நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்கள் ஆவரசின் பாகங்களையோ சம்மூலமாகவோ பயன்படுத்தி சிறந்த பலனைப்பெறலாம். பொருளாதார நெருக்கடியில் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எமது பிரதேசங்களில் இலகுவாக இயற்கையாகக் கிடைக்கும் ஆவரசு மூலிகையின் பயன்களை பெற்றிடல் நன்று.
காரைநகர், பொன்னாலை, கல்லூண்டாய் பகுதிகளில் தாராளமாகக் கிடைக்கின்றது. சித்தமருத்துவ வைத்தியசாலைகளில் கூட நிரிழிவுக்கான மருந்துகள் பொருளாதார நெருக்கடியில் விலை அதிகரிப்புக்களால் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்ற நிலையில் உரிய அவ்வப் பிரதேச மட்டத்தினர் இதனைக் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
கீழே
காணப்படும் குறிப்புகள் விழிப்புணர்வுக்காகவே
அன்றி. சுயமருத்துவத்துக்கானது அல்ல.
ரோகிபலம், ரோகபலம் என்பவற்றினைப் பொறுத்து சித்தமருத்துவர்களின் ஆலோசனையுடன் கிழ்வரும் திருக்குறள்
வழி நடந்து பயன் அடைந்திடுவோம்.
"உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து"
"ஆவாரை பூத்திருக்க சாலாரைக் கண்டதுண்டோ" என்பது சித்தர் வாக்கு.
ஆவாரை ஓர் காயகற்ப
(Antioxidant) மூலிகை
ஆவரசுப் பஞ்சாங்கம் - இலை, பூ, பிஞ்சு, பட்டை, வேர்
யாழ்ப்பாண நூலான அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணியில் ஆவரசு....
"மேகங்கண் ணோயே தாகம் விரைசல ரோகம் மூல
ரோகமே பயித்தி யத்தை யோட்டுமா வரைப்பஞ்சாங்கம்.."
தாகத்துடன் கூடிய அதிகமாக சிறுநீர்கழியும் சலரோகம், மூல ரோகம் மற்றும் வெயில் காலத்தில் பித்த அதிகரிப்பினால் ஏற்படும் வெப்பு நோய்கள் என்பவற்றை ஆவாரைப் பஞ்சாங்கம் நீக்கும்.
பெரும்பாலும் ஆவரசின் பூ, இலை, காய், மொட்டு என்பனவே இவற்றினைச் செய்யும். ஆவரசம் பூ, மொட்டு என்பனவற்றின் தூள் கொண்டு தயாரிக்கப்படும் குடிநீர் இந்நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
நீரிழிவு தொடர்பான ஏடுகளில் இருந்து தொகுக்கப்பட்ட மேகவாகடத்திரட்டு என்னும் நூலில் ஆவரசு
"சொல்லுதற்கு மட்டோ தொலையாத மேகநீர்
எல்லாமொ ழிக்கு எரிவகற்று - மெல்லவச
ஆவாரைப் பம்பரம்போ லாட்டு தொழில் அணங்கே
ஆவாரை மூலியது"
சித்தமருத்துவ நூலான பதார்த்தகுண சிந்தாமணியில் ஆவரசும் பூ, ஆவரசுப் பஞ்சாங்கம்.
"தங்க மெனவே சடத்திற்குக் காந்திதரு
மங்காத நீரை வறட்சிகளை - யங்கத்தா
மாவைக் கற்றாழை மணத்தை யகற்றிடும்
பூவைச் சேராவாரம் பூ"
உடலுக்கு குளிர்ச்சி தந்து உடலை அழகாக்கும். அடிக்கடி சிறுநீர்கழிதல், நாவரட்சி, உடலில் ஏற்படும் கெட்ட நாற்றத்தினை ஆவரசம் பூ அகற்றிடும்.
"மேகத்தினாலே விளைந்த சலம் வெட்டையன
லாகத்தின பண்ணோ யருங்கிரணி - போகததால்
ஆவாரைப் பஞ்சகங்கொ ளத்திசுரந் தாகமும்போ
மைவாரைக் கண்மட மாதே"
நீரிழிவினால் ஏற்படும் சிறுநீர் கழிதல், வெள்ளை சாய்தல் மற்றும் உடற்சூடு, சில வகை நாட்பட்ட கழிச்சல், என்புச் சூடு, தாகம் என்பன போகும்.
No comments:
Post a Comment