Thursday, May 25, 2023

சலரோகம் தணிக்கும் மாம்பழ வித்து

 இயற்கையின் படைப்பில் எவ்வளவோ அதிசயங்கள் உள்ளன. அவற்றை உணரும் திறன் பெரும்பாலும் எமக்கு இருப்பதில்லை. உணர்ந்தாலும் இன்றைய வாழ்க்கை முறையில் அவற்றைப் பயன்படுத்துவதும் இல்லை. இயற்கையோடு ஒன்றி வாழ விரும்புவதும் இல்லை.

இன்று உலகில் நீரிழிவின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் எண்ணிக்கையில் மிகவும் அதிகமாகிக் கொண்டு செல்கின்றது. நீரிழிவுக்கு பரம்பரை ஒரு காரணமாகச் சொல்லப்பட்டாலும் உளநலம், உடற்பயிற்சியின்மை, உணவின் மாறுபாடுகள் என்பன பிரதான காரணமாகின்றன. இவற்றை சரிவர பேணுவதுடன் இயற்கையாக பருவகாலத்தில் கிடைக்கும் சில உணவுப்பொருட்களை உரிய முறையில் பயன்படுத்தும்போது சில நோய்நிலைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் அல்லது அவற்றின் தீவிரத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

அவ்வாறான ஒரு பருவாகால உணவுப்பொருளே நாம் அதிகமாக விரும்பி உண்ணும் மாம்பழம். பொதுவாக பழவகைகள் அதிக ஊட்டச்சத்துக்களையும், நார்ச்சத்துக்களையும் கொண்டு பயன் தருபவையாக இருந்தாலும் அவற்றில் உள்ள மாப்பொருளான சுக்ரோஸ் ஆனது மாப்பொருளின் இறுதி விளைவான புரக்டோசையும் குளுக்கோசையும் தருவதால் இவை அளவுக்கு அதிகமாகும்போது பல உபத்திரவங்களைத் தருகின்றன. குறிப்பாக உடற்பருமன், கொலஸ்திரோல், அதிகுருதி அழுத்தம், நீரிழிவு போன்ற தொற்றா நோய் நிலைகளில் மிகவும் பாதிப்பைத் தருகின்றன. அதிகளவு இனிப்பான பழங்களில் குளுக்கோசும் அதிகளவு இருக்கும். எனவே பருவகாலங்களில் பழங்களை உண்ணும்போது  தேவைக்கு ஏற்ற அளவில் அளவாக உண்ணுதல் வேண்டும்.

பழங்கள் உபத்திரவங்களைத் தந்தாலும் அவற்றின் வித்துக்கள் அவற்றின் உபத்திரவங்களைக் குறைக்கக் கூடியனவாகவே காணப்படுகின்றன. அவ்வாறான ஒரு நிலையே மாம்பழத்திலும் மாம்பழ வித்திலும் காணப்படுகின்றன. இது தொடர்பில் யாழ்ப்பாண சித்தமருத்துவ நூலான அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணியில் மாம்பழத்தின் நன்மை தீமைகள் தொடர்பில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

மாம்பிஞ்சு - பழம் - காய் - பூ - வித்து

"வாகுள மாவின் பிஞ்சு வாதமை பித்த மாற்றும்

பாகமாங் கனிக ரப்பன் பகர் வாதம் பித்தந் தானும்

ஆகுங்காய் கிரந்தி வாத மாம்பூவித் திற்கு மந்தம்

ஆகமார்கிராணி வாயு வதிசாரஞ் சலரோ கம்போம்" 

மாவின் பிஞ்சானது  வாதம், பித்தம், கபம் என்று சித்தமருத்துவத்தில் கூறப்பட்டுள்ள உடல் இயக்கத்துக்கு ஆதாரமாக உள்ள உயிர்த்தாதுக்களின் செயற்பாடுகளை சீராக்கி ஆரோக்கியத்தைத் தரும்.

மாம்பழத்தை அளவுக்கு அதிகமாக, தொடர்ச்சியாக  எடுக்கும்போது தோல் நோய்களை ஏற்படுத்துவதுடன் அல்லது அவற்றினைத் தூண்டுவதுடன் வாதம், பித்தம் ஆகிய உயிர்த்தாதுக்களை கேடடையச் செய்து  போன்ற பல்வேறு நோய்கள் (அஜீரணம், மூலம், நீரிழிவு, ஆஸ்துமா. கொலஸ்திரோல்....) ஏற்படுவதற்கு காரணமாகின்றது.

