Wednesday, August 19, 2020

உப்பு - Salt

ஏன் நாம் உப்பிட்டவரை ஆயுள் உள்ளவரை நினைக்கவேண்டும்? 

எமது ஆரோக்கியத்தில் பெரும்பங்கு வகிப்பது உப்பு. மனித குல முன்னேற்றத்துடன், அதாவது மனிதன் சமைத்துண்ண ஆரம்பித்ததிலிருந்து மனிதனின் உணவின் சுவையில் முக்கிய பங்கினை உப்பு வகித்து வருகின்றது. மனிதனுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களில் ஒன்றான சோடியம் (Na) உப்பினிலே தாராளமாக காணப்படுவதுடன், உப்பினை உணவுடன் நாம் உள்ளெடுப்பதன் மூலம் எமது உடலுக்கு கிடைக்கின்றது. கடுமையான உடல் உழைப்பாளிகளுக்கு சாதாரனமானவர்களை விட உப்புச்சத்து அதிகமாக தேவைப்படுகின்றது. சாதாரணமான ஒருவருக்கு ஒரு நாளைக்கு 5 கிராமிலும் குறைவான உப்பு போதுமானதாக உள்ளது. எனவே ஒருவர் ஆகக்கூடுதலாக 5 கிராம் உப்பு உணவுக்கு சேர்த்துக்கொள்ளலாம். (< 5g / day - அண்ணளவாக ஒரு தேக்கரண்டி). 

  ஏன் நாம் உப்பின் பாவனையை கட்டுப்படுத்த வேண்டும்? 

 பொதுவாக உப்பு கூடுதலாக உணவுடன் உள்ளெடுக்கும்போது, இரத்த அழுத்தம் (Blood pressure) அதிகரிக்கின்றது. அதிலும் இந்த அதிகரிப்பானது வயதுடன் அதிகமாகக் காணப்படுகின்றது. இதனாலேயே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு உப்பு தவிர்க்க அறிவுறுத்தப்படுகின்றது. அத்துடன் உப்பு அதிகமாக உள்ளெடுக்கப்படும்போது, உடலில் இருந்து கல்சியம் ஆனது சிறுநீருடன் வெளியேற்றப்டுகின்றது. இதனால் உடலுக்கு கல்சியத்தின் தேவை அதிகரிக்கின்றது. போதுமான அளவு கல்சியம் உள்ளெடுக்கப்படாதபோது  உடலில் உள்ள கல்சியம் எடுக்கப்படுகின்றது. இதனால் என்பு, என்புமூட்டுக்கள் சம்பந்தமான பிரச்சினைகள் உருவாகின்றன. பொற்றாசியம் உயர்வாக உள்ள உணவுவகைகள் இரத்த அழுத்தத்தை குறைக்கின்றன. 

பழவகைகள், மரக்கறிவகைகளில் பொற்றாசியம் உயர்வாக காணப்படுவதால், மேற்படி உணவுகள் அதிகமாக உட்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றது. இதனாலேயே முன்னோர்கள் உணவுக்கு குறைந்தளவு உப்பினைசேர்த்து உள்ளனர். மேலதிகமாக உப்பு சுவை தேவைப்படுவோர், உணவுடன் உண்கலத்தில் வேறாக வைக்கப்படும் உப்பில் இருந்து சேர்த்துக்கொள்ளலாம். 

இதனை பரராசசேகரம் என்னும் வைத்தியநூலில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. 

" சுத்தியா லமுதந் தன்னைத் துலங்கவே படைத்த பின்பு சுத்தியாஞ் சலமுப் போடு சுவைக்கறி சூழ வைத்துச் சுத்தியால் நெய்வே தித்துச் சூழ்ந்துமுக் கால்நீர் விட்டுச் சுத்தியா போசனங்கள் கொள்வது சுத்தி யாகும்."                -பரராசசேகரம் வைத்தியம். 

