Wednesday, June 24, 2009

மனதோடு!
பஞ்சபூதங்களும் முக்குற்றங்களும்.

திருமூலர் அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில் உள்ளது என்கிறார்.பங்சபூதத்தால் உண்டாகி பஞ்சபூதத்தில் வாழ்ந்து பஞ்சபூதத்தில் அழியும் தன்மை கொண்டவன்தான் மனிதன். பஞ்சபூதங்கள் ஆகாயம், காற்று, அக்கினி, நீர், பூமி என்பனஆகும். இவை மனித உடலில் கீழ்வரும் முக்குற்றங்களை உருவாக்கின்றன.




காற்று + ஆகாயம் - வளி - அசையும், அசைய வைக்கும் தன்மை கொண்டது.
அக்கினி - அழல்
நீர் + நிலம் - ஐயம்

இம்மூன்றும் சேர்ந்து வளி, அழல், வஐயம் என்கின்ற முக்குற்றங்களாக செயற்படுகின்றன.
இவற்றை குற்றங்கள் என்று சொல்வதற்கு காரணம், தாம் கெட்டுப்போவதால் உடலில் உள்ள தாதுக்களையும் கெட்டுப்போக செய்து நோயை உண்டாக்குகின்றன. பஞ்சபூதங்களே முக்குற்ற வடிவில் உடலின் செயற்பாட்டை நிர்ணயிக்கின்றன.

இந்து புராணப்படி,

பிரம்மா - வளி - உருவம் இல்லை.
விஸ்ணு - ஐயம் - இதனை சமப்படுத்தவே வெப்பம் தரும் துளசி விஸ்ணுவிற்கு பயன்படுத்தப்படுகின்றது.
சிவன் - அழல் - இதனாலேயே சிவன் தலையில் சந்திரனையும், கங்கையையும் கொண்டுள்ளார்.

அழல் - சீரண சக்தி, உடல் வெப்பம், பசி, தாகம், கண்பார்வை என்பவற்றை கொடுக்கின்றது.
ஐயம் - உடல் அமைப்பு, உடலின் மூட்டுக்கள், கொழுப்பு, நோய்எதிர்ப்பு என்பவற்றை கொடுக்கின்றது.
வளிக்குற்றம் - ஏனைய இரு குற்றங்களுக்கும் முதன்மையானது. அவற்றை இயக்குவதும் வளிக்குற்றமே. வளியின் செயற்பாடுகள் அதிகம். இதயத்தின் செயற்பாடு, புலன்களின் செயற்பாடு, கழிவகற்றல் என்பவற்றுடன் மூளையின் செயற்பாடு அதனுடன் கூடிய மனதின் செயற்பாட்டுக்கும் இதுவே காரணமானது. எனவேதான் மனம் பாதிக்கப்படும் போது வளி பாதிப்படைகின்றது. இதனால் உடற்தாதுக்கள் பாதிப்படைகின்றன.

இதனாலேயே சித்தர்கள் அட்டாங்க யோகங்களான இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரதிதயாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பவற்றை முக்கியப்படுத்தியுள்ளார்கள். யோகம் என்பது ஐம்பொறிபுலன்களால் மனம் சிதறி போகாமல் ஒரு நிலைப்படுத்தி பேரின்பத்தை மனதில் எண்ணி ஆகம
விதிப்படி ஒழுகுதல் ஆகும்.

இதில் சாதாரண மனிதர்கள் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம் ஆகிய நான்கினையும் கடைப்பிடித்து வந்தாலே மனதினை பாதிக்கக்கூடிய பிரச்சினைகளில் இருந்து தப்புவதோடு, இதனால் ஏற்படும் உடற்பாதிப்புக்களில் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம். மனதும் செயலும் தூய்மையானால் மனிதன் கவலை, துன்பம் ஆகியவற்றால் தாக்கப்படாது நரை, திரை, மூப்பு மற்றும் பிணிகளுக்கு அப்பாற்பட்டு வாழ முடியும் என சித்தர்கள் கூறியுள்ளனர்.