மாங்காய் ஆனது மாம்பழத்தைப் போன்று கிரந்தி போன்ற ஒவ்வாமைகளையும் வாதத்தினையும் அதிகரிக்கும்.

மாம்பூ, மா வித்து என்பன சாதாரணமாக உட்கொள்ளப்படுவதில்லை. ஆனால் இவை சிறந்த மருத்துவகுணங்களைக் கொண்டவை. மருத்துவர்களின் ஆலோசனையின் கீழ் தூளாகவோ, குடிநீராகவோ பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும். இவற்றுக்கு பசியின்மை, அஜீரணம், கழிச்சல் பொன்ற உபத்திரங்கள், வயிற்றுப்பொருமல், உடலில் குத்துழைவு, உடலில் வாயு சேரல், சலரோகம் என்பன கட்டுப்படும். இங்கு உணவின் சீரான சமிபாடு அவற்றின் அகத்துறிஞ்சல் என்பன சீராக்கப்படுகின்றன. 

எனவே பருவகாலங்களில் கிடைக்கக்கூடிய மாம்பூ, மா வித்து போன்றவற்றை சேகரித்து தகுந்த மருத்துவ ஆலோசனையின் கீழ் பயன்படுத்தி பயன்பெறுவது ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும். இவ்வாறு பருவகால உணவுகளை வற்றல் செய்துவைத்து ஆண்டு முழுவதும் பயன்படுத்துவார்கள்.  இவ்வாறு மாங்காய் வற்றல் செய்து பயன்படுத்தும்போது கிடைக்கும் பயன்கள் பற்றி கூறும் பாடல்,

 "தாகமே யுழலை பித்தந் தளருமூத் திரக்கி ரிச்சி

சோகமார் வரட்சி வெம்மை துகளுறு மபான ரோகம்

வேகமார் புண்க ளன்றி விளம்பிடு வாத மெல்லாம்

போகுமா மாங்காய் வற்றல் புசித்தவர் தமக்கு மாதோ" 

மாங்காய் வற்றல் உண்டவர்களுக்கு தாகம், எரிவு, போன்ற பித்த தோசத்தால் ஏற்படும்  சிறுநீர்ப் பிரச்சினைகள், உடல் வரட்சி, உடற்சூடு, மூலரோகம், வாத ரோகங்கள் என்பன தீரும்.

இவ்வாறான பல நன்மைகள் கொண்ட மாங்காய் வற்றல் சேர்ந்த சொதி, குழம்பு வகைகளை உண்ணும், நமது பாரம்பரிய உணவுப்பழக்கம் அருகிவருதல் நமது ஆரோக்கியத்துக்கு கேடுதரும் ஒரு விடயமாகும். இங்கு புளிக்குப் பதிலாகவே மாங்காய் வற்றல் பயன்படுத்தப்படுகின்றது. பழப்புளி பெரும்பாலும் நோய் நிலைகளில் அபத்தியப்பொருளாகவே காணப்படுகின்றது. இந்நிலைகளில் மாங்காய் வற்றில் சிறந்ததொரு மாற்று தேர்வாகவும் இருக்கும்.

Monday, February 20, 2023

நீரிழிவும் (Type II Diabetes) ஆவரசும் Cassia auriculata

நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்கள் ஆவரசின் பாகங்களையோ சம்மூலமாகவோ பயன்படுத்தி சிறந்த பலனைப்பெறலாம். பொருளாதார நெருக்கடியில் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எமது பிரதேசங்களில் இலகுவாக இயற்கையாகக் கிடைக்கும் ஆவரசு மூலிகையின் பயன்களை பெற்றிடல் நன்று.

