Tuesday, August 31, 2021

கொரனாவும் தனிமனித, சமூகப் பிரச்சினைகளும்

உயிர்கள் கூடிக் கதைப்பதில், கொண்டாடுவதில், பகிர்தலில் மகிழ்வுறும், திருப்தியுறுவன. அதிலும் மனித இனம் இதில் சந்தோசத்தை அனுபவிப்பதும், ஆறுதலடைவதும், வாழ்க்கையை சிறப்பாக கொண்டு செல்வதிலும் சமூகப்பிராணியாக நேரடியான தொடர்பாடலிலும், கூட்டாக வாழ்வதில் தங்கியே வாழ்கின்றான்.

நேரடியாக தொடர்பாடல்களை மேற்கொள்ளும்போது திருப்தியடையும் விதமாகவே மனிதனின் மரபணு அமையப் பெற்றுள்ளதாக உளவியளார்கள் கூறுகின்றார்கள். இந்நிலையில் தொடர்பாடல் சாதனங்களின் வளர்ச்சி மனிதர்களின் சமூக நிலையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தினாலும், தொடர்பாடல் சாதனங்களின் வளர்ச்சியில் நன்மைகள் அதிகம் காணப்பட்டாலும், தீமைகளும் காணப்படத்தான் செய்தன. இதனால் பல சமூகப்பிறழ்வுகள், உறவுகளில் இடைவெளி என பல பிரச்சனைகள் மக்களிடையே மெலிதான வெறுமையை, குறிப்பாக வயோதிபர்களிடம் ஏற்படுத்தியிருக்கின்றன.

இதனால் வெறுமை, தனிமை, பதகளிப்பு, மனச்சோர்வு, விரக்தி, தற்கொலை எண்ணங்கள் என பல்வேறு உளச்சிக்கல்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

இதன் இரண்டாம் அலையாக 2020 மார்ச்சில் இருந்து இன்று வரை கொரனா நோய்த்தொற்றின் காரணமாக வலிந்து உருவாக்கப்பட்ட தனிமை, தனிமைப்படுத்தல்கள், சமூக இடைவெளி, முகக்கவசம், நோய்த்தொற்று மீதாக பயம், பொருளாதார நெருக்கடி என்பன மக்களிடம் அதிகரித்து இன்று பல உளரீதியிலான பிர்ச்சினைகளை எதிர்கோள்ள வேண்டியவர்களாக இருக்கின்றனர்.

ஆரம்பத்தில் தொலைபேசி, இணையமூல தொடர்பாடல்களுக்கு ஓரளவு பழக்கப்பட்டிருந்த மக்களுக்கு கொரனா முடக்கங்கள், தனிமைப்படுத்தல்கள், பயனத்தடைகள் ஏற்படுத்திய பாதிப்புக்கள் பெரிதாக தெரியவில்லை. அத்துடன் கொஞ்சக்காலத்துக்குத்தானே என்ற உணர்வும் உளத் தாக்கங்கங்களை அதிகப்படுத்தப்படுத்தவில்லை.

காலம் போகப்போக மாதம் மாதங்களாகி, வருடம் வருடங்களாக…. நோய்த்தொற்று தொடர்பான பயமும், தொழில்களில் ஏற்பட்ட நெருக்கடிகள், நாட்டின் பொருளாதார தொய்வும் அதனால் ஏற்பட்ட பொருட்களின் விலையுயர்வுகளும் மக்களிடம் பலவிதமான உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தியதுடன், தலையிடி, நாரிநோ, மாதவிடாய் தொடர்பான கோளாறுகள்,  என பல மெய்பாட்டு முறைப்பாடுகளும், உடற்பருமன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் என தொற்றாநோய்களின் தீவிரமும் அதிகரித்துள்ளன. அதிலும் மக்கள் வரப்பிரசாதமாக எண்ணி அதீத நம்பிக்கை கொண்ட தடுப்பூசிகள் தொடர்பான வதந்திகள், தடுப்பூசி போட்டவர்களுக்கும் ஏற்பட்ட நோய்த்தொற்று இவ்வாறான பிரச்சினைகளை மேலும் அதிகரித்துகொண்டது.

பொதுவாக மனித நடத்தையானது நீண்ட கால உளநெருக்கடிகள் ஏற்படும்போது மாற்றமடையத் தொடங்குகின்றன. ஆனால் அந்நடத்தை மாற்றங்கள் எவ்வாறானதாக அமையும் அது தனிமனித வாழ்க்கைக்கு, சமூக வாழ்க்கைக்கு இசைவானதாக இருக்குமா என்பதே கேள்வியாகும்.