அதாவது மனதின் தொழில் நினைத்தல், நினைத்ததை செயற்படுத்துவது. இவை இரண்டிணையும் ஒன்றுக்கொன்று ஒருங்கிணைத்து செயற்படுத்துவது வளிக்குற்றமாகும். இதன்போது நினைத்தலில் அதாவது எண்ணத்தில் ஏற்படும் விகாரங்கள் வளிக்குற்றத்திலும் விகாரத்தை உண்டுபண்ணுகின்றன. இது உடலில் வேண்டத்தகாத மாற்றத்தினை ஏற்படுத்துகின்றன. மனமாறுதல் உடல் மாறுதல்களையும், உடல் மாறுதல்கள் மனமாறுதலையும் ஏற்படுத்துகின்றன. உள்ளம் தளர்வுறும்போது உடலும் தளர்வுறுகின்றது. இதன் மூலம் உள்ளத்திற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பினை அறிந்துகொள்ளலாம்.

இதனையே வள்ளுவர்,

'காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றும்
நாமங் கெடக் கெடும் நோய்'


எனவும்,

'மனமது செம்மையானால்
மந்திரம் செபிக்க வேண்டாம்
மனமது செம்மையானால்
வாயுவை (வளி) ஏற்ற வேண்டாம்
மனமது செம்மையானால்
வாயுவை நிறுத்த வேண்டாம்"


என சித்தர்களும் கூறியுள்ளனர்.

இவ்வாறு மனதுடன் தொடர்புடைய வளியினது இயற்கைப்பண்புகள் ஆவன,

இயற்கை நிலையில் நின்று ஊக்கம் உண்டாக்கல்,
மூச்சுவிடல். வாங்கல்
மனம் மொழி மெய்களுக்கு செயலை தரல்
மலம் முதலிய பதினான்கு விரைவுகளை வெளிப்படுத்தல்
ஏழு உடற்தாதுக்களுக்கும் ஒருமித்து நிகழ்ச்சியை தரல்
ஐம்பொறிகளுக்கும் வன்மையை கொடுத்தல்.

வளிக்குற்றமானது பரிவு நரம்பு (Sympathetic Nerve), அதிரினல் சுரப்பி ஓமோன்களின் (Adrenal gland Hormones) போன்றவற்றின் செயற்பாட்டுடன் ஒத்ததாக காணப்படுகின்றது. இது பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் முதலான வளிக்குற்றங்களில் உதானன் (முயற்சி,மனதிடம்), நாதன்(அறிவு, பண்பு), கூர்மன் (இதன் இருப்பிடம் மனதில்) என்பன கூடுதலாக மனதுடன் தொடர்புடையனவாக காணப்படுகின்றன.

உடல் நோய் ஏற்பட மனமும் முக்கியமென்பதை கீழ்வரும் சித்தர் பாடலும் கூறுகின்றது.

பிணிக்கேது கரமென்ப பேசுதல்வே றில்லை
தணிக்காத கோபத்தாற் றாகந் - தணிக்காமை
யாலுண்டி யாற்புணர்ச்சி யாரி ரத்தாற் சுமையாகீ
மேலும் பிணிகளநறுமே.


முக்குற்றங்களின் அடிப்படையில் அமைந்த உடல் அமைப்புக்களிலும் வளியை அடிப்படையாக கொண்ட வளி உலமைப்பு (பிரக்ருதி), கூடுதலாக உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டதாகவும் கூடுதலான மனப்பாதிப்புக்களையும் சஞ்சலங்களையும் அடைவதாகவும் காணப்படுகின்றது. அழல், ஐய உடல் அமைப்புடையோர் ஒப்பீட்டளவில் மேற்கூறிய இயல்புகளை குறைவாக கொண்டு காணப்படுகின்றனர். இவ்வுடலமைப்பு பிரிவுகள் தற்கால உளவியல் உடலமைப்பு பிரிவுகளுடன் ஒத்துக்காணப்படுவதாக கூறப்படுகின்றது. அதாவது அகத்தியர், தேரையர், போன்றோரின் உடலமைப்புக்களுடன் (முக்குற்றங்களை அடிப்படையாக கொண்ட), Kretscmer மற்றும் Sheldon போன்றோரின் உடலமைப்பு பிரிவுகளின் குணங்களுடன் ஒத்துக்காணப்படுவதாக கூறப்படுகின்றது.

உடலமைப்பு பிரிவுகள்:-
தேரையர் + அகத்தியர் --- Kretscmer --- Sheldon
வளி உடலமைப்பு --- Asthenic Constitution --- Ectomorphic Constitution
அழல் உடலமைப்பு --- Athletic Constitution --- Mesomorphic Constitution
ஐய உடலமைப்பு --- Pyknik Constitutuion --- Endomorphic Constitution.

உள நெருக்கீடுகளில் சித்த மருத்துவத்தின் பங்கு.