Monday, November 24, 2014

சிறுநீரக நோய்கள் – Renal Diseases - 03

சொட்டு நீர் (Incontinence of Urine)

இந்நோய் குழந்தைகளில் ஏற்படக் காரணங்கள் குடற்புழு, நீர்க்கணை (கருவில் தோன்றும் நோய்), இளைப்பு நோய், நீரருகல், நீர்பெருகல், என சித்தமருத்துவத்தில் குறிப்பிடப்படுகின்றது. இவற்றுக்கு ஏற்ப பரிகாரம் செய்தல் வேண்டும். சிறுநீர்த்தொகுதி பிறவியிலேயே சரியாக அமையாதுவிடின் பரிகாரம் குறிப்பிடப்படவில்லை. நவீன மருத்துவத்தில் இதற்கு சாத்தியமான வழிகள் காணப்படுகின்றன.

பெரியவர்களில் அடிக்கடி நீர் வெளிப்படுதல் போன்ற உணர்ச்சி (Irritable blader) அதாவது நீர்ப்பை, நீர்த்தாரை, இவற்றில் வெட்டை சம்பந்தமான புண்ணிருப்பின் இந்த மாதிரி உணர்ச்சி உண்டாகக்கூடும். இவற்றை விட இருமல், சிரித்தல், அழுதல், பயப்படல், ஆகியவற்றால் சொட்டு நீர் ஏற்பட்டால் அக்காரணங்களை ஒழித்தல் வேண்டும். நீர்பெருக்கல், நீரருகல், வெள்ளை, நீர்ப்பை தாபிதம், நரம்புத் தளர்ச்சி, பாரிசவாயு, பகந்தரம், கீழ்நோக்குங்காலின் செயல் குறைதல் ஆகியவற்றால் சொட்டுநீர் ஏற்படின் மேற்படி காரணங்களுக்கு மருத்துவம் செய்தல் வேண்டும்.

சொட்டுநீர்  நோய்க்கு தனியான மருத்துவம் குறிப்பிடப்படவில்லை.


தொடரும்…

Saturday, November 22, 2014

சிறுநீரக நோய்கள் – Renal Diseases - 02

நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு, மூத்திரக்கிரிச்சரம்.

இந்நோய் எக்காரணங் கொண்டு உற்பத்தியானதோ அதனை நீக்குதல் வேண்டும். வெப்பத்தை உண்டாக்கக் கூடிய உணவுகளை (கோழி இறைச்சி, மிளகாய் சார்ந்த உணவுகள், உள்ளி,……) உண்ணக்கூடாது, வெயிலில் திரிதல், கள், சாரயம் அருந்தக் கூடாது, நெருப்பு, சூடு சார்ந்த வேலைகள் செய்தல் கூடாது, அளவு கடந்த கலவி கூடாது.

இவற்றுக்காக தனியான பரிகாரம் கூறப்படாவிடினும் சில அனுபவ முறைகள் “நோய்களுக்கு சித்த பரிகாரம்”  எனும் நூலில் பின்வரும் பரிகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

01.  “கனி புளியின் கொட்டைத்தோல்
கடுவிளநீர் சேர்த்தரைத்து
பனியில் வைத்துண்ண நீர்க்கடுப்பேறும்”- ஏடு.
புளியம்பழத்திலுள்ள முற்றிய புளியங்கொட்டையின் மேல் தோலை மட்டும் சேகரித்து இளநீர் விட்டரைத்து இளநீரில் கலக்கி இரவு பனியில் வைத்திருந்து காலை, மாலை சாப்பிட்டு வர நீர்க்கடுப்பு கொட்டு மூத்திரம், நீர் எரிச்சல் இவை தீரும்.




02.  “ புளிக்கொட்டை தின்று விடிற்
போகுமே நீக்கடுப்பு
அளிச்சேர்க்குழன் மாதரன்பு” – குணபாடம்.

