Sunday, June 20, 2021

அனைவருக்கும் சர்வதேச யோகா தின #வாழ்த்துகளுடன் கூடிய #கோரிக்கை.

தமிழரின் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்திருந்த யோக பயிற்சிகள் இன்று பெரும்பாலும் யோகா தினத்துடன் நின்றுவிடுகின்றது. 

கல்வித் திணைக்களங்கள் 

பரதநாட்டியம், 

சித்திரம், 

சங்கீதம் 

போன்ற கலைகளுடன் #யோகாவையும்  #பாடவிதானங்களுடன் #இணைப்பதன் மூலம் உடல் உள ஆரோக்கியமான சமூகமொன்றை உருவாக்குவதுடன் வேலைவாய்ப்புக்களையும் உருவாக்கிடலாம்.

Friday, June 18, 2021

தொப்பை குறைய என்ன தடைகள்?

அதிகப்படியான மாப்பொருள் உணவுகள், கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகளே தொப்பை உருவாகவும், குறைக்க முடியாமைக்குமான பிரதான காரணங்களாகும். 

எனவே உணவுகளை உண்ணும்போது அளவோடு மாப்பொருள் உணவுகளை உண்ணுவது நன்று, நார்ச்சத்து நிறைந்த மாப்பொருள் உணவுகள், மரக்கறி வகைகளை கூடுதலாக பயன்படுத்தல் வேண்டும்.

வெளிற்றப்பட்ட, நார்ச்சத்துக்கள் நீக்கப்பட்ட சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் கோதுமை மா - அதுசார்ந்த உணவுகள் (முக்கியமாக பேக்கரி உணவுகள் அனைத்தும். இவற்றில் மறைமுகமாக மிகக் கெட்டகொழுப்பு (Transfatty acid) வேறு காணப்படுகின்றது)

மற்றும் சீனி - அது சார்ந்த உணவுகள், உருளைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகள் என்பனவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இவற்றுடன் கெட்ட கொழுப்புக்களைக் கொண்ட தோலுடன் கூடிய இறைச்சி வகைகள், உறுப்புக்கள், திண்ம கொழுப்புக்கள் என்பவற்றை அதிகப்படியாக உள்ளெடுத்தல் என்பனவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

தனி இறைச்சி (Lean meat), கடல் உணவுகள் சிறந்தன. கடல் உணவுகளில் நிறைவாக நல்ல கொழுப்புக்களே காணப்படுகின்றன. அதேபோல

 எண்ணெய்கொள் விதைகளிலும் (Nuts) அப்படியே. எனவே இவற்றை அளவோடுஉட்கொள்ளலாம்.


தொப்பை என்பது மேற்படி பாதகமான உணவுகள் மூலம் உடலுக்கு மேலதிகமாக கிடைக்கின்ற கொழுப்புக்கள் வயிற்றுப்புற தோலின் கீழும் (Subcutaneous fat), தசைகளின் கீழ் உட்புற உற்புற உறுப்புக்களைச் சுற்றியும் (Visceral fat) படிகின்றன. உட்புற உறுப்புக்களைச் சுற்றி படியும் கொழுப்புக்கள் இதயநோய்கள், சலரோகம், அதிகுருதி அழுத்தம் போன்ற நோய்களை ஏற்படுத்துகின்றன. 

எனவே தொப்பையை குறைப்பது பல நோய்களை

புகைப்பிடித்தல்  உடலின் உட்புற உறுப்பக்களில் கொழுப்புப் (Visceral fat)  படிவதை அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 

மனஅழுத்தம் ஏற்படும்போது உடலில் Cortisol எனப்படும் ஓமோன் அதிகரிப்பினால் கொழுப்பு வயிற்றுப்பகுதியில் படிவதன் மூலம் தொப்பை உருவாகின்றது. இதற்கு யோகா, தியானம் போன்ற உடல்உள பயிற்சிகள் மனஅழுத்தத்தைக் குறைக்கவும், மேலதிக கொழுப்பை குறைக்கவும் உதவுகின்றன.

இவ்வாறான நிலையில்  மருத்துவர் ஒருவரின் உதவியுடன் யோகாவினை மேறகொள்வது நன்று.

