Friday, October 19, 2012

செகராசசேகரத்தில் வாதரோகங்கள் .... 06


நேத்திர வாதத்துக்கு எண்ணெய்

“தருமருவு நன்னாரிமுத்தக்காசு
தங்குமிருவேலிமுள்ளி சீந்தில்பூலா
திருமருசீதேவியோரி தட்சூதின்வேர்
திருந்துமிலாமிச்சு சிற்றாமட்டிவேரும்
குருமருவுதாமரையின் வளையச்சாறுங்
குலப்பசுப்பாலுடனிளநீர்சாத்தாவாரி
கருமருவுமொசுமொசுக்கை பொன்னாங்காணி
கதித்தகையான்றகரைசதாபலத்தின் சாறே”

நன்னாரி, கோரைக்கிழங்கு, இருவேலி, நீர்முள்ளி, சீந்தில்கொடி, பூலா, சீதேவியார்பூடு, ஓரிதழ்தாமரை, இலாமிச்சை, சிற்றாமட்டி, தாமரைவளையச்சாறு, பசுப்பால், செவ்விளநீர், சாத்தாவாரிச்சாறு, மொசுமொசுக்கைச்சாறு, பொன்னாங்காணிச்சாறு, கையாந்தகரைச்சாறு, எலுமிச்சம்பழச்சாறு, இவைசாறு வகை ஒருகொத்து (600மிலீ) வேர்களை தனித்து எடுத்து.

“சாறுபசுப்பாலிளநீர் புளியோர் கொத்துத்
தனிமிளகு மூன்றுபலமவித்த தண்ணீர்
வீறுபசு நெய்யுடன் கோட்டமேலம்
விளம்பிரு சீரகமரத்தை திற்பல்தான்றி
தேறுபசுங்கிளியூறல் மலையில்வேலி
செண்பகப்பூசதகுப்பை கராம்புவாசி
கூறுகுண்டுரோசனைகுங்குமப்பூசந்நங்
குலவசமோதகம் சாதிமதுரமாமே”

தனி மிளகு மூன்றுபலம் எடுத்து கசாயம் செய்து மேற்கூறிய சாற்றுடனும் இளநீர், பசுப்பாலுடனும் கலந்து இவற்றுடன் பச்சைநெல்லிக்காய், கருங்கோட்டம், ஏலம், கருஞ்சீரகம், நற்சீரகம், சித்தரத்தை, திற்பலி, தான்றி பச்சைக்கிளியூறல், பங்கம் பாளை, செண்பகப்பூ, சதகுப்பை, கராம்பு, வசுவாசி, கோரோசனை, குங்குமப்பூ, சந்தனம், ஓமம், சாதிக்காய், அதிமதுரம், இவை வகைக்கு ஒரு கழஞ்சு.

மதுரசாரக் கிவையொன்றோர் கழஞ்சு வாங்கி
மதிக்கவேருடனரைத்துக் கசாளஞ்சேர்த்து
அதிரவெள்ளினெண்ணெய் கொத்துவிட்டுக்காய்ச்சி
யதைமெழுகு பதமாக வடித்துவார்த்து
முதிரநன்றாய் முழுகிவரிற்றீர் வியாதி
மொழிந்திடுநேத்திர வாதங்கபாலவாதம்
பிதிர் கிரந்தி காசமுடன் கபாலங் கண்ணோய்
பிறங்குகதிர் முன்பனி போற் பிரிந்துபோமே.

வேர்சரக்குகளை தனித்து எடுத்து கல்வத்திலரைத்தும் குங்குமப்பூ தவிர்ந்த மற்றைய சரக்குகளையும் இதனுடன் சேர்த்தரைத்து கற்கமாக எடுத்தல் வேண்டும். இவற்றை முன்கூறிய சாற்றுடன் கலந்து கசாளமாக்கி இளநீர், பால் கலந்து ஒரு கொத்து (600மிலீ) நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி மெழுகு பதத்தில் இறக்கும்போது குங்குமபடபூவையும் சேர்த்து வடிக்க வேண்டும்.
இத்தைலத்தை கிரமமாக தலைக்கு வைத்து முழுகிவர வேண்டும். இவ்வாறு செய்த வர சொல்லப்பட்ட நேத்திரவாதம், கபாலவாதம், கிரந்தி நோய்கள், கண்களில் வரும் காசம், மற்றும் கண் நோய்கள் யாவும் விட்டு நீங்கும். ஒளி விளங்கும் சூரியனின் முன் பனிபோல் மறைந்துவிடும்.

Wednesday, October 17, 2012

“செகராச சேகரத்தில்” வாதரோகங்கள் …… 05


04.நேத்திர வாதம்.
“கண்ணிற்கடுத்துக் குத்திக் கலங்கி நீர்சிவந்து வீழ்ந்து
நண்ணியமுகமுமூக்கும் நயனமும் புறத்தேவாங்கும்
பண்ணிகர் மொழியாற்சற்றே பகர்தலைவலியுமுண்டாம்
எண்ணிநேத்திரவாதத்தின் குணமிதென்றியம்பினாரே”

கண்கள் கடுத்துக்குத்தும், சிவந்து கலங்கி கண்ணீர் வடியும், முகம், மூக்கு கண்ணும் புறத்தில் வலிக்கும். தலைவலியும் உண்டாகும் இவையாவும் நேத்திர வாதகுணங்களாகும் என வைத்திய அறிஞர் இயம்பினார்கள் என்பதை பண்ணினை ஒத்த மொழிபேசும் பாவையே அறிக.

“ஒளிநிறைவிழியிற்குத்தோ டுடன்தலைவலியுண்டாகி
வளமிகுகண்பஞ்சாடி மறைந்து நீர்கடுத்துவீழும்
அளிநிறைகுழலாய் பின்னு மம்பகஞ் சுழித்துவாங்கும்
குளிருநேத்திரவாதத்தின் குணமிதென்றியம்பினாரே.”

ஒளி விளங்குங்கண்களில் குத்துண்டாகும். தலைவலி ஏற்படும், கண் மின்னும், பார்வை தெளிவில்லாது கலக்கமாயிருக்கும், கண்கள் கடுத்து கண்ணீர் வரும், கண்களின் பக்கங்களில் வலியுடன் வாங்கல் ஏற்படும் நேத்திர வாதத்தின் குணங்கள். இவையும் என எடுத்துரைத்தனர் என்பதை வண்டு மொய்க்கும் கூந்தலையுடைய பெண்ணே இதனை அறிந்துகொள்.

நேத்திர வாதத்துக்கு மருந்துகள்
தொடரும்…….

உள நெருக்கீடுகளில் சித்த மருத்துவத்தின் பங்கு.