காரைநகர், பொன்னாலை, கல்லூண்டாய் பகுதிகளில் தாராளமாகக் கிடைக்கின்றது. சித்தமருத்துவ வைத்தியசாலைகளில் கூட நிரிழிவுக்கான மருந்துகள் பொருளாதார நெருக்கடியில் விலை அதிகரிப்புக்களால் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்ற நிலையில் உரிய அவ்வப் பிரதேச  மட்டத்தினர் இதனைக் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

கீழே காணப்படும் குறிப்புகள் விழிப்புணர்வுக்காகவே  அன்றி.  சுயமருத்துவத்துக்கானது அல்ல. ரோகிபலம், ரோகபலம் என்பவற்றினைப் பொறுத்து  சித்தமருத்துவர்களின் ஆலோசனையுடன் கிழ்வரும் திருக்குறள் வழி நடந்து பயன் அடைந்திடுவோம்.

"உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று

அப்பால் நாற்கூற்றே மருந்து"

 மருந்து என்பது, நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து அல்லது அருகிருந்து கொடுப்பவன் என நான்கும் சேர்ந்ததே மருந்தாகும்.

"ஆவாரை பூத்திருக்க சாலாரைக் கண்டதுண்டோ" என்பது சித்தர் வாக்கு.

ஆவாரை ஓர் காயகற்ப (Antioxidant) மூலிகை

ஆவரசுப் பஞ்சாங்கம் - இலை, பூ, பிஞ்சு, பட்டை, வேர்

யாழ்ப்பாண நூலான அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணியில் ஆவரசு....

"மேகங்கண் ணோயே தாகம் விரைசல ரோகம் மூல

ரோகமே பயித்தி யத்தை யோட்டுமா வரைப்பஞ்சாங்கம்.."

தாகத்துடன் கூடிய அதிகமாக சிறுநீர்கழியும் சலரோகம், மூல ரோகம் மற்றும் வெயில் காலத்தில்  பித்த அதிகரிப்பினால் ஏற்படும் வெப்பு நோய்கள் என்பவற்றை ஆவாரைப் பஞ்சாங்கம் நீக்கும்.

பெரும்பாலும் ஆவரசின் பூ, இலை, காய், மொட்டு என்பனவே இவற்றினைச் செய்யும். ஆவரசம் பூ, மொட்டு என்பனவற்றின் தூள் கொண்டு தயாரிக்கப்படும் குடிநீர் இந்நோய்களில் இருந்து பாதுகாக்கும். 

நீரிழிவு தொடர்பான ஏடுகளில் இருந்து தொகுக்கப்பட்ட மேகவாகடத்திரட்டு என்னும் நூலில் ஆவரசு 

"சொல்லுதற்கு மட்டோ தொலையாத மேகநீர்

எல்லாமொ ழிக்கு எரிவகற்று - மெல்லவச

ஆவாரைப் பம்பரம்போ லாட்டு தொழில் அணங்கே

ஆவாரை மூலியது" 

நீரிழிவு உட்பட அனைத்து மேகரோகங்களில் ஏற்படும் அடிக்கடி சிறுநீர் கழிதல், உடல் எரிவு (பாத எரிவு) என்பன போக்கும்.

சித்தமருத்துவ நூலான பதார்த்தகுண சிந்தாமணியில் ஆவரசும் பூ, ஆவரசுப் பஞ்சாங்கம்.

"தங்க மெனவே சடத்திற்குக் காந்திதரு

மங்காத நீரை வறட்சிகளை - யங்கத்தா

மாவைக் கற்றாழை மணத்தை யகற்றிடும்

பூவைச் சேராவாரம் பூ" 

உடலுக்கு குளிர்ச்சி தந்து உடலை அழகாக்கும். அடிக்கடி சிறுநீர்கழிதல், நாவரட்சி, உடலில் ஏற்படும் கெட்ட நாற்றத்தினை ஆவரசம் பூ அகற்றிடும்.

"மேகத்தினாலே விளைந்த சலம் வெட்டையன

லாகத்தின பண்ணோ யருங்கிரணி - போகததால்

ஆவாரைப் பஞ்சகங்கொ ளத்திசுரந் தாகமும்போ

மைவாரைக் கண்மட மாதே" 

நீரிழிவினால் ஏற்படும் சிறுநீர் கழிதல், வெள்ளை சாய்தல் மற்றும் உடற்சூடு, சில வகை நாட்பட்ட கழிச்சல், என்புச் சூடு, தாகம் என்பன போகும்.

உள நெருக்கீடுகளில் சித்த மருத்துவத்தின் பங்கு.