யோக பயிற்சி, உடற்பயிற்சி மூலம் தொப்பையை குறைப்பது இலகுவான காரியமன்று. ஓர் ஆணில் 40 inch இற்கு மேற்பட்ட இடுப்பு சுற்றளவும், பெண்ணில் 35 inch இற்கு மேற்பட்ட இடுப்பு சுற்றளவும் இருப்பின் சாதரணமான உடற்பயிற்சியின் நேரம் 21/2 மணித்தியாலங்கள் தினமும் தேவை. கயறு அடித்தல் போன்ற பயிற்சி எனின் குறைந்தது ஒருநாளைக்கு 1 மணித்தியாலங்கள்  தேவை. அதைவிட பொறுமையும், வாயைக்கட்டுதலும் அவசியம். இதற்கான உடற்பயிற்சியானது காற்றோட்டமான இடத்தில் (Aerobic exercise) செய்தல் வேண்டும்.

இவையாவும் மருத்துவர்களின் ஆலோசனையுடன் மேற்கொள்வது அவசியம். 

மென்பானங்கள், மதுவகைகள்  தொப்பை வேகமாக அதிகரிக்கக் கூடியன. இவை ஆரோக்கியத்தின் சத்துருக்கள்.

தாராளமாக நீர் அருந்துதல் தொப்பையை குறைக்கும். ஒருவரது நிறையை (kg) 30 ஆல் பிரித்தால் வரும் தொகைக்கு (Litterஇல்) ஏற்ப ஒரு நாளைக்கு நீர் அருந்துதல் வேண்டும். 

பரம்பரை உடலமைப்பு முக்கியம். பரம்பரையாக பருத்த உடலமைப்பு எனின் அதிகம் கவனம் எடுத்தல் வேண்டும். 

அகால வேளையில் நித்திரை முழித்தல், தொப்பையின் சிறந்த நண்பன். எனவே இரவு 9 -10 இற்குள் நித்திரைக்கு செல்வதை வழக்கமாக கொள்ளவேண்டும். இரவு உணவு உண்டுவதை பி.ப 6 - இரவு 9 இற்குள் அமைத்தலுடன் இரவு  உண்டபின் குறைந்தது 100 அடி நடத்தல் வேண்டும்.

இவற்றை கடைப்பிடிக்கும்போது உடலின் நிறையை, இடுப்புச் சுற்றளவு என்பவற்றை அவதானித்து செயற்படல் வேண்டும்.

Wednesday, June 16, 2021

நரைமுடி Gray hair

மிகப்பெரிய மன அழுத்தத்தைத் தரக்கூடிய ஒன்றாக காணப்படுகின்ற விடயங்களில் ஒன்று நரைமுடி. இன்று இளையோர் மத்தியில் மட்டுமல்லாது பல வயதினரும் உளரீதியாக பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் மட்டுமல்லாது ஆண்கள் கூட பாதிக்கப்படவே செய்கின்றனர்.  

"Pepper and salt style" என்று நினைப்பதற்கு முன்னரே பலருக்கு Pepper காணாமல் போய்விடுகின்றது.

நரையின் விஞ்ஞானம்

மயிர்க் கலங்களில் (Hair follicles) உள்ள மெலனின் (Melenin) எனப்படும் இரசாயணப்பொருளே தலைமயிரின் கறுப்பு நிறத்துக்கு காரணமாகின்றது. 

வயதுடன் இக்கலங்கள் இறக்கும்போது தொடர்ந்து வளரும் தலைமயிர்கள் பழுப்பாகவோ, வெள்ளையாகவோ வளர ஆரம்பிக்கின்றன. 

ஒருபோதும் நரைத்தமயிர் கறுப்பாக மாற்றமுடியாது. சித்த மருத்துவத்தில் ஆரம்ப கட்டத்திலேயே  தலைக்கான சில எண்ணெய் வகைகள் வைப்பதன் மூலம், காயகல்ப  முறையில்   சிகிச்சை மேற்கொள்ளும்போது மேலும் மயிர்க்கலங்கள் இறப்பது குறைக்கலாம் அல்லது  பிற்போடலாம். 

அல்லது தினமும் தமிழர் பாரம்பரிய முறையில் தலைக்கு எண்ணெய் வைத்தல், தலைமுழுகும்போது எண்ணெய்வைத்து முழுகுதல் (சனி நீராடு) என்பனவற்றை கடைப்பிடித்தல். தேவையற்ற இரசாயனங்கள் சேரந்த Shamboo  வகைகளைத் தவிர்த்தல் வேண்டும். 

பொதுவாக தலைமயிர் நரைப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமான காரணகர்த்தா நமது பரம்பரை அலகுதான். பரம்பரை அலகுதான் எவ்வளவு விரைவாக நரைதோன்றலாம் எவ்வளவு வேகமாக தோன்றலாம் என்பதைத தீர்மானிக்கின்றது. பெற்றோர்களுக்கு விரைவாக நரைத்திருந்தால் பிள்ளைகளுக்கும் அதுவே. 