சுத்தப்படுத்திய உண்கலத்தில் சோற்றினைப்படைத்து நீர், உப்பு, சமைத்த சுவையான கறிவகைகளை சூழவைத்து நெய்விட்டு, உண்கலத்தை நீரினால் மூன்றுமுறை சுற்றி நீர்தெளித்து உணவை உட்கொள்ளவேண்டும். என கூறப்பட்டுள்ளது. தற்போது உப்பினை குறைத்து பாவிக்க சொல்வதுடன், அயோடின் சேர்ந்த உப்பினை பாவிக்க சொல்லப்படுகின்றது. இதனால் தைரொயிட் தொடர்பான பிரச்சினைகள், குறைபாடுகள் தவிர்க்கப்படுகின்றன. அயோடின் குறைபாட்டால் மனநலகுறைபாடுகள், உடல் வளர்ச்சி, விருத்திக்குறைபாடுகள் ஏற்படுகின்றன. 

  அயோடின் கலந்த உப்பினை எவ்வாறு பபயன்படுத்துவது? 

 கறுத்த, அல்லது கருமைசார்ந்த போத்தல்களில், வெப்பம் தாக்காத இடங்களில் வைத்திருக்க வேண்டும். (அடுப்பில் இருந்து தள்ளி வைத்திருக்கவேண்டும்.) 
அயோடின் கலந்த உப்பினை உணவுடன் சேர்க்கும்முன் நீரினால் கழுவக்கூடாது.
 உணவு அவிந்தபின்னரே அல்லது சமைக்கப்ப்ட பின்னரே உப்பு சேர்க்கப்பட வேண்டும். 

உப்பு பாவனையை எவ்வாறு குறைத்துக்கொள்ளலாம்? 

1. உணவுக்கு சேர்க்கப்படும் உப்பின் அளவினை பகுதத்தல், சரியான அளவுகளில் அளவிடுதல், வேறு சுவையூட்டிகளை சேர்த்துக்கொள்ளல்.

 2. எந்தெந்த உணவுகளுக்கு உப்பு சேர்க்கப்பட்டுள்ளது? என்பதை அறிந்து அதற்கேற்றவாறு உப்பினை சேர்த்துக்கொள்ளல்.

 3. தயாரிக்கப்ட்ட உணவுகளில் சேர்க்கப்ட்ட உப்பின் அளவுகளை சுட்டிகளில் பார்த்து தெரிந்தெடுத்தல். 

4. வியாபார ரீதியாக தயாரிக்கப்பட்ட உணவுகளை தவிர்த்தல். காரணம் உணவு தயாரிப்பின்போது அதிகளவிலான உப்பு சேர்க்கப்படுகின்றது.

 5. குழந்தைகளுக்கு உப்புச் சுவையினை , உப்பினை தாமதமாக அறிமுகப்படுத்தல். 

இப்போது பல பெற்றோர்கள் உப்பினை தாமதமாக அறிமுகப்படுத்துகிறோம் என்று கூறிக்கொண்டு உணவினில் உப்பே சேர்க்காது விடுகின்றனர். அத்துடன் கடைகளில் தாராளமாக உப்புக்கள் சேர்க்கப்பட்ட தின்பண்டங்களை வழங்குகின்றனர், இது தவறு. 

 உப்புப்பாவனையில் எமது தமிழ் சமுதாயம் எவ்வாறு மேம்பட்டு இருந்தது என்பதற்கு பரராசசேகரத்தில் உள்ள பின்வரும் பாடல் உதாரணமாகின்றது. 

" மிக்கவா தர்க்காம் நித்தம் விரும்புகல் லுப்புத் தானும் தக்கவெம் பித்தத் தோர்க்காஞ் சமுத்திர லவணந் தானும் ஒக்குமே சேற்ப னத்தோர்க் குரைத்தவிந் துப்புத் தானும் முக்கணர் விந்தோ டாதி முப்பிணிக் கிந்துப் பீடாம்."    -        பரராசசேகரம் வைத்தியம். 

வாத உடம்பினருக்கு கல்லுப்பும், பித்த உடம்பினருக்குச் சமுத்திர உப்பும், கப உடம்பினருக்கு இந்துப்பும் உகந்தது எனவும், முக்கண் உடைய சிவனினால் படைக்கப்பட்ட, விந்திலிருந்து உருவாகிய மனிதனுக்கு ஏற்படும் அனைத்து பிணிகளுக்கும் இந்துப்பு சிறந்ததாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக தமிழ் மருந்துக்கடைகளில் கிடைக்கும் மேற்படி உப்புக்களை பற்றி தற்போது பெரும்பாலனவர்களுக்கு தெரியாது. 

