Sunday, January 22, 2012

“செகராச சேகரத்தில்” வாதரோகங்கள் …… 03
02.கபால வாதம்

“சிரத்தினிற் கொதித்துக் குத்திச் செறுத்துடன் கனத்துமிண்டி
யுரத்துடன் புருவநெற்றி யுடன்வலித்து வாதியுண்டாஞ்
சரத்தினைவடமானைச் சதித்திடுந் தடங்கணல்லாய்
பரத்தினிற் கபாலவாத குணமெனப் பகர்ந்தாரன்றே.”

தலைக்கொதிப்பு ஏற்படும், தலைக்குத்து அதிகரித்து புருவத்திலும், நெற்றியிலும் வலியை ஏற்படுத்தும், வேதனை தரும். அம்பு போன்ற கூர்மையும் மானின் கண்போலும் உடையவளே, பூமியிலுள்ள மாந்தருக்கு ஏற்படும் கபாலவாத குணங்கள் இவையாகும்.

"கபால வாதத்துக்கு எண்ணெய்:
“கோட்ட மதிமதுரமுள்ளி நெல்லிதான்றி
கொத்தமல்லி சீரகந் திற்பலி மாயாக்காய்
நாட்டமுறு நிலவினுப்புக்கருஞ்சீரேலம்
நற்கடுகு மிளகு மஞ்சள் கராம்பு வாசி
கூட்ட சமோதமரத்தை மாஞ்சில் குப்பை
குலவசம்புகச்சோலஞ் சந்தஞ்சாதி
ஈட்டுசிறு மூலகந்தக் கோலமாஞ்சில
இலவங்கம் வேர்க்கொம்பு சிவந்த சந்தம்.”


கருங்கோட்டம், அதிமதுரம், உள்ளி, நெல்லிவற்றல், தான்றி, மல்லி, சீரகம், திற்பலி, மாயாக்காய், இந்துப்பு, கருஞ்சீரகம், ஏலம், கடுகு, மிளகு, மரமஞ்சள், கராம்பு, வசுவாசி, ஓமம், சித்தரத்தை, மாஞ்சில், சதகுப்பை, வசம்பு, கச்சோலம், வெண்சந்தனம், சாதிக்காய், சிறுமூலம், தக்கோலம், சடாமாஞ்சில், இலவங்கம், சுக்கு, செஞ்சந்தனம், இவை வகைக்கு ஒரு கழஞ்சு எடுத்து,
“சந்தமுறுமடவார் தம் முலைப்பால் நாழி
சாற்றுதெங்கின் பழத்தேங்காய்ப் பாலும்நாழி
கந்த முறுசதா பலநற்புளியுநாழி
கதிக்க நல்லெண்ணெய் கொத்திற் கசாளமாக்கி
அந்தமுறு மெழுகுபதம் வடித்து நன்றா
யடுத்தடுத்து சிரத்தில் வைத்துமுழுக நாளும்
பந்தமுறுக பாலவலி கபாலவாதம்
பகர்ந்திடுநேத்திர வாதம் பறந்துபோமே.”

தாய்ப்பால் நாழி (600மி.லீ), தேங்காய்ப்பால் நாழி (600மி.லீ), எலுமிச்சம்பழச்சாறு நாழி (600மி.லீ) இவற்றுடன் நல்லெண்ணெய் ஒரு கொத்து கலந்து முன்பாட்டில் சொல்லிய சரக்குகளை கசாயம் செய்து கசாளமாக்கி இரண்டையும் கலந்து கொதிக்க எரித்து மெழுகு பதத்தில் வடித்து எடுத்தல் வேண்டும். இந்த எண்ணெயை தொடர்ச்சியான தலைக்குத்துக்குத் தேய்த்து முழுகிவர கபாலவாதம், கபாலக்குத்துவலி கூறப்பட்ட நேத்திர ரோகவாதம் யாவும் இல்லாது போகும்.

இதரம் மத்திக்க,

“பொருந்திய உச்சிவாத புருவத்திற் பிடரிதன்னில்
திருந்தியகுடோரியாடித் திகழ்துரிசி தரஞ்சேர்த்து
மருந்துவை மூன்றுநாளும் மத்தித்துப் பொருத்துவீரேல்
வருந்திய கபாலவாதம் வசமழிந்தோடுங்காணே.”

உச்சி வாதத்துக்கு சிரசு உச்சியலும், நெற்றியின் மேல் புருவத்திலும் பிடரியிலும் குடோரி வைக்க வேண்டும். இதற்கு குறிப்பிட்ட இடங்களிலுள்ள மேற்றோலை சிறிது உராய்ந்து கழற்றி இரசம் (சுத்தி) கலந்த மருந்தை மூன்று நாட்களுக்கு மத்திக்க வேண்டும். இப்படிச் செய்துவர வருத்திய கபால வாதம் இல்லாது போகும்.

தொடரும்........

Friday, January 06, 2012

சித்தமருத்துவனும் சிவபக்தனுமாகிய இராவணன்



இராவணன்

இதிகாசத்திலும் ,இன்றும்
இராவணன்(கள்) நேராய் நெஞ்சுநிமிர்த்தி
வஞ்சனையில்லாமல் எதையும் எதிர்கொள்ள...

இராமன்(கள்)
மறைந்து கொல்வதும், மறைத்து வெல்வதும்
இன்றும் தொடர...


இராமன்மீது
ஏன் இந்தக் காதல்?..
மக்களுக்கு இராமன் மட்டும்
எப்படி தெய்வம் ஆனான்?....


மனித மனமும் இராமனோ?...


                                          கவிஞர் தியாக.இரமேஷ்

இராவணன் இராமாயனத்தில் உள்ள தமிழ் வீரன். இலங்கையை ஆட்சிசெய்த இராவணன் சிறந்த தமிழன், சிறந்த சிவபக்தன், சிறந்த மருத்துவனும் கூட. இவனது இயற்பெயர் சிவதாசன். இராமாயனத்தில் இராவணனை அரக்கனாகவும், காமுகானகவும் ஆரிய வம்சத்தினர் குறிப்பிட்டுள்ளனர். இங்கு இராவணன் செய்தது சீதையை கடத்தியது மட்டுமே. தொட்டதும் இல்லை. அக்காலகட்டத்தில் அரசர்களுக்கிடையே இப்படியான பழக்கங்கள் இருந்துள்ளது. போரிலே வென்று தாம் விரும்பியவற்றை பெற்றுக்கொள்வது ஓர் ஒழுக்கமாகவே இருந்துள்ளது.


வரலாறுகள் உருவாக்கப்படுவது நாம் அறிந்ததே. இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாக இராமாயணம் கூறுகின்றது. “வாரியபொல” "வானோடும் களம் இறங்குமிடம்" போன்ற ஊர் பெயர்களும் இலங்கையில் உண்டு என்பது இங்கு குறிக்கத்தக்கது. இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டு காணப்படுகிறன.

திருக்கோணேச்சரம் இலங்கையில் திருகோணமலையில் உள்ள திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலமாகும். உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையான இவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராஜா என்ற மன்னன் கி.மு. 1300ஆம் ஆண்டிற்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினான் என்று சான்றுகள் கூறுகின்றன. சிவபக்தனாகிய இராவணனால் இங்குள்ள சிவலிங்கம் தாபிக்கப்பபட்டதாக கூறப்படுகின்றது. இவற்றுக்கெல்லாம் சான்றாக திருருக்கோணேச்சரத்தில் இராவணன் வெட்டு காணப்படுகின்றது.


