காலத்தில் இலைக்கஞ்சியில் சேர்க்கவேண்டிய மூலிகைகள்.

கர்ப்ப காலம் எனப்படுவது, ஓர் பெண் கருவுற்ற காலம் தொடக்கம் கரு வளர்ச்சியடைந்து குழந்தையாக பிரசவிக்கும் காலப்பகுதி வரையானதாகும். இக்காலப்பகுதியில் பெண் தான் உண்ணும் உணவினை விட மேலதிகமான உணவினை உட்கொள்ளுதல் வேண்டும். அதாவது சாதாரணமாக 2200 கிலோகலோரி சக்தி பெண்ணுக்கு தேவை. கர்ப்ப காலத்தில் மேலதிகமாக 300 கிலோகலோரி சக்தி பெண்ணுக்கு தேவை.
எனவே நாம் உணவின் அளவினை கூட்டாது போசனைச்செறிவினை கூடுதலாக கொண்ட உணவுகளை உட்கொள்ளுதல் சிறப்பானதாகும். இதற்காக நாம் விலை கூடிய உணவுப்பொருட்களை தேடவேண்டியதில்லை. எமது சூழலில் காணப்படும் மூலிகைகளை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்காக சித்த மருத்துவத்தில் கூறப்பட்ட இலைக்கஞ்சியை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இலைக்கஞ்சியில் சேரும் பொருட்கள் (ஒருவேளைக்குரியது)


பச்சையரிசி or அவல் - 50g
தேங்காய்ப்பூ - 10g
இலைவகை - 10 g
ஊறவைத்த பயறு - 10 g
சீனி or தேன்- தேவையான அளவு
மாஜரின் அல்லது நெய் - 5 g
உப்பு - தேவையான அளவு


அரிசியை நன்கு வேக வைத்து முதல் நாள் ஊறவைத்த முளைவிட்ட பயற்றை பின் சேர்க்கவும். பின்னர் ஏனைய பொருட்களை சேர்த்துக்கொள்ளவும் இறுதியாக இலைவகையை சேர்க்கவும். அல்லது இறுதியாக இலைவகையை சாறாகசேர்த்துக்கொள்ளவும்.

கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களில் சேர்க்க வேண்டிய மூலிகைகள்.

இக்காலப்பகுதியில் தாய் வயிற்றுப்பிரட்டல், வாந்தி போன்ற உபாதைகளால் அவதியுறுவார் இதனால் நீரிழப்பும் ஏற்பட்ட வண்ணமிருக்கும். இதன் போது போதிய ஆகாரத்தினை பெற்றுக்கொள்ள சிரமப்பட வேண்டியிருக்கும். எனவே திரவஆகாரமான இலைக்கஞ்சியை இக்காலத்தில் பயன்படுத்துதல் சிறந்த பலனைத்தரும். அத்துடன் பிள்ளையின் வளர்ச்சிக்கும், பிரசவத்தின் பின் பாலுற்பத்திக்கும், குருதியை சுத்திகரிக்கவும், குருதியுற்பத்திக்கும், நரம்பு வளர்ச்சிக்கும் பின்வரும் மூலிகைகளின் பகுதிகளை இலைக்கஞ்சியுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

கூடுதல் கலோரியுள்ளவை
தேன், தேங்காய்ப்பால்.

கூடுதல் இரும்புச்சத்துள்ளவை
வல்லாரை, பொண்ணாங்காணி, தவசிமுருங்கை.

கூடுதல் Folate உள்ளவை
சாத்தாவாரி, அவரை, கோவா.

கூடுதல் விற்றமின் C உள்ளவை
எலுமிச்சம்பழம், நெல்லி, பழ வகை (கஞ்சியுடன் சமைக்காது உள்ளெடுத்தல் வேண்டும்)

கர்ப்ப காலத்தின் 4ம், 5ம், 6ம் மாதங்களில் சேர்க்க வேண்டிய மூலிகைகள்.

4ம் மாதம் தொடக்கம் குழந்தையின் உறுப்புகள் வளர்ச்சியடைய தொடங்குகின்றன. இதனால் தாயின் நிறை அதிகரிக்க தொடங்குவதுடன் தாயிடமிருந்து கூடுதலான சக்தி பெறப்படுவதால் தாய் பலவீனமாக காணப்படுவார். அத்துடன் தாயின் வயிறு பெருப்பதால் தாய் அதிகளவான உணவினை உட்கொள்ளும்போது சிரமத்தினை அடையக்கூடும். இதனால் தாய்க்கு இலகுவாக சமிபாடு அடைய கூடிய போசாக்குமிக்க உணவுகளை வழங்குதல் வேண்டும். முக்கியமாக எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கல்சியம் நிறைந்த மூலிகைகள் தேவைப்படும். கல்சியம் தேவையான அளவு கிடைக்காவிடின் கால் தசைப்பிடிப்பு, இடுப்புளைவு, உயர்குருதியமுக்கம், பிரசவத்திற்கு பின்னான வேதனை அதிகமாக ஏற்படும். இக்காலத்தில் பாவிக்க கூடிய மூலிகைகள்.

புரதச்சத்தும் கலோரியும் கொண்ட மூலிகைகள்
உழுந்து, தேன், பயறு, கெளபி, கடலை.

கல்சியம் சத்துக்கொண்டவை
கோவா, முருங்கையிலை, மரவள்ளிக்கிழங்கு, நெல்லி.

இரத்தத்தை சுத்திகரிக்க கூடியவை
மஞ்சள், குங்குமப்பூ, உள்ளி.

கர்ப்ப காலத்தின் 7ம் மாதத்தின் பின் சேர்க்க வேண்டிய மூலிகைகள்.

7ம் மாதத்தின் பின்னர் பொதுவாக தாயின் கால்களில் வீக்கம் காணப்படும். எனவே சிறுநீர் பெருக்கி செய்கையுள்ள மூலிகைகளை பயன்படுத்தல் வேண்டும். இக்காலப்பகுதியில் பிள்ளையின் வளர்ச்சி வீதம் கூடுதலாக காணப்படும் எனவே மேலும் போசாக்கான உணவுகளை உட்கொள்ளவேண்டும். கர்ப்ப காலத்தின் பிற்பகுதியில் குழந்தையுடனான கர்ப்பப்பையின் அழுத்தம் பலருக்கு மலக்கட்டினை ஏற்படத்துகின்றது. எனவே இலகுமலம்போக்கி செய்கையுள்ள மூலிகைகளை பயன்படுத்தல் வேண்டும். எனவே இக்காலப்பகுதியில் கீழ்வரும் மூலிகைகளை பயன்படுத்தல் வேண்டும்.

இலகு மலம்போக்கி செய்கையுள்ளவை
எள்ளு, குப்பைமேனி, நிலவாகை, கடுக்காய்.

சிறுநீர்பெருக்கி செய்கையுள்ள மூலிகைகள்
சிறுநெருஞ்சில், நீர்முள்ளி, பார்லி அரிசி.

நோய்களுக்கேற்ப பயன்படும் மூலிகைகள்.

இருமல், சுவாச ரோகங்களில் ............
துளசி, தூதுவளை, மொசுமொசுக்கை, கற்பூரவள்ளி, திப்பலி, சிற்றரத்தை.

குன்மம் (வயிற்றுப்புண்), அஜீரணம் போன்றவைகளில் ..............
பிரண்டைதுளிர், வில்வம் இலை, கொத்தமல்லி, நற்சீரகம், சாத்தாவாரி, மிளகு.

நீரழிவு நோய் நிலையில் .............
சிறுகுறிஞ்சா, ஆவாரை, கடலிராஞ்சிப்பட்டை, வெந்தயம், சுண்டங்கத்தரிக்காய்.

தோல் நோய்களில் ............
மாதுளந்துளிர், குப்பைமேனி, கறிமுருங்கை, நிலவாகை.

அதிகுருதியமுக்க நிலையில் ............
உள்ளி, சாரணை, நன்னாரி,கொத்தமல்லி, ஜடாமாஞசில்.


Thursday, April 03, 2008

கஞ்சாங்கோரை

Ocimum album

செடி வகுப்பைச்சேர்ந்த மருத்துவமூலிகையாகும்.

மருத்துவ குணங்கள்

செரிப்புண்டாக்கி(Digestive), வெப்பமுண்டாக்கி(Stimulant), வியர்வைபெருக்கி(Diaphoretic),கோழையகற்றி(Expectorant)

Sunday, March 30, 2008

இலங்கையில் சித்த மருத்துவம்.............

இலங்கையின் சுதேச மருத்துவ முறைகளுள் சித்த மருத்துவமும் ஒன்றாகும்.சித்தமருத்துவமானது தமிழ்மக்களால் பயன்படுத்தப்பட்டு வருவதால் இதனை தமிழர் மருத்துவம் எனவும் கூறப்படுகின்றது.
சித்தமருத்துவத்தின் வரலாற்றினை பார்க்கையில் சித்தமருத்துவமானது ஆரம்பத்தில் சிவபெருமானால் உமையம்மையாருக்கு கூறப்பட்டதாகவும், உமையம்மையார் அதனை முருகனுக்க கூற, முருகன் அதனை அகத்தியர், திருமூலர் முதலான சித்தர்களுக்கு உபதேசித்ததாகவும், இச்சித்தர்களே உலகில் சித்த மருத்துவத்தை பரப்பியதாகவும் கூறுவர். சிவபெருமான் உமாதேவியாருக்கு கூறும்போது நந்திதேவர் அதனை கேட்டு அகத்தியர், திருமூலர் போன்றவர்க்கு கூறியதாகவும் வரலாறு உண்டு.


சித்தமருத்துவமானது பாரதத்தின் (இந்தியா) தென்பகுதிகளான தமிழ்நாடு, கேரளம் ஆகிய பகுதிகளிலும் பாரதத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள இலங்கையிலும் காணப்படுகின்றது. அதாவது குமரிக்கண்டத்தின் தென்பகுதிகளான தமிழ்நாடு, கேரளம், இலங்கை ஆகிய நாடுகளில் சித்தமருத்துவம் பயன்பாட்டில் உள்ளது.