இன்று சமூகவலைத்தளங்களில் கேலிக்குரியதாகவும், நகைச்சுவையாகவும் பரிமாறப்படும் படங்கள் நாடு முடக்கப்படும்போது, அல்லது ஏதேனும் பயனத்தடைகள் வரும்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் முண்டியடித்து வரிசையில் நிற்பது. ஆனால் இதில் ஒரு பகுதியினர் மதுபானசாலைகளில் வரிசையில் நிற்பது என்பது எமது பாரம்பரிய நடத்தைமாற்றங்களில்  முக்கியமானதொன்றாக கவனிக்கப்படவேண்டியது. திருமணங்கள் பேசும்போது மாப்பிள்ளை பியர் மட்டுந்தான்! குடிக்கிறவர் என்பதை சர்வசாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்படுவது. அதேபோல் க.பொ.த. உயர்தரத்தில் வெற்றியடைந்தமைக்காக வீட்டில் நடாத்தப்படும் கொண்டாட்டத்தில் கூட பியர் பரிமாறுவது. இவ்வாறான சமூக மாற்றங்கள் படிப்படியாக நீண்டகால போரின் பின்னரான மனநிலை மாற்றங்களாக ஏற்பட்டுள்ளன. இவை தொடர்பாக சமூகமட்டத்திலோ, அரசியல் மட்டத்திலோ, நிர்வாக மட்டத்திலோ போதிய விழிப்புணர்வோ, செயற்பாடுகளோ இல்லாமை கவனத்திற் கொள்ளப்படவேண்டியது ஆகும்.

பொதுவாக இவ்வாறான அறிவியலை மிஞ்சிய இயற்கை அனர்த்தங்கள், நோய்கள் ஏற்படும்போது மக்களிடையே பாரம்பரியங்கள் தொடர்பான நம்பிக்கைகள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள், கலாச்சாரங்கள், தெய்வநம்பிக்கைகள் அதிகரித்துக் காணப்படும். ஆனால் நம்பிக்கைகள் நம்பிக்கைகளாகவே இருக்கும் நடைமுறைப்படுத்தமாட்டார்கள். கடவுள் விட்ட வழி என தமது பொறுப்புக்ளை தட்டிக்கழிக்கும் மனோநிலைக்கு தள்ளப்பட்டிருப்பார்கள்.

இப்படியான நிலையில் சமூகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், ஆன்மீகத் தலைவர்கள் மக்களை சரியான வழிக்கு திசைதிருப்புதல் வேண்டும். இது அவர்களது கட்டாயக் கடமையாகும். ஆனால் இவ்வாறான செயற்பாடுகளுக்கு அவர்கள் சரியான தகுதியுடையவர்களாக, விழிப்புணர்வைக் கொடுக்கக் கூடியவர்களாக, அறிவியல் ரீதியலாக பிரச்சினைகளை அணுகக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும். மாறாக இவ்வாறன சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி மூடநம்பிக்கைகளை விதைப்பவர்களாக இருத்தல் கூடாது.

இன்றைய சமூகத்தில் சமூக மாற்றங்களில் முக்கியமாக செயற்படுபவர்கள் மேற்கூறியவர்களை விட ஊடகவியலாளர்களே. முக்கியமாக சமூகவலைத்தள ஊடகவியலாளர்களே. இவர்கள் தனியே முந்திக்கொண்டு, பரபரப்புக்காக செய்திகளை வெளியிடாமல் சமூகப்பொறுப்புடன், ஒவ்வொரு களநிலைமைகளையும் ஆராய்ந்து, உரிய துறையினருடன் கலந்துரையாடி தகவல்களைப் பெற்று செய்திகளைப் பதிவிட வேணடும்;. உதாரணமாக இன்றைய சூழலில் தடுப்பூசி தொடர்பான ஏராளமான வதந்திகளும், தவறான தரவுகளுமே பதியப்படுகின்றன. சாதாரணமாக பதிவிடுபவர்கள் ஒன்றை யோசிப்பதில்லை, அதாவது உணர்ச்சி பூர்வமாக போதிய ஆதாரங்கள் இல்லாது தங்களைச் சுற்றியுள்ள சில சம்பவங்களை அல்லது நபர்களை மட்டும் வைத்துக்கொண்டு, அல்லது ஆதாரமற்ற வேறு சமூகவலைத்தள செய்திளை வைத்துக்கொண்டு பதிவுகளை மேற்கொள்ளும்போது, தடுப்பூசியை உருவாக்கும்போது எவ்வளவு தூரம் எத்தனை துறைசார் நபர்கள், எத்தனை அமைப்புக்கள் அவற்றில் தொழிற்படுகின்றார்கள் என்பதை பற்றியும், நாம் இந்தக் காலத்தில் என்ன செய்தோம் என்பது பற்றியும் ஆகும்.

