Sunday, January 22, 2012

“செகராச சேகரத்தில்” வாதரோகங்கள் …… 03
02.கபால வாதம்

“சிரத்தினிற் கொதித்துக் குத்திச் செறுத்துடன் கனத்துமிண்டி
யுரத்துடன் புருவநெற்றி யுடன்வலித்து வாதியுண்டாஞ்
சரத்தினைவடமானைச் சதித்திடுந் தடங்கணல்லாய்
பரத்தினிற் கபாலவாத குணமெனப் பகர்ந்தாரன்றே.”

தலைக்கொதிப்பு ஏற்படும், தலைக்குத்து அதிகரித்து புருவத்திலும், நெற்றியிலும் வலியை ஏற்படுத்தும், வேதனை தரும். அம்பு போன்ற கூர்மையும் மானின் கண்போலும் உடையவளே, பூமியிலுள்ள மாந்தருக்கு ஏற்படும் கபாலவாத குணங்கள் இவையாகும்.

"கபால வாதத்துக்கு எண்ணெய்:
“கோட்ட மதிமதுரமுள்ளி நெல்லிதான்றி
கொத்தமல்லி சீரகந் திற்பலி மாயாக்காய்
நாட்டமுறு நிலவினுப்புக்கருஞ்சீரேலம்
நற்கடுகு மிளகு மஞ்சள் கராம்பு வாசி
கூட்ட சமோதமரத்தை மாஞ்சில் குப்பை
குலவசம்புகச்சோலஞ் சந்தஞ்சாதி
ஈட்டுசிறு மூலகந்தக் கோலமாஞ்சில
இலவங்கம் வேர்க்கொம்பு சிவந்த சந்தம்.”


கருங்கோட்டம், அதிமதுரம், உள்ளி, நெல்லிவற்றல், தான்றி, மல்லி, சீரகம், திற்பலி, மாயாக்காய், இந்துப்பு, கருஞ்சீரகம், ஏலம், கடுகு, மிளகு, மரமஞ்சள், கராம்பு, வசுவாசி, ஓமம், சித்தரத்தை, மாஞ்சில், சதகுப்பை, வசம்பு, கச்சோலம், வெண்சந்தனம், சாதிக்காய், சிறுமூலம், தக்கோலம், சடாமாஞ்சில், இலவங்கம், சுக்கு, செஞ்சந்தனம், இவை வகைக்கு ஒரு கழஞ்சு எடுத்து,
“சந்தமுறுமடவார் தம் முலைப்பால் நாழி
சாற்றுதெங்கின் பழத்தேங்காய்ப் பாலும்நாழி
கந்த முறுசதா பலநற்புளியுநாழி
கதிக்க நல்லெண்ணெய் கொத்திற் கசாளமாக்கி
அந்தமுறு மெழுகுபதம் வடித்து நன்றா
யடுத்தடுத்து சிரத்தில் வைத்துமுழுக நாளும்
பந்தமுறுக பாலவலி கபாலவாதம்
பகர்ந்திடுநேத்திர வாதம் பறந்துபோமே.”

தாய்ப்பால் நாழி (600மி.லீ), தேங்காய்ப்பால் நாழி (600மி.லீ), எலுமிச்சம்பழச்சாறு நாழி (600மி.லீ) இவற்றுடன் நல்லெண்ணெய் ஒரு கொத்து கலந்து முன்பாட்டில் சொல்லிய சரக்குகளை கசாயம் செய்து கசாளமாக்கி இரண்டையும் கலந்து கொதிக்க எரித்து மெழுகு பதத்தில் வடித்து எடுத்தல் வேண்டும். இந்த எண்ணெயை தொடர்ச்சியான தலைக்குத்துக்குத் தேய்த்து முழுகிவர கபாலவாதம், கபாலக்குத்துவலி கூறப்பட்ட நேத்திர ரோகவாதம் யாவும் இல்லாது போகும்.

இதரம் மத்திக்க,

“பொருந்திய உச்சிவாத புருவத்திற் பிடரிதன்னில்
திருந்தியகுடோரியாடித் திகழ்துரிசி தரஞ்சேர்த்து
மருந்துவை மூன்றுநாளும் மத்தித்துப் பொருத்துவீரேல்
வருந்திய கபாலவாதம் வசமழிந்தோடுங்காணே.”

உச்சி வாதத்துக்கு சிரசு உச்சியலும், நெற்றியின் மேல் புருவத்திலும் பிடரியிலும் குடோரி வைக்க வேண்டும். இதற்கு குறிப்பிட்ட இடங்களிலுள்ள மேற்றோலை சிறிது உராய்ந்து கழற்றி இரசம் (சுத்தி) கலந்த மருந்தை மூன்று நாட்களுக்கு மத்திக்க வேண்டும். இப்படிச் செய்துவர வருத்திய கபால வாதம் இல்லாது போகும்.

தொடரும்........

No comments:

உள நெருக்கீடுகளில் சித்த மருத்துவத்தின் பங்கு.