அத்துடன் பெரும்பாலான சித்த மருத்துவர்கள் அலோபதியை கொள்ளையை அடிப்படையாக கொண்டு மருத்துவம் பார்க்கின்றமையால், வாத, பித்த, சிலேற்பன உடற்தன்மைகளும் அதற்கேற்றாற்பொல மருத்துவம் பார்க்கும் நடைமுறையும் குறைந்து வருகின்றமை எமது அறியாமையையும், பாரம்பரியங்களை பேணுவதில் உள்ள அசிரத்தையையும் காட்டி நிற்கின்றது. இவை ஆய்வுக்குரியன. சரியான முறைகளில் உப்பிட்டிருப்பின் உயிர் உள்ளளவும் நினைப்போம். பாரம்பரியங்களை பேணுவோம், வளமோடு வாழ்வோம்.

Sunday, February 02, 2020

கோரோசனை மாத்திரை

இன்று யாழ் நகரில் உள்ள தமிழ் மருந்துக்கடையில் ஒருவர் பிறந்த குழந்தைக்கு கொடுப்பதற்காக கோரோசனை வேண்டும்போது அவதானித்த விடயம்....
1. அவர் வேண்டியது கோரோசனை மாத்திரை அல்ல. தனியான கோரோசனை.
2. வேண்டிய கோரோசனையும் உண்மையான கோரோசனை அல்ல.
3.அனேகமாக நான் நினைக்கின்றேன் மாட்டின் பித்தம், பச்சைக்கற்பூரம் ,மஞ்சள் சேர்த்தரைத்த போலியானதொன்று.
4.இதன் விலை 10g -350 ரூபா
5. உண்மையான சுத்தமான கோரோசனையின் விலை அனேகமாக 1g -குறைந்தது 2500ரூபாவுக்கு மேல் வரும்.
தயவுசெய்து கடைகளில் குழந்தைகளுக்கான மருந்துகளை மருத்துவர்களின் சிபாரிசு இன்றிவேண்ட வேண்டாம். அரச இலவச வைத்தியசாலைகளை நாடவும். அல்லது பாரம்பரிய சித்தமருத்துவர்களை நாடவும்.

சாதாரன மக்களால் கோரோசனை என்று வழங்கப்படுகின்ற கஸ்தூரி மாத்திரை, யாழ்ப்பாணத்திலே பிள்ளைகள் பிறந்து 40 நாட்களின் பின்னர் கிரந்திக் கொதியெண்ணெய்யுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகின்றது.  இதுகுழந்தைகளை நீராட்டும் நாட்களில்டிசிறப்பாக வழங்கப்படுகின்றது. தற்காலத்தில் காணப்படும் தடுப்பூசி மருந்துகளைப்போன்றே நோய்கள் ஏற்படாதிருக்க வழங்கப்பட்டு வந்திருக்கின்றது. சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் பலவிதமான நோய்நிலைகளில் இது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
கஸ்தூரி,கோரோசனை, குங்குமப்பூ, தாய்ப்பால் என்பவற்றை சேர்த்து செய்யப்படும் இம்மாத்திரை தற்காலத்தில் மேற்கூறிய கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ என்பன சுத்தமானதாகவும் உண்மையானதாகவும் பெற்றுக்கொள்ளமுடியாது உள்ளதினால், “உரை மாத்திரை” எனப்படும் மாத்திரை தற்போது பயன்படுத்தப்பட்டுவருகின்றது.
நோய்வராமல் இருக்கவும், காய்ச்சல், கிரந்தி, மலக்கட்டு, தோடம் போன்ற நோய்நிலைகளில் சித்தமருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்தல் சிறந்தது.

Monday, January 27, 2020

வேர்க்குரு, கோடைக் கொப்பளம்

கோடைக் காலத்தில் வியர்வை அதிகமாகும். சிலருக்கு இதனால் தோலில் நமைச்சல் உண்டாகி சிறு சிறு குருக்கள் அல்லது பருக்கள் தோன்றி தோலில் கடி உண்டாகும்.

இது முகம், கை, மார்பு, முதுகு போன்ற இடங்களில் அதிகம் உண்டாகும். கடி, தினவுடிஏற்படும்போது சொறிந்தால் அழற்சி, எரிவு ஏற்பட்டு கொப்பளங்கள் உருவாகும். கிருமி தொற்றினால் சிதழும் காணப்படும்.

