Sunday, February 19, 2012

“செகராச சேகரத்தில்” வாதரோகங்கள் …… 04


03. சூரிய வாதம்
“தலைகனத்துச் சுழற்றியுடனக் கமுண்டாய்ச்

சாற்றிடிலுட்டணவேர் வையதிகமாகி

நிலைகனத்து நாசடைத்தும் மியூர்ந்து

நீர்விழுந்து உளைந்து குத்திவலியுண்டாகும்

கலைகனத் தகிரணமதிமுகத் தைவெல்லுங்

கணையெனநல் விழிபடைத் தகமலமின்னே

மலைகனத் தகொடுமுடிசே ருதயமீது

மருவிடுசூரியவாதம் மகிழ்ந்துகாணே”

 

தலைகனக்கும், சுற்றும், நடுக்கம் வரும், மேலும் உடல் உஸ்ணத்துடன் வியர்வை அதிகமாகவரும். நாசியடைக்கும், தும்மலும் ஏற்படும், நாசியில் ஊர்வதுபோன்ற உணர்வுடன் நீர்விழும், நாசியுளைவுடன் குத்தி வலிக்கும். பூரண கலைநிறைந்த சந்திரனின் முகத்தையும் வெல்லும் அழகுடையவளும், அம்புபோல் கூரிய விழியுடைய தாமரைபோன்ற மென்மையான பெண்ணே, கொடுமுடியுடைய மேருமலையில் உதயமாகும் சூரியன் தோன்றும் என்பதை மகிழ்ச்சியுடன் காண்பாய். அதாவது சூரியன் உதயமாகும்போது கூரியவாதம் ஏற்பட்டு அஸ்தமிக்கும் போது விட்டு நீங்கும். பகலில் இருக்கும். இரவில் இராது.

“சூரியவாதந் தோன்றிற் றும்மலுஞ் சலமுமூர்வும்

பாரிதாய்த் தலைகனத்துப் பரந்துடலிற்வேர்த்து

சீரிடாதடைத்துநாசி சீந்திடவலிப்புமுண்டாய்

சாரியாய்த் தலைநடுக்குஞ் சாற்றுஞ்சூரியவாதந்தான்”

சூரியவாதந் தோன்றினால் தும்மலும் மூக்குச் சிந்தும் தலைவலிக்கும் இரு கன்னப் பக்கங்களிலும் குத்து ஏற்படும். உடல் வியர்க்கும். நாசியடைக்கும். நீர் சிந்த வலியும் ஏற்படும். தலை சுற்றும் தலைச்சுற்றுடன் தலை நடுக்கமும் வரும். இக்குணங்கள் ஏற்பட்டால் சூரியவாதம் என்று கொள்ளலாம்.

மருந்து,

“ஆனதையறிந்துநீயும் அஞ்சிலைநொச்சிவேளை

தேனதில்வரிக்கற்றாளை தேட்கடைசிற்றாமட்டி

ஊனதிலழிஞ்சிலத்தி யுரியதோரமுக்கிராய்வேர்

கானதிற்குறிஞ்சிவேருங் கருநொச்சிவேருங்கூட்டே”

மேற்கூறிய குணங்களைக் கண்டு பயப்படாதே. இதற்கு மருந்தாக நொச்சி, தயிர்வேளை, பிள்ளைக்கத்தாளை, தேள்கொடுக்கி, சிற்றாமட்டி, அழிஞ்சில், அத்தி, அமுக்கிரா, சிறுகுறிஞ்சாவேர், கருநொச்சிவேர், இவை வகைக்கு ஒரு கழஞ்சு எடுத்து பொடித்து,

“கூட்டுநீயேலங்கோட்டங் குளவிந்தமரத்தைகுக்கி

லீட்டுசாதிக்காய்நெல்லி யியற்கராம்புடன்கச்சோலம்

நாட்டியவசம்புமஞ்சள் நற்பூதவிருக்க முள்ளி

தீட்டுநல்லெண்ணெய்நாழி திகழ்பசுப்பாலுநாழி”

முன்கூறிய சரக்குடன் ஏலம், கோட்டம், குளவிந்தம்,சித்தரத்தை, குக்கில், சாதிக்காய், நெல்லிமுள்ளி, கராம்பு, கச்சோலம், வசம்பு, மஞ்சள், பீநாறி, உள்ளி, வகை ஒருகழஞ்சு எடுத்துப் பொடித்து இருவகைத் தூள்களையும் கலந்து ஒருநாழி நல்லெண்ணெய் ஒரு நாழி பசுப்பாலும் கலந்து (600மி.லீ)

“நாளிருநாலுமூறி நாட்டுநற்சரக்கும்வேருந்

தூளிதாயரைத்துவிட்டே துகழறுமந்தபாகங்

கோளிலாதறவடித்துக் குலவியசிரத்தில் வார்க்க

கேளில் சூரியவாதந்தான் கெடிகெடவோடுங்காணே”

எட்டுநாட்களுக்கு இக்கசாயத்தை ஊறவிட்டு சரக்குகளையும் வேர்ச்சரக்குத்தூள்களையும் ஒன்றாக கலக்கி மணற்பாகமாக எரித்து வடித்து எடுக்க வேண்டும்.இத்தைலத்தை தலைக்கு வைத்துவர சூரியவாதம் பயந்து விட்டு நீங்கும்.





No comments:

உள நெருக்கீடுகளில் சித்த மருத்துவத்தின் பங்கு.