வாதங்கள் - 85
01. உச்சிவாதம்
தலைகனத்ததிர்ந்துகுத்தித் தடித்திடுமுச்சிநெற்றி
நிலைகனத்துரத்துமிண்டி நெடும்பகற்கடினஞ்செய்யும்
கொலைகனத்துதிரத்தெங்கும் கொடுக்கணைநிகருங்கண்ணாய்
சிலைகனத்ததிருமுச்சி வாதநீதெரிந்துகாணே.
தலை கனக்கும், அதிரும், உச்சியிலும், நெற்றியிலும் குத்தும், பகற்பொழுதில் உரத்திருக்கும், தலைக்குத்து அதிகரித்து துன்பத்தை ஏற்படுத்தும். அதிர்வையும் ஏற்படுத்தும்.
கணைபோல் கூர்மையுடைய விழியுடையவளே உச்சிவாதத்தில் இவையாவும் ஏற்படும் என்பதை அறிந்து கொள்வாயாக.
வேறு பாடல்
தலையதுகனத்ததிர்ந்து சாற்றிடுமுச்சிதன்னிற்
பெலமிகக்கொதித்துக்குத்திப் பேசருநோவுண்டாகும்
உலைவதாய்ப்பிடரிதானு முளைந்துமிக்குவாதியுண்டாம்
கொலைபெறுமுச்சிவாதக் குணமிதென்றியம்பலாமே.
தலை கனத்து அதிரும். உச்சியில் கொதிப்பும் குத்துமிருக்கும். சொல்ல முடியாத நோவு இருக்கும். பிடரியில் நோவும் உளைவும் இருக்கும். மிகுந்த வேதனையிருக்கும். மரணத்தை ஏற்படுத்தக்கூடிய உச்சிவாதக் குணங்கள் இவையெனக் கூறலாம்.
மருந்து
எருக்கு நொச்சி மாவிலங்கை வாதங்கொல்லி
எலுமிச்சை தோடை யுவாய் முத்தக்காசு
தருக்குபெருமருந்துவளர் முருங்கைகான்றை
சாற்றுமிவை வேரனைத்தும் பிடுங்கிச் சீவி
திருக்குமருந் ததிமதுரமுள்ளிகோட்டம்
சீரகந்திற் பலிமிளகு அரத்தைஏலம்
மருக்குலவுவசம் புலுவாக் கொத்தமல்லி
மஞ்சல் சதகுப்பைசுக்கு வெளுத்தல் கூட்டே.
எருக்கம்வேர், நொச்சிவேர், மாவிலங்கைவேர், வாதமடக்கிவேர், எலுமிச்சைவேர், தோடைவேர், உவாய்வேர், கோரைக்கிழங்கு, பெருமருந்துவேர், கறிமுருங்கை வேர், கான்றைவேர், போன்றவற்றில் வகைக்கு இரண்டு கழஞ்சு எடுத்து கல்வத்திலிட்டு அரைத்து அத்துடன் அதிமதுரம், உள்ளி, வெண்கோட்டம், சீரகம், திற்பலி, மிளகு, சித்தரத்தை, ஏலம், வசம்பு, உலுவாரிசி, கொத்தமல்லி, மஞ்சள், சதகுப்பை, சுக்கு, வெளுத்தல் பிசின், இவையாவும் வகைக்கு இரண்டு கழஞ்சு எடுத்து சூரணம் செய்துசேர்த்து அரைத்து,
கூட்டுச் சரக்கொன்றிரண்டு கழஞ்சுவேருங்
குறித்திரட்டி யெடுத்தரைத்துக் கசாளமாக்கி
ஈட்டுதெளிவெண்ணெய் கொத்திற்கரைத்துக்காய்ச்சி
இதமாக மூன்றாநாள் வடித்துவார்த்து
மிட்டுநையம் பண்ணி நன்றாய் முழுகநாளும்
மீளுமுச்சிவாதமுடன் கபாலவாதம்
நாட்டுபிறவிசைவாதங்க பாலசூலை
நடுக்கியகன்றோடுமென நவின்றாரன்றே.
மேல் கூறிய மருந்துகளையெல்லாம் ஒன்றாக்கி அரைத்துக் கசாளமாக்க வேண்டும். இக் கசாளத்தை ஒரு கொத்து (600ml) தெளிவெண்ணெயில் கலந்து மூன்றுநாள் சிறு தீயாக எரித்து பின் மூன்றாம் நாள் வடித்து எடுக்க வேண்டும்.
இவ் எண்ணெயை மூக்கில் ஒரு துளிநசியம் செய்வதும், காசு எடை தலைக்கு வைத்து நன்றாக மத்தித்து வெந்நீரில் முழுகிவரல் வேண்டும். இப்படிச் செய்து வர உச்சி வாதம் நீங்கும். அத்துடன் கபாலவாதம், பிடித்த பிறவிசைவாதம் கபாலகுத்து இவையெல்லாம் பயத்துடன் விட்டு விலகும் என வைத்திய முனிவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment