Friday, May 07, 2021
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்... - மாணிக்கவாசகர்.
நாம் கடந்த கால பெருந்தொற்றுக்கள் மூலமான அனுபவங்களில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்ளும்போது மிகவும் அவதானமாக எதிர்காலத்தை திட்டமிட வேண்டும்.
சமீபகாலமாக பெருந்தொற்றுக்கள் உலகலாவிய ரீதியில் ஒவ்வொரு ஆண்டும் 2 - 3 பெருந்தொற்றுக்களை எதிர்நோக்கியிருக்கின்றோம், எதிர்நோக்குகின்றோம், எதிர்நோக்கப் போகின்றோம்.
தற்போதுள்ள பெருந்தொற்று அலை 2, அலை 3 என நீள்கின்றது. எதிர்காலத்தில் வீரியமிக்க ஆபத்துக்களை தோற்றக்கூடிய தொற்றுக்களும் ஏற்படலாம். ஏனெனில் உலக இயங்கியல் ஆனது உலக உயிரினப் பல்வகைமையில் (Biodiversity) மாற்றத்தை ஏற்படுத்தும்போது, நுண்ணுயிரிகளில் விகாரமான மாறுபாடுகள் ஏற்படுவதும் அவை திரிபடைவதும் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது என்பதே உண்மை. இதற்கு பூமியில் உள்ள மனிதர்கள் நாம் அனைவருமே பொறுப்பானவர்கள்.
சுற்றுச்சூழல் தொடர்பான சுயநலமற்ற அதீத கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டாலே இவற்றுக்கு சிறந்த தீர்வாக அமையும்.
பெருந்தொற்றுக்களை வெற்றிகொள்ளும்போது சில முக்கியமான விடயங்களை நாம் கவனிக்கத் தவறுகின்றோம். அதாவது பெருந்தொற்றுக்களின் மூலம் ஏற்படும் நீண்டகால பாதகமான விளைவுகளை ஆகும்.
பெருந்தொற்றுக்களின் குறிகுணங்கள் வெளித்தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அவற்றின் நீண்டகாலத் தாக்கம் மனித உடலில் எவ்வாறானதாக அமையும் என்பது பெரும்???
இவற்றின் தாக்கத்தினால் மூளையில் ஞாபக இழப்பு, சுவாசப்பைகள் தடிப்பு ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இத்தாக்கங்கள் பெருந்தொற்றுக்களில் இருந்து மீண்டபின்னரும் தொடர்கின்றனவா என்பதும், மனித உடலில் உள்ள ஆரோக்கியமான கலங்களில் புற்றுநோய்களை ஏற்படுத்தக் கூடியனவா என்பதும் கேள்விகளாகவும் சந்தேகங்களாகவுமே உள்ளன. இவை பெருந்தொற்றுக்கள் நிகழ்ந்த நாடுகளில் ஆய்வுகளுக்குரியன, முக்கியமாக குறிகுணங்களற்ற தொற்றுக்களில் அவதானம் மிகத்தேவையாகவுள்ளது. ஆனாலும் சுயநலம் மிக்க வர்த்தக உலகில் இவை நடக்குமா? வெளிப்படுமா என்பது கேள்விக்குறியே.
எனவே நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள தொடர்ந்து கூடிக் கொண்டுசெல்லும், எம்மைச் சூழ உள்ள பாதகமான காரணிகளை நீக்கி (உரப்பாவணை, விவசாய செயற்கை பூச்சி கொல்லிகள், பிளாஸ்ரிக்,செயற்கை உணவுச் சேர்க்கைகள், உடற்பயிற்சியின்மை, மரபணுமாற்றங்கள்), "யாதும் ஊரே யாவரும் கேளீர் " என்பதற்கு இணங்க உயிரினப்பலவகைமையைப் பேணி, எம்மைப் பாதுகாக்க சுயநலமாய், பொதுநலமாய் கைகளை கழுவி, முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பேணி , உள்ளூரில் உள்ள இயற்கையான உணவுகளை உண்டு, ஆரோக்கியமாய் வாழ இறைவனை வேண்டுவோம்.
Subscribe to:
Posts (Atom)