நீர்க்கடுப்புள்ளபோது புளியின் கொட்டையை வாயிலிட்டுமென்று தின்ன உடனே நிற்கும்.

புளியங்கொட்டைத்தோல் சூரணத்தினை நீர்க்கடுப்புநிவாரணி எனக் குறிப்பிடப்படுகின்றது. எமது உணவுப்பழக்கத்தில் புளியங்கொட்டையை வறுத்து உண்ணும் பழக்கம் இருந்து வருகின்றது. ஆனால் இன்று அது அருகி வந்துவிட்டது. அப்படி புளியங்கொட்டையை கடித்தாலும் பற்கள்தான் தற்போது நொறுங்கிவிடும்.அந்தளவுக்கு எமது பலமிருக்கிறது.


தொடரும்…

Friday, November 21, 2014

சிறுநீரக நோய்கள் – Renal Diseases - 01
   
தற்பொழுது யாழில் சிறுநீரக நோய்கள் பொதுவானதொரு நோய்களாக மட்டுமன்றி, சிறுநீரகம் தொழிற்பாடற்று ஏற்படும் இறப்புக்களும் அதிகரித்து வரும் நிலை காணப்படுகின்றது. தவிர நாம் பயன்படுத்தும் குடிநீர்களின் நச்சுத்தன்மையும் அதிகரித்து வருகின்றது. 
குறிப்பாக  நாம் குடிநீராக பயன்படுத்தும் நிலத்தடி நீரில் “நைற்ரேட்” இன் செறிவு அதிகரித்து (high concentration of Nitrate ( NO3- )) உள்ளதாக பல ஆய்வுகளும் குறிப்பிடுகின்றன. நாம் நிலத்தடி நீரில் எவ்வளவு அக்கறையாக உள்ளோம் என்பதற்கு சுன்னாகம் எண்ணெய்க் கசிவும் அதிகரித்து வரும் குழாய்க் கிணறுகளின் எண்ணிக்கைகளும்  சிறந்த உதாரணமாகும்.
இவ்வாறான நிலையில் ஏற்படும் சிறுநீரக நோய்களை  சித்த மருத்துவம் எவ்வாறு பார்க்கின்றது என்பதை பார்ப்போம். சித்த மருத்துவம் .இதனை மூன்று பிரிவுகளாகப் பிரத்துள்ளது.

01.  நீர் அருகல் நோய்கள்: இதில் கல்லடைப்பு, நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு,    சொட்டு நீர், வெள்ளை, நீரடைப்பு என ஆறு வகைகளாக கூறப்பட்டுள்ளன.

02.  நீர் பெருக்கல் நோய்கள்: இதில் மேக நீர் இருபது பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.

03.   மேற்கூறிய இரு பெரும் பிரிவுகள் நீங்கலாக நீரிழிவு, வெண்ணீர், தெளிநீர் என்னும் தலைப்புக்களில் தனியாகவும் விளக்கியுள்ளனர். இவை மேக நீர் இருபதிலும் அடங்கியுள்ளன.

01.  கல்லடைப்பு


இந்நோய் நிலையில் அதிக நீர் அருந்துவதுடன், நீரைப்பெருக்கி நீர்ப்பையை கழுவுவது போன்று சிறு கற்களை வெளியாக்கிச் சிறுநீரைப் பெருக்கக் கூடிய உணவுகளைக் கொடுத்தல் வேண்டும். முள்ளங்கிக் கீரைத்தண்டு, வாழைத்தண்டு, சிறு கீரை, அவரை, வெண்டை, பசலைக்கீரை, தாளிக்கீரை, பார்லியரிசி, மாவிலங்கம்பட்டை, சிறுபீளை போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். கற்களை உண்டாக்கக்கூடிய தக்காளி, கோவா, கோலிபிளவர், முருக்கங்காய், மற்றும் உப்பு கல்சியம் செறிவான நீர்களைப் பருகுதல் கூடாது.

உள நெருக்கீடுகளில் சித்த மருத்துவத்தின் பங்கு.