பொதுவாக ஆசிய நாட்டவர்களுக்கு 40 வயதை அண்மிக்கும்போது நரை விழத்தொடங்குகின்றது. இது சிலருக்கு 20, 25 இலும் நடக்கின்றது. 

நரை உருவாக பரம்பரை அலகைவிட வேறு காரணங்கள்.

1. Vitamin B12 குறைபாடு. 

2. தைரொக்சின் குறைபாடு

3. Vitiligo - வெண்குஸ்டம் நோய் நிலையில் 

4. மிகவும் அரிதாக சில புற்றுநோய் நிலைகள்

5. மனஅழுத்தம் வழமையைவிட 3 மடங்கு நரை தோன்றுவதை வேகமாக்குகின்றது.

6. புகைப்பழக்கம் 21/2 மடங்கு நரை தோன்றுவதை வேகமாக்குகின்றது.

7. நரை மயிரை பிடுங்கும்போது மயிர்க்கலங்கள் சிதைவடைகின்றன. அத்துடன் மீண்டும் நரை மயிரே வளர்வதுடன் அவற்றின் வளர்ச்சியும் நீண்டதாக இராது.

இயன்றவரை சாயம் பூசுவதைத் தவிருங்கள், இரசாயனங்கள் குறைந்த இயற்கை தலைமுடி கசாயங்களைப் பாவியுங்கள். 

எனவே வருமுன் காப்போம்.

Friday, May 07, 2021

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்... - மாணிக்கவாசகர்.

நாம் கடந்த கால பெருந்தொற்றுக்கள் மூலமான அனுபவங்களில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்ளும்போது மிகவும் அவதானமாக எதிர்காலத்தை திட்டமிட வேண்டும். சமீபகாலமாக பெருந்தொற்றுக்கள் உலகலாவிய ரீதியில் ஒவ்வொரு ஆண்டும் 2 - 3 பெருந்தொற்றுக்களை எதிர்நோக்கியிருக்கின்றோம், எதிர்நோக்குகின்றோம், எதிர்நோக்கப் போகின்றோம். தற்போதுள்ள பெருந்தொற்று அலை 2, அலை 3 என நீள்கின்றது. எதிர்காலத்தில் வீரியமிக்க ஆபத்துக்களை தோற்றக்கூடிய தொற்றுக்களும் ஏற்படலாம். ஏனெனில் உலக இயங்கியல் ஆனது உலக உயிரினப் பல்வகைமையில் (Biodiversity) மாற்றத்தை ஏற்படுத்தும்போது, நுண்ணுயிரிகளில் விகாரமான மாறுபாடுகள் ஏற்படுவதும் அவை திரிபடைவதும் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது என்பதே உண்மை. இதற்கு பூமியில் உள்ள மனிதர்கள் நாம் அனைவருமே பொறுப்பானவர்கள். சுற்றுச்சூழல் தொடர்பான சுயநலமற்ற அதீத கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டாலே இவற்றுக்கு சிறந்த தீர்வாக அமையும். பெருந்தொற்றுக்களை வெற்றிகொள்ளும்போது சில முக்கியமான விடயங்களை நாம் கவனிக்கத் தவறுகின்றோம். அதாவது பெருந்தொற்றுக்களின் மூலம் ஏற்படும் நீண்டகால பாதகமான விளைவுகளை ஆகும். பெருந்தொற்றுக்களின் குறிகுணங்கள் வெளித்தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அவற்றின் நீண்டகாலத் தாக்கம் மனித உடலில் எவ்வாறானதாக அமையும் என்பது பெரும்??? இவற்றின் தாக்கத்தினால் மூளையில் ஞாபக இழப்பு, சுவாசப்பைகள் தடிப்பு ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இத்தாக்கங்கள் பெருந்தொற்றுக்களில் இருந்து மீண்டபின்னரும் தொடர்கின்றனவா என்பதும், மனித உடலில் உள்ள ஆரோக்கியமான கலங்களில் புற்றுநோய்களை ஏற்படுத்தக் கூடியனவா என்பதும் கேள்விகளாகவும் சந்தேகங்களாகவுமே உள்ளன. இவை பெருந்தொற்றுக்கள் நிகழ்ந்த நாடுகளில் ஆய்வுகளுக்குரியன, முக்கியமாக குறிகுணங்களற்ற தொற்றுக்களில் அவதானம் மிகத்தேவையாகவுள்ளது. ஆனாலும் சுயநலம் மிக்க வர்த்தக உலகில் இவை நடக்குமா? வெளிப்படுமா என்பது கேள்விக்குறியே. எனவே நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள தொடர்ந்து கூடிக் கொண்டுசெல்லும், எம்மைச் சூழ உள்ள பாதகமான காரணிகளை நீக்கி (உரப்பாவணை, விவசாய செயற்கை பூச்சி கொல்லிகள், பிளாஸ்ரிக்,செயற்கை உணவுச் சேர்க்கைகள், உடற்பயிற்சியின்மை, மரபணுமாற்றங்கள்), "யாதும் ஊரே யாவரும் கேளீர் " என்பதற்கு இணங்க உயிரினப்பலவகைமையைப் பேணி, எம்மைப் பாதுகாக்க சுயநலமாய், பொதுநலமாய் கைகளை கழுவி, முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பேணி , உள்ளூரில் உள்ள இயற்கையான உணவுகளை உண்டு, ஆரோக்கியமாய் வாழ இறைவனை வேண்டுவோம்.

Wednesday, August 19, 2020

உப்பு - Salt

ஏன் நாம் உப்பிட்டவரை ஆயுள் உள்ளவரை நினைக்கவேண்டும்? 

எமது ஆரோக்கியத்தில் பெரும்பங்கு வகிப்பது உப்பு. மனித குல முன்னேற்றத்துடன், அதாவது மனிதன் சமைத்துண்ண ஆரம்பித்ததிலிருந்து மனிதனின் உணவின் சுவையில் முக்கிய பங்கினை உப்பு வகித்து வருகின்றது. மனிதனுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களில் ஒன்றான சோடியம் (Na) உப்பினிலே தாராளமாக காணப்படுவதுடன், உப்பினை உணவுடன் நாம் உள்ளெடுப்பதன் மூலம் எமது உடலுக்கு கிடைக்கின்றது. கடுமையான உடல் உழைப்பாளிகளுக்கு சாதாரனமானவர்களை விட உப்புச்சத்து அதிகமாக தேவைப்படுகின்றது. சாதாரணமான ஒருவருக்கு ஒரு நாளைக்கு 5 கிராமிலும் குறைவான உப்பு போதுமானதாக உள்ளது. எனவே ஒருவர் ஆகக்கூடுதலாக 5 கிராம் உப்பு உணவுக்கு சேர்த்துக்கொள்ளலாம். (< 5g / day - அண்ணளவாக ஒரு தேக்கரண்டி). 

  ஏன் நாம் உப்பின் பாவனையை கட்டுப்படுத்த வேண்டும்? 

 பொதுவாக உப்பு கூடுதலாக உணவுடன் உள்ளெடுக்கும்போது, இரத்த அழுத்தம் (Blood pressure) அதிகரிக்கின்றது. அதிலும் இந்த அதிகரிப்பானது வயதுடன் அதிகமாகக் காணப்படுகின்றது. இதனாலேயே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு உப்பு தவிர்க்க அறிவுறுத்தப்படுகின்றது. அத்துடன் உப்பு அதிகமாக உள்ளெடுக்கப்படும்போது, உடலில் இருந்து கல்சியம் ஆனது சிறுநீருடன் வெளியேற்றப்டுகின்றது. இதனால் உடலுக்கு கல்சியத்தின் தேவை அதிகரிக்கின்றது. போதுமான அளவு கல்சியம் உள்ளெடுக்கப்படாதபோது  உடலில் உள்ள கல்சியம் எடுக்கப்படுகின்றது. இதனால் என்பு, என்புமூட்டுக்கள் சம்பந்தமான பிரச்சினைகள் உருவாகின்றன. பொற்றாசியம் உயர்வாக உள்ள உணவுவகைகள் இரத்த அழுத்தத்தை குறைக்கின்றன. 

பழவகைகள், மரக்கறிவகைகளில் பொற்றாசியம் உயர்வாக காணப்படுவதால், மேற்படி உணவுகள் அதிகமாக உட்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றது. இதனாலேயே முன்னோர்கள் உணவுக்கு குறைந்தளவு உப்பினைசேர்த்து உள்ளனர். மேலதிகமாக உப்பு சுவை தேவைப்படுவோர், உணவுடன் உண்கலத்தில் வேறாக வைக்கப்படும் உப்பில் இருந்து சேர்த்துக்கொள்ளலாம். 

