நவராத்திரியின் போது கோயில்களில் வீடுகளில், பாடசாலைகள் என்பவற்றில் கும்பம் வைத்து நவதானியம் விதைத்து முளைக்கவிடுவார்கள்.
தற்போது முளைக்க விட்ட நவதானியங்களை காதிலும் புத்தகங்களில் வைக்கப்படுகின்றன. இது தவறான செயற்பாடாக தெரிந்ததால் சிவாச்சாரியர் ஒருவரிடம் இதுபற்றி கேட்டபொழுது அவர் மேலும் பலரிடம் கேட்டு அதன் உண்மை தார்ப்பரியத்தை இவ்வாறு கூறினார்.
முக்கியமாக நவராத்திரிவிழா கற்கும் சிறுவர்கள், போர்வீரர்கள், உழைப்பாளிகளை நோக்கிய விழாவாக அமைந்திருக்கும். இவர்களுக்கு தேவையான போசாக்கான உணவு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடே நவதானிய விதைப்பாகும்.
ஆனால் கால ஓட்டத்தில் காதிலும் புத்தகத்துள்ளும் வைப்பதாக அமைந்திருப்பது வேதனைக்குரியதாகும்.
முளைவிட்ட தானியங்களில் இருந்து செய்யப்படுகின்ற உணவுகளை இன்று ஊட்டச்சத்துகள் நிறைந்த செறிந்த சிறப்புவாய்ந்த உணவுகளாக (Super foods) பயன்படுத்தப்படுகின்றது.
உதாரணமாக முளைக்க முன் பயற்றில் உள்ள புரதச் சத்தின் அளவை விட முளைவிட்ட பயற்றில் பலமடங்கு புரதச்சத்து அதிகரிப்பதுடன் புரத வகைகளின் (அமினோ அமிலங்கள்) எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது. இதைப் போலவே உயிர்ச் சத்துக்கள் (Vitamins) கனிமச் சத்துக்களும் (Minerals) அதிகரிக்கின்றன.
இவற்றை விட உணவுக்கூறுகள் சிக்கலான (Complex) நிலையில் இருந்து மனித உடலில் இலகுவாக அகத்துறிஞ்சப்படக்கூடிய நிலைக்கு மாறுகின்றன.
தானியங்களில் உள்ள சத்துக்களை எமது உடலால் அகத்துறிஞ்ச முடியாது தடுக்கும் தாவர இரசாயனங்கள் (Anti Nutritional properties) அழிக்கப்படுகின்றன.
பருப்பு வகை உணவுகளில் உள்ள வாய்வுத்தன்மையும் இல்லாது போகின்றது.
நார்ச்சத்தின் அளவு அதிகரிக்கின்றது.
கற்ப இரசாயனங்கள் (Antioxidants) அதிகரிக்கின்றன.
முளைவிட்ட தானியங்களை தனியாகவோ ஏனைய உணவுகளுடனோ சேர்த்து உணவாக்கிக் கொள்ளலாம்.
நீண்டகாலம் வைத்திருந்து பயன்பெற வேண்டுமாயின் இளவெயிலில் அல்லது நிழலில் உலர்த்தி அல்லது இளவறுப்பாக வறுத்து அதனை அரைத்து மாவாக்கி காற்றுப்புகாதவாறு கண்ணாடிப் போத்தலினுள் பத்திரப்படுத்திக்கொள்ளவும். தேவைக்கேற்றவாறு நாளாந்த உணவுகளுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
கோதுமை அரிசி முளைக்கவிடப்பட்டு இவ்வாறு தயாரிக்கப்பட்டு wheat grass powder ஆக விற்பனையில் உள்ளது.
No comments:
Post a Comment