இராவணன் வெட்டு உருவான கதை இவ்வாறு கூறப் படுகின்றது, இராவணனின் தாயார் தினமும் சிவலிங்கத்துக்கு பூசை செய்துவருபவர். ஒரு சமயம் பூசையின்போது தடங்கல் ஏற்பட்டதால் தாயார் மனமுடைந்து போக, அதனை நிவர்த்தி செய்வதற்காக தட்சிண கைலாயம் எனப்படும் திருக்கோணேச்சரத்துக்கு வந்து சிவ லிங்கத்தினை பெற்று தாயாருக்கு கொடுப்பதற்காகசிவ வழிபாடு செய்தான்.,


சிவன் காட்சி கொடுக்காததால் கோபமடைந்து மலையை வெட்டியதாகவும், மலையை பெயர்த்து எடுக்க முயற்சிக்கும்போது மலையில் நசியுண்டு தன் தவறை உணர்ந்து ஒரு தலையினை கொய்து அதற்கு கை நரம்புகளை இணைத்து சாம காணம் இசைத்து சிவனை மகிழ்வித்த்தாகவும் கூறப்படுகின்றது. மலையை வெட்டியபோது பிளவுண்ட பகுதியே இராவணன் வெட்டு எனப்படுகின்றது.


பின்னர், இராவணன் தனது தாய்க்கு பிதிர்க்கடன் செய்வதற்காக உருவாக்கிய ஏழு சுடு தண்ணீர் கிணறுகள் இன்றும் திருகோணமலை, கன்னியாவில் உள்ளன. தற்போத இவை இராமருடன் தொடர்புபடுத்தப்பட்டுவருகின்றது.


இலங்கை அரசன் இராவணன் மிச்சிறந்த வைத்தியனாக இருந்துள்ளான். சித்தமருத்துவத்தின் முழுப்பகுதியுமே அவருக்கு தெரிந்திருக்கின்றது. ஏனெனில் இராவணனால் உருவாக்கப்பட்ட மருத்துவ நூல்கள் பல காணப்படுகின்றன. ஆனால் அவை அறியப்படமலும், காணாதும் போயுள்ளன.


இராவணனின் நாடிப் பரிட்சை (Nadi Pariksha), அர்க்கப் பிரகாசம்(Arka Prakashata ), ஒடிஷா சிகிட்ஷா (Uddisa Chiktsaya ), ஒடியா சிகிட்ஷா (Oddiya Chikitsa), குமார தந்த்ரயா (Kumara Tantraya ), வாடின பிரகாரனயா (Vatina Prakaranaya ) என்னும் நூல்கள் சிங்கள மொழியில் இயற்றப்பட்டு பின்னர் சமஸ்கிருத மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டன என்று (சிங்) கள எனும் இயக்கத்தைத் தோற்றுவித்த முனிதாச குமாரதுங்க கூறியுள்ளார்.


தாஸிஸ் இராவணன் என்னும் பெயருடையவன் அரசனாக, இராவணன் ‘அங்கவெட்டு’ எனப்படும் வர்மக்கலை, மருத்துவக்கலை, இசைக்கலை போன்ற பல கலைகளில் சிறந்து விளங்கியவனாக விளங்கினான் என்று சிங்கள மொழியின் தொன்மை நூலாகிய இராஜவலியா மற்றும் இராவண வலியா என்னும் நூல்கள் புகழ்ந்துரைக்கின்றன.


இராவணன் என்று பதினோரு பேர் இருந்துள்ளனர். அவர்களில் நள இராவணன், மனு இராவணன், புனு இராவணன், தாஸிஸ் இராவணன் என்பவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்களில் தாஸிஸ் இராவணன் என்பவனுக்குப் பத்துவகையான ஆற்றல்களுடன் பத்து நாடுகளை ஆண்டான். அதனால் அவன் பத்துதலை இராவணன் என்று அழைக்கப்பட்டான் என்று குறிப்பிடுகிறது.


மன்னன் தாஸிஸ் இராவணன் கி.மு. 2554 – 2517 என்னும் காலத்துக்கு உரியவன். இவன் சிங்கள இனத்தின் பழங்குடி இனத்தவன். அங்கவெட்டு வீரன். மண்டோதரியின் கணவன் என்று சிங்கள வரலாறு கூறுகிறது.