இதனை பரராசசேகரம் என்னும் வைத்தியநூலில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. 

" சுத்தியா லமுதந் தன்னைத் துலங்கவே படைத்த பின்பு சுத்தியாஞ் சலமுப் போடு சுவைக்கறி சூழ வைத்துச் சுத்தியால் நெய்வே தித்துச் சூழ்ந்துமுக் கால்நீர் விட்டுச் சுத்தியா போசனங்கள் கொள்வது சுத்தி யாகும்."                -பரராசசேகரம் வைத்தியம். 

சுத்தப்படுத்திய உண்கலத்தில் சோற்றினைப்படைத்து நீர், உப்பு, சமைத்த சுவையான கறிவகைகளை சூழவைத்து நெய்விட்டு, உண்கலத்தை நீரினால் மூன்றுமுறை சுற்றி நீர்தெளித்து உணவை உட்கொள்ளவேண்டும். என கூறப்பட்டுள்ளது. தற்போது உப்பினை குறைத்து பாவிக்க சொல்வதுடன், அயோடின் சேர்ந்த உப்பினை பாவிக்க சொல்லப்படுகின்றது. இதனால் தைரொயிட் தொடர்பான பிரச்சினைகள், குறைபாடுகள் தவிர்க்கப்படுகின்றன. அயோடின் குறைபாட்டால் மனநலகுறைபாடுகள், உடல் வளர்ச்சி, விருத்திக்குறைபாடுகள் ஏற்படுகின்றன. 

  அயோடின் கலந்த உப்பினை எவ்வாறு பபயன்படுத்துவது? 

 கறுத்த, அல்லது கருமைசார்ந்த போத்தல்களில், வெப்பம் தாக்காத இடங்களில் வைத்திருக்க வேண்டும். (அடுப்பில் இருந்து தள்ளி வைத்திருக்கவேண்டும்.) 
அயோடின் கலந்த உப்பினை உணவுடன் சேர்க்கும்முன் நீரினால் கழுவக்கூடாது.
 உணவு அவிந்தபின்னரே அல்லது சமைக்கப்ப்ட பின்னரே உப்பு சேர்க்கப்பட வேண்டும். 

உப்பு பாவனையை எவ்வாறு குறைத்துக்கொள்ளலாம்? 

1. உணவுக்கு சேர்க்கப்படும் உப்பின் அளவினை பகுதத்தல், சரியான அளவுகளில் அளவிடுதல், வேறு சுவையூட்டிகளை சேர்த்துக்கொள்ளல்.

 2. எந்தெந்த உணவுகளுக்கு உப்பு சேர்க்கப்பட்டுள்ளது? என்பதை அறிந்து அதற்கேற்றவாறு உப்பினை சேர்த்துக்கொள்ளல்.

 3. தயாரிக்கப்ட்ட உணவுகளில் சேர்க்கப்ட்ட உப்பின் அளவுகளை சுட்டிகளில் பார்த்து தெரிந்தெடுத்தல். 

4. வியாபார ரீதியாக தயாரிக்கப்பட்ட உணவுகளை தவிர்த்தல். காரணம் உணவு தயாரிப்பின்போது அதிகளவிலான உப்பு சேர்க்கப்படுகின்றது.

 5. குழந்தைகளுக்கு உப்புச் சுவையினை , உப்பினை தாமதமாக அறிமுகப்படுத்தல். 

இப்போது பல பெற்றோர்கள் உப்பினை தாமதமாக அறிமுகப்படுத்துகிறோம் என்று கூறிக்கொண்டு உணவினில் உப்பே சேர்க்காது விடுகின்றனர். அத்துடன் கடைகளில் தாராளமாக உப்புக்கள் சேர்க்கப்பட்ட தின்பண்டங்களை வழங்குகின்றனர், இது தவறு. 

 உப்புப்பாவனையில் எமது தமிழ் சமுதாயம் எவ்வாறு மேம்பட்டு இருந்தது என்பதற்கு பரராசசேகரத்தில் உள்ள பின்வரும் பாடல் உதாரணமாகின்றது. 

" மிக்கவா தர்க்காம் நித்தம் விரும்புகல் லுப்புத் தானும் தக்கவெம் பித்தத் தோர்க்காஞ் சமுத்திர லவணந் தானும் ஒக்குமே சேற்ப னத்தோர்க் குரைத்தவிந் துப்புத் தானும் முக்கணர் விந்தோ டாதி முப்பிணிக் கிந்துப் பீடாம்."    -        பரராசசேகரம் வைத்தியம். 

