இலங்கையின் சுதேச மருத்துவ முறைகளுள் சித்த மருத்துவமும் ஒன்றாகும்.சித்தமருத்துவமானது தமிழ்மக்களால் பயன்படுத்தப்பட்டு வருவதால் இதனை தமிழர் மருத்துவம் எனவும் கூறப்படுகின்றது.
சித்தமருத்துவத்தின் வரலாற்றினை பார்க்கையில் சித்தமருத்துவமானது ஆரம்பத்தில் சிவபெருமானால் உமையம்மையாருக்கு கூறப்பட்டதாகவும், உமையம்மையார் அதனை முருகனுக்க கூற, முருகன் அதனை அகத்தியர், திருமூலர் முதலான சித்தர்களுக்கு உபதேசித்ததாகவும், இச்சித்தர்களே உலகில் சித்த மருத்துவத்தை பரப்பியதாகவும் கூறுவர். சிவபெருமான் உமாதேவியாருக்கு கூறும்போது நந்திதேவர் அதனை கேட்டு அகத்தியர், திருமூலர் போன்றவர்க்கு கூறியதாகவும் வரலாறு உண்டு.
சித்தமருத்துவமானது பாரதத்தின் (இந்தியா) தென்பகுதிகளான தமிழ்நாடு, கேரளம் ஆகிய பகுதிகளிலும் பாரதத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள இலங்கையிலும் காணப்படுகின்றது. அதாவது குமரிக்கண்டத்தின் தென்பகுதிகளான தமிழ்நாடு, கேரளம், இலங்கை ஆகிய நாடுகளில் சித்தமருத்துவம் பயன்பாட்டில் உள்ளது.
இலங்கையை ஆண்ட இராவணன் சிறந்த சிவபக்தனாக மடடுமன்றி சிறந்த வைத்தியனாகவும் இருந்துள்ளான். சிவபெருமானால் சித்தர்களுக்கு அருளப்பெற்று சித்தர்களால் பின்பற்றப்பட்டு வந்தமையினால் சித்தர் மருத்துவம் எனவும், தமிழ்கடவுளாகிய முருகனால் அகத்தியர், திருமூலர் போன்றவர்க்கு சொல்லப்பட்டு தமிழர்களால் பின்பற்றப்பட்டு வந்தமையினால் தமிழ் மருத்துவம் எனவும் அழைக்கப்படுகின்றது.
ஆதிகாலத்தில் சித்தமருத்துவமானது இலங்கை முழுவதும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதற்கு பல சான்றுகள் உள்ளன. பொலனறுவையில் அமைந்துள்ள பொற்கல் விகாரையில் சித்தமருத்துவத்தின் தந்தை என்றழைக்கப்படும் அகத்திய முனிவரின் சிலை காணப்படுகின்றது.
15ம் நூற்றாண்டில் சிங்களத்தில் ஆக்கப்பட்ட "வைத்திய சிந்தாமணி பைசாஜ் சங்கிரகம்"(Vaidyacindamani bhaisadya) என்னும் நூல் "வைத்திய சிந்தாமணி" எனும் தமிழ் மருத்துவ நூலை தழுவி எழுதப்பட்ட நூலாகும் என்ற கருத்தும் உள்ளது.
சித்த மருத்துவம் கூறும் நவநாத சித்தர்களுள் ஒருவரான கோரக்கர் திருகோணமலையில் சித்தயடைந்தார் என்பதும் கவனத்திற்கொள்ளத்தக்கது. பதினெண் சித்தர்களுள் ஒருவரான புலத்தியர் சிங்கள நாட்டை சேர்ந்தவரென குறிப்பிடப்படுகின்றது. இங்கு சிங்கள நாடு என்பது இலங்கையாகும். அத்துடன் யாழ்ப்பாண மன்னன் பரராஜசேகரனின் மகன் பரநிருபசிங்கன் சிறந்த மருத்துவனாக திகழ்ந்துள்ளான்.
எனினும் பிற்பட்ட காலத்தில் சித்தமருத்துவமானது இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதிகள்லேயே பெருமளவு கையாளப்பட்டு வரப்படுகின்றது. அதிலும் இலங்கையில் சித்தமருத்துவத்தின் தாயகம் யாழ்ப்பாணமாக விளங்குகின்றது என்று கவிப்புயல் நவரத்தினம் அவர்களும், சித்த மருத்துவமானது அதன் தூய்மையுடனும் தனித்துவத்துடனும் யாழ்ப்பாணத்தில் இன்றுவரை கையாளப்பட்டு வரப்படுகின்றது என்று பேராசிரியர் உரகோட அவர்களும் எடுத்து கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இவற்றுடன் சோழ இழவரசியான மாருதப்புரவள்ளியின் புற்றுநோயை குணப்படுத்தியதும் இதனால் யாழ்ப்பாணத்தில் முருகனுக்கு கோயில் கட்டியும், கதிர்காம யாத்திரையை முருகன் அருளால் தொடங்கி கதிர்காம இயந்திரத்தை ஸ்தாபித்தவர் பதினெண் சித்தர்களுள் ஒருவரான போகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனாலேயே அங்கு இன்றும் மூலிகைச்சந்தை காணப்படுகின்றது.
முக்கியமாக கடலிராஞ்சிப்படடை, மரமஞ்சள், புலிநகம், சீந்தில், செஞ்சந்தனம், உருத்திராட்சை என்பன பெருமளவில் காணப்படுகின்றது. அத்துடன் சித்தமருத்துவ யாழ்ப்பாண நூலான பரராஜசேகரத்தில் " மருந்து மாத்திரைகள் பிழைத்தால் கதிரைமலை மேவு முருகனை வணங்கிட அந்நோய்கள் மாறிடும்" என்று நூலின் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பல வழிகளிலும் இலங்கையில் கானப்பட்ட சித்தமருத்துவம் காலப்போக்கில் தமிழர் அதிகமாக வாழும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களிற்கு மட்டுப்படுத்தப்பட்டு இங்கு வாழ்ந்த மன்னர்களாலும், மக்களாலும், சித்தமருத்துவர்களாலும் பேணி வளர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வலுவான சித்தமருத்துவ பாரம்பரியம் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று அதன் ஆழமான அறிவினைப்பெற்றுக்கொண்டோர் எத்தனைபேர் என்பது கேள்விக்குறியே.