இந்திய – ஆரியர்களின் கலப்பினத்தவர்களான சிங்களவர்கள் வட இந்தியாவிலிருந்து (ஒரிசா) இலங்கைக்குக் குடிபெயர்ந்ததே கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் தான். அவ்வாறிருக்கும் போது சுமார் 5000 ஆண்டுக்கு முன் வாழ்ந்ததாகக் கூறப்படும் இராவணன் சிங்களன் என்றும் அவன் சிங்கள மொழியில் நூல் இயற்றினான் என்றும் சிங்கள இனத்தின் பழங்குடியைச் சார்ந்தவன் என்றும் கூறுகின்ற சிங்களர் வரலாறு, வரலாற்றுப் புரட்டு என்பது தெளிவாகிறது.


இரச சாஸ்திரம் என்னும் தமிழ் மருத்துவ நூலை சமஸ்கிருதத்தில் எழுதி வைத்துக் கொண்டு இரச சாஸ்திரம் தங்கள் சாஸ்திரம் என்று கூறிக் கொள்கின்ற ஆயுர் வேதர்களுக்கும் சிங்களவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.


ஆரியர்களும் சிங்களர்களும் இலங்கைக்குச் செல்லுமுன்பே ஆயுர்வேதம் இலங்கைக்கு எப்படி வந்தது? 5000 ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையில் இருந்த மருத்துவம் ஆயுள்வேதம். அதுவே தமிழ் மருத்துவத்தைக் குறிக்கும் பழஞ்சொல் என்பதற்குச் சிலப்பதிகாரம் சான்றாகிறது.


15 ஆம் நூற்றாண்டளவில் சிங்களத்தில் ஆக்கப்பட்ட “வைத்திய சிந்தாமணி பைசாஜ்ஜ சங்கிரகம்” (Vaidya Cintamani Bhaisadya Sangrahava) என்னும் சிங்கள மருத்துவ நூல், இராவணன் வைத்திய சிந்தாமணி என்னும் தமிழ் மருத்துவ நூலைத் தழுவி எழுதப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.


இராவணன் நூல்களில் ஒன்றான “இராவணன் திராவக தீநீர்” என்னும் நூல், அர்க்க பிரகாசம் என்னும் பெயரில் மலையாளத்தில், சுமார் 180 ஆண்டுகளுக்கு முன் வெளியாகியிருக்கிறது.


இந்தியாவின் வடக்கிலுள்ள நாலந்தா பல்கலைக் கழகம், ஆயுர் வேத பல்கலைக் கழகம், சமஸ்கிருத கல்லூரிகள், கேரளாவில் வழங்கி வருகின்ற ஆயுர் வேத கல்லூரி ஆகியவற்றில் வழங்கி வருகின்ற மருத்துவ நூல்களில் செம்பாதி தமிழ் நூல்கள் என்பது குறிப்பிடத் தக்கது. வடமொழியிலுள்ள இரச சாஸ்திரம், இராவணன் நூலகத்திலிருந்து கொண்டு வரப்பெற்ற நூலைப் பார்த்து எழுதியதாகத் தெரிவிக்கிறது.


கி.பி. 10 ஆம் நூற்றாண்டளவில் குமரி, திருவனந்தபுரம் பகுதியில் வழங்கி வந்துள்ள ‘சிந்தாமணி மருத்துவம்’ என்னும் ‘இராவணன் மருத்துவ நூல்கள்’ அனைத்தும் திருவிதாங்கூர் மன்னரின் தூண்டுதலினால் திரட்டப் பட்டுள்ளன. அவை, நொய்யாற்றங்கரை என்னும் ஊரில் நிறுவப்பட்டிருந்த ‘தமிழ் மருத்துவ ஆய்வு மையம்’ என்னும் அமைப்பின் மருத்துவர்களும் வர்ம ஆசான்களும் அகத்தியர் பெயரில் மலையாள மொழியில் மொழிமாற்றம் செய்துள்ளனர்.


