Monday, November 08, 2021

கந்தசஷ்டி விரதம் முடித்தல் - #பாரணை



விரதம் முடித்தல் என்பது காலையில் செய்ய வேண்டும் என்று கூறுவர். இது சூரிய உதயத்தின் அடிப்படையில் ஆகும். ஆனால் சந்திர நாட்களைக் கருத்தில் கொள்ளும்போது சஷ்டி முடிந்து சுத்தமான முழு எழுமையில் (சப்தமியில்) விரதம் முடித்தலை (பாரணை) மேற்கொள்ளலாம்.

விரதம் முடிக்கும்போது சித்தர்கள் கூறிய ஆரோக்கியமான உணவு உண்ணும் காலத்தை கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் எமது உடல் இயக்கங்கள் சூரிய உதயத்திலும் சூரிய மறைவின் அடிப்படையிலுமே தங்கியுள்ளது. சித்தமருத்துவத்தில் நோயில்லா வாழ்வுக்கான வழிமுறைகளில் சித்தர்களால் கூறப்பட்ட உணவு உண்ணக்கூடிய நேரங்களைக் கருத்தில் கொள்

"தருமநூல் விதியிரண்டே தப்பிமுக்கா லுண்ணவெனில்
சிருமிதலை காலைமுற்றச் சேய்பருவ – வருமுகூர்த்த
மொன்றுக்கு ணாண்குக்கு ளோத மிரண்டுக்கு ளுண்பர்
னன்றுக்குத் தீயோர் நயந்து.”

தரும நூல்களின் அடிப்படையில், இரண்டுவேளை உணவே உண்ணுதல் வேண்டும். இதைத் தவிர்த்து 3 வேளை உண்ண வேண்டுமெனில், சமமாக்கினி உள்ளவர்கள் சூரிய உதயம் தொடங்கி 1 ½ மணி நேரத்துக்குளளாகவும்;, காலைப் பருவமாகிய 6 மணி நேரத்துக்குள்ளாகவும், பொழுதின் மூப்பு பருவமான இரவில் 9 மணிக்குள்ளாகவும் உணவு உட்கொள்ள வேண்டும்.


“மூன்றுநான் காரெண் முகூர்த்தங்க ளின்முறையே
ஞான்று ளுண்ணுமந்த நறுமுணவே – தோன்றுடலுக்
கொக்குமித நோயரமு ரோமுயிற் கந்தரஞ்செய்
விக்குமித மாராய்ந்து விள்”
- #ஆகாரமே #ஆதாரம் நூல், பக்.74-75

சூரியன் உதயமாகி, 4 மணித்தியாலம் 30 நிமிடங்களுக்குள் உண்ணும் நல்ல உணவானது உடலுக்குப்பொருந்தும். 4மணித்தியாலம் 30 நிமிடங்கள் தொடங்கி 6 மணித்தியாலத்துக்குள் உண்ணும் மிதமான உணவானது நோய்களை ஏற்படுத்தாது. 6 மணித்தியாலங்கள் தொடக்கம் 9 மணித்தியாலங்கள் வரை உண்ணும் உணவு நோய்களை உருவாக்கும். 9 மணித்தியாலங்களின் பின் 12 மணித்தியாலங்களுக்குள் உண்ணும் உணவானது உயிரைக் கொள்ளும் நோய்களை வருவிக்கும்.

உதாரணமாக சூரிய உதயம் காலை 6 மணி எனில்,

முற்பகல் மணி 10.30 இற்குள் உணவு உட்கொண்டால் உடலுக்குப் பொருந்தும்.

முற்பகல் 10.30 இல் இருந்து மதியம் மணி 12 இற்குள் உணவு உட்கொண்டால் நோய்கள் ஏற்படாது.

மதியம் 12 இல் இருந்து பிற்பகல் மணி 3 இற்குள் உணவு உட்கொண்டால் நோய்கள் உருவாகும்.

பிற்பகல் 3 இல் இருந்து மாலை 6 மணிக்குள் உணவு உட்கொண்டால் உயிரைக் கொள்ளும் நோய்கள் உருவாகும்.

இவற்றினைக் கருத்தில் கொண்டே விரதம் முடித்தலை (பாரணை) காலையில் செய்தல் வேண்டும் எனக் குறிப்பிடப்படுகின்றது.

ஆனால் இம்முறை போல் (2021) பிற்பகல் 2.29 இற்கு சஷ்டி திதி முடிவடையின், தொடர்ந்து வரும் சப்தமியில், சூரிய உதயத்தை அறிந்து சித்தர்களின் வாக்குக்கமைய இரவு 9 மணிக்கு முன் விரதத்தை முடித்துக்கொள்ளலாம்.

No comments:

உள நெருக்கீடுகளில் சித்த மருத்துவத்தின் பங்கு.