இவற்றினை தடுக்க உள்ளழலாற்றி தன்மையுடைய நன்னாரி குடிநீர், இளநீர், மோர், சந்தன ஊறல் குடிநீர் முதலியவற்றை அருந்திவரலாம்.
வேர்க்குரு உள்ள இடங்களுக்கு,

1.சந்தனப்பூச்சு,
2. சந்தனம் (1 பங்கு), பச்சைக்கற்பூரம் (1/4 பங்கு) என்பவற்றை சேர்த்து நீர்விட்டரைத்து பூசலாம்.
3. பனைநுங்கு நீர்
4. வெந்நீர்விட்டரைத்த தேங்காய்ப்பாலில் சீரகத்தை அரைத்துப் பூசலாம்
5. வெந்நீர்விட்டரைத்த தேங்காய்ப்பாலில் ஏலம், கார்போகரிசி, ஆலம்பட்டை அல்லது அரசம் பட்டை என்பவற்றை சேர்தரைத்து பூசலாம்.

 மேற்படி முறைகளை த்துவர்களின் ஆலோசனையுடன் பயன்படுத்திக்கொள்ளவும்.

Monday, January 20, 2020

சிறுநீரகக் கற்கள்.



மக்களில் பலரது இன்றைய முறைப்பாடு சிறுநீரகத்தில் கல் என்பதாகும். இதற்கான தீர்வு சித்தமருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. அகத்தியர் 2000 எனும் நூலில் பின்வரும் பாடல்கள் மூலம் கூறப்பட்டுள்ளது.

மாவிலங்கு வர்நிலத்தில் வடக்கெழுந்த வேரும்
வருமினியப் பெருவழியில் முட்படா நெருஞ்சிவேரும்
பேயிலகு சுடுகாட்டுப் பிராமுட்டி வேரும்
பீளையிவை நிற்கக் சிறுபூளைவேரும்
காயிலங்கு மொழிமடவார் யட்டொன்றாய்க் காய்ச்சி
கல்லெரிப்ப னெள்பதக்குச் சொல்லும் வகை கேளீர்
வாயிலங்கு வைத்திடிலோ வந்துவிழுங்கல்லு
அடுத்தருந்தில் சாற்றிட்டுப் படுத்தகல்லும் விழுமே.

உவர்நிலத்தில் விளையும் மாவிலங்கின் வடக்கே போகும் வேர்
நெருஞ்சில் வேர்
சுடுகாட்டில் விளையும் பேராமுட்டி வேர்
பீளை வேர்
சிறுபீளை வேர்
             
இவற்றை சமனெடை எடுத்து (தலா 10கிராம்) ஒரு போத்தல் (750மி.லீ) நீர்விட்டு எட்டில் ஒன்றாக வற்றவைத்து மருத்துவரின் ஆலோசனைக்கமைவாக அருந்துதல் வேண்டும்.

அல்லது,
முத்தானாளடித்த காற்று முதுநரிக்கொம்பு வேரு
மித்திரன் குதிரைவாலு மிலாமிச்சு சந்தனமும்
அந்தமிலாளை யேத்தி அடைவுடன் குடித்தபோது
மந்தமுமற்றுக் கல்லு மாசறவிட்டுப்போமே.

வெங்காரம்
முதியார்கூந்தல்
சந்தனத்தூள்
சுக்கு
இலாமிச்சை வேர்

இவற்றை சமனெடை எடுத்து (தலா 10கிராம்) ஒரு போத்தல் (750மி.லீ) நீர்விட்டு எட்டில் ஒன்றாக வற்றவைத்து மருத்துவரின் ஆலோசனைக்கமைவாக அருந்துதல் வேண்டும்.

தற்காலத்தில்,

சாதாரண மாவிலங்கம் பட்டை
நெருஞ்சில் வேர்
நீர்முள்ளிவேர் என்பவற்றின் குடிநீரையும் வாழைத்தண்டின் சாற்றினையும் மருத்துவரின் ஆலோசனைக்கமைவாக பயன்படுத்த கல் கரையும்.

உள நெருக்கீடுகளில் சித்த மருத்துவத்தின் பங்கு.