Tuesday, March 11, 2008

சித்தர்கள் பார்வையில் ஆரோக்கியம்.....

சித்தர்கள் தெய்வ அருள் பெற்றவர்கள். இல்லறமோ, துறவறமோ மனிதன் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவேண்டும் என்பவர்கள். இதனை திருமூலர் திருமந்திரத்தில்,
"உடம்பால் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே"
என்கிறார்.
இதற்காக சித்தர்கள் பல வழிகளை கூறிச்சென்றுள்ளார்கள். காயகற்பம், முப்பு, பிராணாயாமம், யோகாசனம் என்பன அவற்றுட் சில.
இதனை அடிப்படையாக கொண்டே சித்த மருத்துவம் காணப்படுகின்றது. அதாவது நோய் வருமுன் காத்தல் (Primary prevention). ஆனால் இன்றைய காலகட்டத்தில் மக்களின் அன்றாட நடவடிக்கைகளும், உணவுப்பழக்கவழக்கங்களும், போட்டித்தன்மைகளும் நோய் வருமுன் காத்தல் என்பதற்கு பெரும் சவாலாக உள்ளன. இவ்வாறன வேளையிலும் நோய்வந்த பின்னர் மக்களிடம் உள்ள விழிப்புணர்வின்மையால் உரிய மருத்துவத்தை நாடுவதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். இறுதியாக சித்தமருத்துவத்தை குறிப்பிட்ட நோய்களிற்கு நாடும் பொழுதும் குழப்பத்தை விளைவிக்கிறது அவர்கள் எதிர்பார்க்கும் "உடனடித்தீர்வு".
ஆரோக்கியமாக வாழ்வதற்கு "உணவே மருந்து" என்பது சித்தர்களின் கூற்று. இதனையே திருக்குறளில் திருவள்ளுவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார்,
"மாறுபாடில்லா உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடில்லை உயிர்க்கு"
இதனை கீழ்வரும் சித்தர் பாடலும் இவ்வாறு விளக்குகின்றது.
"நோயனுக்குப் புத்தி நுவலுவேன் உண்டதற்ற
காய மறிந்து கடைப் பிடித்துத் - தீயலதை
உண்கப் பசிமிகுதி யுற்றதறி ந்தானக்காலி
அண்கற்ப நல்லுறுதியாம்"
தேவையான அளவு உணவினை தேவையான நேரத்தில் எடுக்காது விடில் அல்லது மேலதிகமாக எடுக்கும் போது நோய் ஏற்படுகின்றது. இவ்வாறு நோய் ஏற்படினும் ஆரோக்கியத்தைப்பேணிக்கொள்ள படிப்படியாகவே மருந்துகளை பிரயோகிக்கும்படி கூறியுள்ளார்கள். ஆனால் இன்று ????. இதனை பின்வரும் கூற்று விளக்கும்.
"வேர்பார் தழைபார் மிஞ்சினாற்கான்
பஸ்பசெந்தூரம் பார்"
அதாவது படிப்படியாகவே மருந்துகளின் வீரியத்தை கூட்டச்சொல்லியிருக்கிறார்கள்.
ஆரோக்கியத்தை மேம்படுத்த உணவு எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு உடற்பயிற்சி முக்கியமானதாகும். இத்துடன் மனம் நன்நிலையில் இருத்தல் மேலும் அவசியமாகும். மனம் நன்நிலையில் இருத்தல் வேண்டும் என்பதை பின்வரும் சித்தர் கூற்று மூலம் அறிந்துகொள்ளலாம்.
"விரும்பியது கிடைக்காமையும், விரும்பாதது கிடைத்தலும் ரோகத்தை உண்டுபண்ணும்"
இன்றைய காலகட்டத்தில் நோய்களை உண்டு பண்ணுவதில் மனம் முக்கியபங்கினை வகிக்கின்றது. இதற்கு முக்கியமான காரணம் மக்களிற்கிடையேயான போட்டித்தன்மையும், இயந்திரமயமான வேக வாழ்க்கை முறையாகும்.
உணவு, உள்ளம் போன்றனவே நோய்க்கு காரணமென்பதனை பின்வரும் சித்தர் பாடல் நன்கு விளக்குகின்றது.
"பிணிக்கேது கரமென்ப பேசுதல்வே றில்லை
தணிக்காத கோபத்தாற் றாகந் - தணிக்காமை
யாலுண்டி யாற்புணர்ச்சி யாலீரத்தாற் சுமையாகீ
மேலும் பிணிகளறுமே"
அதாவது அதிகமாக கோபப்படுதல், மிக்க நீர் வேட்கையை தணிக்காமை, மாறுபாடான உணவுமுறைகள், ஒவ்வாத புணர்ச்சிகளினால் உடலுக்கு சுமையுண்டாகி நோய்களைத்தோற்றுவிக்கும்.
எனவே நாம் எமது உணவினையும், உள்ளத்தினையும், உடலுக்கேற்ற உடற்பயிற்சியினையும் சரியாக பேணிக்கொள்வோமானால் நோய்களில் இருந்து தப்பி ஆரோக்கியமாக வாழலாம்.

4 comments:

Anonymous said...

வணக்கம் டாக்டர் சுதர்மன்,

வலைப்பதிவினூடான உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். நீங்கள் பின்வரும் முகவரியூடாக டாக்டர் முருகானந்தனையும் தொடர்பு கொள்ள முடியும்.
http://hainallama.blogspot.com/

விஷ்ணு.

Anonymous said...

awesome blog, do you have twitter or facebook? i will bookmark this page thanks. lina holzbauer

Anonymous said...

I really like your blog and i really appreciate the excellent quality content you are posting here for free for your online readers. thanks peace dale tuck

Anonymous said...

Thank you amazing blog, do you have twitter, facebook or something similar where i can follow your blog

Sandro Heckler

உள நெருக்கீடுகளில் சித்த மருத்துவத்தின் பங்கு.