அந்நூல்களின் உதவியினால் உருவாக்கப் பட்டதே ‘ஆயுர் வேத மருத்துவம்’ ஆகும்.


இந்தியில் “இராவண சம்ஹிதா” என்னும் மருத்துவ நூல் இராவணன் படத்துடன், மனோஷ் பப்ளிகேஷன், புதுதில்லி – 110084 லிருந்து வெளிவந்துள்ளது. அது, சுமார் 830 பக்கங்களைக் கொண்டதாக இருக்கிறது.


இராவணன் இயற்றிய நூல்கள் என அறியப்பட்டுள்ள நூல்கள் விபரம் வருமாறு:-


1. உடற்கூறு நூல்
2. மலை வாகடம்
3. மாதர் மருத்துவம்
4. இராவணன் – 12000
5. நாடி, எண்வகை பரிசோதனை நூல்
6. இராவணன் வைத்திய சிந்தாமணி
7. இராவணன் மருந்துகள் - 12000
8. இராவணன் நோய் நிதானம் - 72 000
9. இராவணன் – கியாழங்கள் – 7000
10. இராவணன் வாலை வாகடம் – 40000
11. இராவணன் வர்ம ஆதி நூல்
12. வர்ம திறவுகோல் நூல்கள்
13. யாழ்பாணம் – மூலிகை அகராதி
14. யாழ்பாணன் – பொது அகராதி
15. பெரிய மாட்டு வாகடம்
16. நச்சு மருத்துவம்
17. அகால மரண நூல்
18. உடல் தொழில் நூல்
19. தத்துவ விளக்க நூல்
20. இராவணன் பொது மருத்துவம்
21. இராவணன் சுகாதார மருத்துவம்
22. இராவணன் திராவக தீநீர் நூல் – அர்க்க பிரகாசம்
23. இராவணன் அறுவை மருத்துவம் – 6000
24. இராவணன் பொருட்பண்பு நூல்
25. பாண்ட புதையல் முறைகள் – 600
26. இராவணன் வில்லை வாகடம்
27. இராவணன் மெழுகு வாகடம்

மேற்காணும் நூல்களில் பல, சங்கரன் கோயில் அருகிலுள்ள ‘கரிவலம் வந்த நல்லூர்’ என்னும் ஊரில் அமைந்துள்ள ‘பால் வண்ண நாதன்’ திருக்கோயிலில் கருவூலமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல் மூலங்கள்:

தட்சிண கைலாயம் – நூல்
திருக்கோணேச்சர ஆலயம்.
http://thamizhkkuil.blogspot.com/



Sunday, January 01, 2012

 இனிய
புது வருட
வாழ்த்துக்கள்.
“செகராச சேகரத்தில்” வாதரோகங்கள் …… 02
வாதங்கள் - 85

01. உச்சிவாதம்
தலைகனத்ததிர்ந்துகுத்தித் தடித்திடுமுச்சிநெற்றி

நிலைகனத்துரத்துமிண்டி நெடும்பகற்கடினஞ்செய்யும்

கொலைகனத்துதிரத்தெங்கும் கொடுக்கணைநிகருங்கண்ணாய்

சிலைகனத்ததிருமுச்சி வாதநீதெரிந்துகாணே.

தலை கனக்கும், அதிரும், உச்சியிலும், நெற்றியிலும் குத்தும், பகற்பொழுதில் உரத்திருக்கும், தலைக்குத்து அதிகரித்து துன்பத்தை ஏற்படுத்தும். அதிர்வையும் ஏற்படுத்தும்.
கணைபோல் கூர்மையுடைய விழியுடையவளே உச்சிவாதத்தில் இவையாவும் ஏற்படும் என்பதை அறிந்து கொள்வாயாக.