இலங்கையை ஆண்ட இராவணன் சிறந்த சிவபக்தனாக மடடுமன்றி சிறந்த வைத்தியனாகவும் இருந்துள்ளான். சிவபெருமானால் சித்தர்களுக்கு அருளப்பெற்று சித்தர்களால் பின்பற்றப்பட்டு வந்தமையினால் சித்தர் மருத்துவம் எனவும், தமிழ்கடவுளாகிய முருகனால் அகத்தியர், திருமூலர் போன்றவர்க்கு சொல்லப்பட்டு தமிழர்களால் பின்பற்றப்பட்டு வந்தமையினால் தமிழ் மருத்துவம் எனவும் அழைக்கப்படுகின்றது.


ஆதிகாலத்தில் சித்தமருத்துவமானது இலங்கை முழுவதும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதற்கு பல சான்றுகள் உள்ளன. பொலனறுவையில் அமைந்துள்ள பொற்கல் விகாரையில் சித்தமருத்துவத்தின் தந்தை என்றழைக்கப்படும் அகத்திய முனிவரின் சிலை காணப்படுகின்றது.


15ம் நூற்றாண்டில் சிங்களத்தில் ஆக்கப்பட்ட "வைத்திய சிந்தாமணி பைசாஜ் சங்கிரகம்"(Vaidyacindamani bhaisadya) என்னும் நூல் "வைத்திய சிந்தாமணி" எனும் தமிழ் மருத்துவ நூலை தழுவி எழுதப்பட்ட நூலாகும் என்ற கருத்தும் உள்ளது.


சித்த மருத்துவம் கூறும் நவநாத சித்தர்களுள் ஒருவரான கோரக்கர் திருகோணமலையில் சித்தயடைந்தார் என்பதும் கவனத்திற்கொள்ளத்தக்கது. பதினெண் சித்தர்களுள் ஒருவரான புலத்தியர் சிங்கள நாட்டை சேர்ந்தவரென குறிப்பிடப்படுகின்றது. இங்கு சிங்கள நாடு என்பது இலங்கையாகும். அத்துடன் யாழ்ப்பாண மன்னன் பரராஜசேகரனின் மகன் பரநிருபசிங்கன் சிறந்த மருத்துவனாக திகழ்ந்துள்ளான்.
எனினும் பிற்பட்ட காலத்தில் சித்தமருத்துவமானது இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதிகள்லேயே பெருமளவு கையாளப்பட்டு வரப்படுகின்றது. அதிலும் இலங்கையில் சித்தமருத்துவத்தின் தாயகம் யாழ்ப்பாணமாக விளங்குகின்றது என்று கவிப்புயல் நவரத்தினம் அவர்களும், சித்த மருத்துவமானது அதன் தூய்மையுடனும் தனித்துவத்துடனும் யாழ்ப்பாணத்தில் இன்றுவரை கையாளப்பட்டு வரப்படுகின்றது என்று பேராசிரியர் உரகோட அவர்களும் எடுத்து கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இவற்றுடன் சோழ இழவரசியான மாருதப்புரவள்ளியின் புற்றுநோயை குணப்படுத்தியதும் இதனால் யாழ்ப்பாணத்தில் முருகனுக்கு கோயில் கட்டியும், கதிர்காம யாத்திரையை முருகன் அருளால் தொடங்கி கதிர்காம இயந்திரத்தை ஸ்தாபித்தவர் பதினெண் சித்தர்களுள் ஒருவரான போகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனாலேயே அங்கு இன்றும் மூலிகைச்சந்தை காணப்படுகின்றது.
முக்கியமாக கடலிராஞ்சிப்படடை, மரமஞ்சள், புலிநகம், சீந்தில், செஞ்சந்தனம், உருத்திராட்சை என்பன பெருமளவில் காணப்படுகின்றது. அத்துடன் சித்தமருத்துவ யாழ்ப்பாண நூலான பரராஜசேகரத்தில் " மருந்து மாத்திரைகள் பிழைத்தால் கதிரைமலை மேவு முருகனை வணங்கிட அந்நோய்கள் மாறிடும்" என்று நூலின் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பல வழிகளிலும் இலங்கையில் கானப்பட்ட சித்தமருத்துவம் காலப்போக்கில் தமிழர் அதிகமாக வாழும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களிற்கு மட்டுப்படுத்தப்பட்டு இங்கு வாழ்ந்த மன்னர்களாலும், மக்களாலும், சித்தமருத்துவர்களாலும் பேணி வளர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வலுவான சித்தமருத்துவ பாரம்பரியம் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று அதன் ஆழமான அறிவினைப்பெற்றுக்கொண்டோர் எத்தனைபேர் என்பது கேள்விக்குறியே.


உள நெருக்கீடுகளில் சித்த மருத்துவத்தின் பங்கு.