வாத உடம்பினருக்கு கல்லுப்பும், பித்த உடம்பினருக்குச் சமுத்திர உப்பும், கப உடம்பினருக்கு இந்துப்பும் உகந்தது எனவும், முக்கண் உடைய சிவனினால் படைக்கப்பட்ட, விந்திலிருந்து உருவாகிய மனிதனுக்கு ஏற்படும் அனைத்து பிணிகளுக்கும் இந்துப்பு சிறந்ததாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக தமிழ் மருந்துக்கடைகளில் கிடைக்கும் மேற்படி உப்புக்களை பற்றி தற்போது பெரும்பாலனவர்களுக்கு தெரியாது. 

அத்துடன் பெரும்பாலான சித்த மருத்துவர்கள் அலோபதியை கொள்ளையை அடிப்படையாக கொண்டு மருத்துவம் பார்க்கின்றமையால், வாத, பித்த, சிலேற்பன உடற்தன்மைகளும் அதற்கேற்றாற்பொல மருத்துவம் பார்க்கும் நடைமுறையும் குறைந்து வருகின்றமை எமது அறியாமையையும், பாரம்பரியங்களை பேணுவதில் உள்ள அசிரத்தையையும் காட்டி நிற்கின்றது. இவை ஆய்வுக்குரியன. சரியான முறைகளில் உப்பிட்டிருப்பின் உயிர் உள்ளளவும் நினைப்போம். பாரம்பரியங்களை பேணுவோம், வளமோடு வாழ்வோம்.

Sunday, February 02, 2020

கோரோசனை மாத்திரை

இன்று யாழ் நகரில் உள்ள தமிழ் மருந்துக்கடையில் ஒருவர் பிறந்த குழந்தைக்கு கொடுப்பதற்காக கோரோசனை வேண்டும்போது அவதானித்த விடயம்....
1. அவர் வேண்டியது கோரோசனை மாத்திரை அல்ல. தனியான கோரோசனை.
2. வேண்டிய கோரோசனையும் உண்மையான கோரோசனை அல்ல.
3.அனேகமாக நான் நினைக்கின்றேன் மாட்டின் பித்தம், பச்சைக்கற்பூரம் ,மஞ்சள் சேர்த்தரைத்த போலியானதொன்று.
4.இதன் விலை 10g -350 ரூபா
5. உண்மையான சுத்தமான கோரோசனையின் விலை அனேகமாக 1g -குறைந்தது 2500ரூபாவுக்கு மேல் வரும்.
தயவுசெய்து கடைகளில் குழந்தைகளுக்கான மருந்துகளை மருத்துவர்களின் சிபாரிசு இன்றிவேண்ட வேண்டாம். அரச இலவச வைத்தியசாலைகளை நாடவும். அல்லது பாரம்பரிய சித்தமருத்துவர்களை நாடவும்.

சாதாரன மக்களால் கோரோசனை என்று வழங்கப்படுகின்ற கஸ்தூரி மாத்திரை, யாழ்ப்பாணத்திலே பிள்ளைகள் பிறந்து 40 நாட்களின் பின்னர் கிரந்திக் கொதியெண்ணெய்யுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகின்றது.  இதுகுழந்தைகளை நீராட்டும் நாட்களில்டிசிறப்பாக வழங்கப்படுகின்றது. தற்காலத்தில் காணப்படும் தடுப்பூசி மருந்துகளைப்போன்றே நோய்கள் ஏற்படாதிருக்க வழங்கப்பட்டு வந்திருக்கின்றது. சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் பலவிதமான நோய்நிலைகளில் இது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
கஸ்தூரி,கோரோசனை, குங்குமப்பூ, தாய்ப்பால் என்பவற்றை சேர்த்து செய்யப்படும் இம்மாத்திரை தற்காலத்தில் மேற்கூறிய கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ என்பன சுத்தமானதாகவும் உண்மையானதாகவும் பெற்றுக்கொள்ளமுடியாது உள்ளதினால், “உரை மாத்திரை” எனப்படும் மாத்திரை தற்போது பயன்படுத்தப்பட்டுவருகின்றது.
நோய்வராமல் இருக்கவும், காய்ச்சல், கிரந்தி, மலக்கட்டு, தோடம் போன்ற நோய்நிலைகளில் சித்தமருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்தல் சிறந்தது.

உள நெருக்கீடுகளில் சித்த மருத்துவத்தின் பங்கு.