2000 ஆம் ஆண்டில் எனது சித்தமருத்துவ கற்கையின் இரண்டாவது
ஆண்டில் குருவாக அறிமுகமானவர் பரம்பரை முதுநிலை
விரிவுரையாளர் சித்தமருத்துவர் பொன்னம்பலம் இராமநாதன் (அவர்கள்.
2000
ஆண்டின் ஆரம்பத்திலேயே அவரது "சித்த மருந்து முறையியல்" என்னும் நூலும் என்னுடன்
இணைந்து கொண்டது. இன்று வரை எனது கைக்கெட்டிய தூரத்திலேயே அந்நூலானது இருக்கின்றது.
நூல்களை பணம் கொடுத்து வேண்டுவது அரிதான இன்றைய காலத்தில் எமது விரிவுரையாளரின் நூல்
இரண்டாம் பதிப்பும் பெற்றது. 1987 இல் வெளியான அவரது முதல் நூலான "சித்த ஆயுள்வேத
மருத்துவ உத்தியோகத்தர்கட்கான கைந்நூல்" கூட முதற்பதிப்பு 1987, 1994 என இரண்டு
பதிப்புக்களைக் கண்டது.
காலை
வேளை சீரான வேகத்தில் வரும் மோட்டார் சைக்கிளில் வந்திறங்கும் ஆசான், மோட்டார் சைக்கிளிலோ,
அவரிலோ காணப்படும் தூய்மை அவர்மீதான ஈர்ப்புக்கு முதற்படி. நிதானமாக மோட்டார் வண்டியை
நிறுத்தி தலைக்கவசத்தை உரிய இடத்தில் வைத்து, அலுவலக பையினுள் இருக்கும் சீப்பினை எடுத்து, நன்றாக
எண்ணெய் வைத்து வாரப்பட்ட தலையை மீள அழகாக வாரிக்கொண்டு அவர் நடந்து வரும்போது அவரது
முகத்தில் திருநீற்றுடன் தவழும் அந்தப்புன்னகை! சில வேளைகளில் எங்களைக் காணும்போது
சிரிக்கும் ஓர் நமுட்டுச் சிரிப்பு... ஈர்ப்பின் அடுத்தபடி...
அவரது
நூல்களில் தேடியும் பிடிக்க முடியாத எழுத்துப்பிழைகள், கனதியான புத்தக மட்டைகள், மருந்துகள்
செய்வது தொடர்பில் ஒரு மாணவனுக்கு அல்லது மருத்துவனுக்கு சந்தேகம் எழ முடியாதவாறான
நூல் உருவாக்கம் என்பன நூலின் பெறுமதியாகும். நான் வைத்திருக்கும் புத்தகங்களிலேயே
அதிகம் பார்த்து அழுக்கேறி சிதைந்தது "சித்த மருந்து துறையியல்" நூலாகத்தான்
இருக்கும்.
கற்பித்தல்,
மருந்துகளை செய்வித்தல் என எல்லாவற்றிலும் தூய்மையும் நேர்த்தியும் ஓர் ஒழுங்கும் இருக்கும்.
செய்யும் மருந்துகளைப் பதியும் பதிவேட்டில் உள்ளே இருக்கும் மருந்து செய்முறைப் பதிவுகள்
மட்டுமன்றி பதிவேட்டின் வெளிமட்டை அதற்கான உறைவரை அழகாக இருத்தல் வேண்டும். இரசனை மிக்கவர்.
"ஐசே
உம்முடைய பதிவேடு பார்த்தேன் அழகாக இருக்கின்றது" மனதினுள் மகிழ்ச்சி ஆனாலும்
அவரது நமுட்டுச் சிரிப்பினில் தெரிந்த நக்கல் என் அகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை முகத்தில்
தெரிவிக்க, "பயப்படாதையும் நல்லாத்தான் இருக்கு பதிவேட்டின் வெளிமட்டையின் உறை.
அந்த இரசனை உள்ளுக்கும் இருக்கவேணும்"
எனக்கு
விளங்கியது நான் பதிவேட்டுக்குப் போட்ட உறையில் முழுப்பகுதியும் ஓர் பெண்ணின் முகம்
இருக்கத்தக்கவாறு போட்டிருந்ததைக்கூட அவர் அவதானித்ததை. அன்றிலிருந்து பதிவேடு என்னால்
மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் செய்துகொண்டேன். விளைவு இரண்டாம் வருட முடிவில்
அப்பதிவேட்டை அவரே தன்னிடம் இருக்கட்டும் என்றார்.