வேறு பாடல்

தலையதுகனத்ததிர்ந்து சாற்றிடுமுச்சிதன்னிற்

பெலமிகக்கொதித்துக்குத்திப் பேசருநோவுண்டாகும்

உலைவதாய்ப்பிடரிதானு முளைந்துமிக்குவாதியுண்டாம்

கொலைபெறுமுச்சிவாதக் குணமிதென்றியம்பலாமே.
தலை கனத்து அதிரும். உச்சியில் கொதிப்பும் குத்துமிருக்கும். சொல்ல முடியாத நோவு இருக்கும். பிடரியில் நோவும் உளைவும் இருக்கும். மிகுந்த வேதனையிருக்கும். மரணத்தை ஏற்படுத்தக்கூடிய உச்சிவாதக் குணங்கள் இவையெனக் கூறலாம்.

மருந்து
எருக்கு நொச்சி மாவிலங்கை வாதங்கொல்லி

எலுமிச்சை தோடை யுவாய் முத்தக்காசு

தருக்குபெருமருந்துவளர் முருங்கைகான்றை

சாற்றுமிவை வேரனைத்தும் பிடுங்கிச் சீவி

திருக்குமருந் ததிமதுரமுள்ளிகோட்டம்

சீரகந்திற் பலிமிளகு அரத்தைஏலம்

மருக்குலவுவசம் புலுவாக் கொத்தமல்லி

மஞ்சல் சதகுப்பைசுக்கு வெளுத்தல் கூட்டே.

எருக்கம்வேர், நொச்சிவேர், மாவிலங்கைவேர், வாதமடக்கிவேர், எலுமிச்சைவேர், தோடைவேர், உவாய்வேர், கோரைக்கிழங்கு, பெருமருந்துவேர், கறிமுருங்கை வேர், கான்றைவேர், போன்றவற்றில் வகைக்கு இரண்டு கழஞ்சு எடுத்து கல்வத்திலிட்டு அரைத்து அத்துடன் அதிமதுரம், உள்ளி, வெண்கோட்டம், சீரகம், திற்பலி, மிளகு, சித்தரத்தை, ஏலம், வசம்பு, உலுவாரிசி, கொத்தமல்லி, மஞ்சள், சதகுப்பை, சுக்கு, வெளுத்தல் பிசின், இவையாவும் வகைக்கு இரண்டு கழஞ்சு எடுத்து சூரணம் செய்துசேர்த்து அரைத்து,

கூட்டுச் சரக்கொன்றிரண்டு கழஞ்சுவேருங்

குறித்திரட்டி யெடுத்தரைத்துக் கசாளமாக்கி

ஈட்டுதெளிவெண்ணெய் கொத்திற்கரைத்துக்காய்ச்சி

இதமாக மூன்றாநாள் வடித்துவார்த்து

மிட்டுநையம் பண்ணி நன்றாய் முழுகநாளும்

மீளுமுச்சிவாதமுடன் கபாலவாதம்

நாட்டுபிறவிசைவாதங்க பாலசூலை

நடுக்கியகன்றோடுமென நவின்றாரன்றே.

மேல் கூறிய மருந்துகளையெல்லாம் ஒன்றாக்கி அரைத்துக் கசாளமாக்க வேண்டும். இக் கசாளத்தை ஒரு கொத்து (600ml) தெளிவெண்ணெயில் கலந்து மூன்றுநாள் சிறு தீயாக எரித்து பின் மூன்றாம் நாள் வடித்து எடுக்க வேண்டும்.

இவ் எண்ணெயை மூக்கில் ஒரு துளிநசியம் செய்வதும், காசு எடை தலைக்கு வைத்து நன்றாக மத்தித்து வெந்நீரில் முழுகிவரல் வேண்டும். இப்படிச் செய்து வர உச்சி வாதம் நீங்கும். அத்துடன் கபாலவாதம், பிடித்த பிறவிசைவாதம் கபாலகுத்து இவையெல்லாம் பயத்துடன் விட்டு விலகும் என வைத்திய முனிவர் கூறியுள்ளார்.








உள நெருக்கீடுகளில் சித்த மருத்துவத்தின் பங்கு.