பின்னாளில்
திருகோணமலையில், கப்பல் துறை மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையில், கிழக்கு மாகாண சுதேச மருந்து உற்பத்தி மையத்தில்
மருந்துகள் புதிதாக செய்யும் போது அவற்றின் மாதிரிகளை யாழ்ப்பாணம் வரும்போது அவரிடம்
கொண்டுசென்று காட்டிக்கொள்வேன். அவரது முகத்தில் திருப்தி தெரியும் கொடுத்த மாதிரிகளை
திருப்பி திருப்பி பார்த்துக் கொள்வார். அன்று நான் ஏதோ சாதித்ததைப் போன்ற உணர்வு ஏற்படும்.
1973 - 1976 வரை இலங்கா சித்தாயுர்வேதக் கல்லூரியில் விரிவுரையாளர்
1988
-1987 வரை உள்ளூராட்சி சேவை வைத்தியசாலைகளில் மருத்துவ
அதிகாரி
1988 - 1991 வரை இந்தியாவில் சித்தமருத்துவத்தில் MD பட்டப்படிப்பு
1992 - 1997/04 வரை யாழமாநகர சபையில் பிரதம சித்தமருத்துவ அதகாரி
இக்காலத்திலேயே (1992-1997/04) நாட்டின் போர்க்கால
சூழ்நிலையில் ஏற்பட்ட மருந்துகள் தட்டுப்பாட்டை நீக்க யாழ் மாநகர சபையிலேயே சித்தமருத்துவப்
பிரிவில் மருந்துற்பத்தி பகுதியை உருவாக்கி தரம்மிக்க மருந்துகளை உற்பத்தி செய்தனர்.
அவற்றின் அனுபவம் அவரது நூலின் ஒவ்வொரு சொல்லிலும் தெரியும்.
இன்றுவரை (2024) யாழ் மாநகர சபையில் சித்தமருந்துகள் உற்பத்தி தொடர்கின்றது. உண்மையில் இக்காலப்பகுதி யாழ் மாநகர சபையில் சித்தமருத்துவப் பகுதியின் பொற்காலமாகும்.
1997/5 - இருந்து ஓய்வு பெறும் வரை சித்தமருத்துவத் துறையில் முதுநிலை விரிவுரையாளராக இருந்தார் ஆசான் பொன் இராமநாதன் ஐயா அவர்கள். பாரம்பரிய மருத்துவரான (பரமு சித்த வைத்தியசாலை, தாவடி) ஆசானின் அனுபவம் அறிவு பட்டப்படிப்புக்களின் மெருகூட்டல் யாழ் பல்கலைக்கழக சித்தமருத்துவ அலகுக்கு ஒரு வரப்பிரசாதமே.
மூன்றாம்
வருடம் சித்த தத்துவங்கள் கற்பித்தலில், உண்மையில் எங்களை சித்தத்துங்களின்பால் கவர்ந்து
வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்தியவர்.
"ஐசே
எல்லாருக்கும் கொஞ்ச கொஞ்ச மனக்கிலேசம் ஒவ்வொன்றிலும் இருக்கும். அது எல்லோருக்கும்
இருக்கிற அளவில் இருந்தால் அவர் சாதாரணமானவர். கூடிக்குறைந்து இருந்தால் சித்தன் இல்லை
பித்தன்."
"தாமரைப்
பூவைப்பாரும் நன்றாக இரசியும். இவ்வளவு அழகின் இரகசியம் என்ன என்று தண்ணீருக்குள் கையை
விட்டால் நாற்றமுள்ள சேற்றுக்குள்தான் கை போகும்."
இப்படி
பல தத்துவங்களை சித்த தத்துவங்களுடன் சேர்த்து நகைச்சுவையாகத் தருவார்.
"ஊரெல்லாம் கூடி உரக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே"
- திருமந்திரம்
"திருமந்திரத்தில்
இலகுவாக அனைவருக்கும் விளங்கக்கூடிய பாடல் இது, ஏன் தெரியுமோ?
எதுவும்
நிரந்தரமில்லை என்பதை எல்லோரும் விளங்கிக்கொள்ள வேண்டும் என்று திருமூலர் நினைத்திருக்கின்றார்.
நாளைக்கு
எனக்கும் இதுதான் உமக்கும் இதுதான்"
நீங்கள்
கூறிய வார்த்தை உங்களுக்குப் பொருந்தாது நாங்கள் இருக்கும்வரை, உங்கள் நூல்கள் இருக்கும்
வரை, ஈழத்தில் சித்தமருத்துவம் இருக்கும் வரை நிலைத்திருக்கும் உங்கள் புகழ் நிலைத்திருக்கும்
சேர்.
உங்கள்
ஆத்மா சிவன்கழல் சேர்ந்து மீண்டும் பிறப்பில்லாப் பேரின்பம் பெற எல்லாம் வல்ல சிவனிடம்
வேண்டிக்கொள்கின்றேன்.
மாணவன் சித்தமரு.தியாகராஜா சுதர்மன்
No comments:
Post a Comment