இவ்வாறன பொறுப்பற்ற பதிவுகள், ஏற்கனவே நோய்த்தடுப்பில் ஈடுபடுபவர்களை சிக்கலிலும் அவர்களது பணிச்சுமையை அதிகரிப்பதிலுமே செல்வாக்கு செலுத்துவதோடு அவர்களை உள ரீதியாக மனச்சோர்வுக்கும், விரக்திக்கும், சலிப்புக்குமே தள்ளுவதனால் அவர்களது பணியில் தொய்வுநிலையையும் ஏற்படுத்திவிடும். இதைவிட ஏற்கனவே நோய் தொடர்பான அச்சல் உள்ள மக்களை மேலும் அச்சத்துக்குள்ளாக்குவதோடு பல உள ரீதியிலான நெருக்கீட்டுக்கு மக்களை கொண்டு செல்வதாக அமைகின்றது.

இவ்வாறான செயற்பாடுகள் காலப்போக்கில் தொற்றா நோய்களின் தீவிரத்தை அதிகரிக்க கூடும். அதேபோல் தொற்றா நோய்களால் ஏற்படும் இறப்புக்களையும் அதிகரிக்கக் கூடிய சாத்தியக்கூறுகளே அதிகம்.

பெருந்தொற்றான கொரனா காலத்தில் ஏற்பக்கூடிய உடல் உளப் பிரச்சினைகள் ஏற்படக் காரணங்கள்.

1. நோய் தொற்றி விடுமோ என்ற பயம்,

2. பொருளாதார நெருக்கடி தொடர்பான பயம்.

3. நோய்த்தொற்று தொடர்பான தொடர் செய்திகள்.

4. விரும்பியோ விரும்பாமலோ நீண்ட கால நோய்த் தொற்று, நோய்த் தொற்று தடுப்பு செயற்பாடுகளில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம்.

5. தொழில் இழப்பு.

6. மங்கல நிகழ்வுகள் தடைப்படல் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட நிகழ்வுகள்.

7. நோயினால் ஏற்படும் இறப்புக்கள்.

8. நீண்ட கால நேரடி கல்விச் செயற்பாடுகள் இல்லாது இருத்தல் மற்றும் தொழிநுட்ப ரீதியிலான கல்விச் செயற்பாடுகள்.

9. பொருட்களின் விலை அதிகரிப்பு.

10. நண்பர்கள், உறவினர்களுடன் இயல்பாக ஒன்றுகூட முடியாமை.

11. தனிமைப்படுத்தல்களில் ஏற்படும் குடும்ப உறுப்பினர்களின் பிரிவு.

உடல் ரீதியிலான பிரச்சினைகள்

1. உடற்பயிற்சி, உடற்தொழிற்பாடுகள் குறைவு, உடற்பருமன் அதிகரிப்பு.

2. மெய்பாட்டு முறைப்பாடுகள் - தலையிடி, உடல் குத்துழைவு, நாரிநோ, பெண்களில் மாதவிடாய் தொடர்பான ஒழுங்கீனங்கள்.….

3. தொற்றா நோய்களின் அதிகரிப்பு.

உள ரீதியிலான பிரச்சினைகள்

1. பயம் - நோய் தொற்றிவிடுமோ என, பொருளாதார நிலை தொடர்பாக, தொழில் நிலையின்மையால் ஏற்படும் எதிர்காலம் பற்றி….

2. புதகளிப்பு - கூடுதலாக நோய்த்தொற்று தொடர்பான எதிர்மறையான தொடர் செய்திகள். ….

3. மனச்சோர்வு – நீண்டகால நோய்த்தொற்று, முடக்கம், தனிமை, தனிமைப்படுத்தல்கள், தொழில் இழப்புக்கள்,  இறப்புக்கள் ….

4. விரக்தி – நோய்த்தொற்றின் தொடர் அலைகள், முடிவில்லா தன்மை…..

5. மெய்ப்பாட்டு முறைப்பாடுகள் - முக்கியமாக தடுப்பூசி தொடர்பான பக்க விளைவுகள்…..

6. பலவீனமடைந்திருப்பதாக உணர்தல்.

7. தேவையற்று கோபப்படல்.

8. தற்கொலை எண்ணங்கள், தற்கொலைகள் - நோய்த்தொற்றை சமூக இழுக்காக கற்பனை செய்வதால், தொழில் இழப்பு பொருளாதார நெருக்கடி…

தனிமனித சமூக நடத்தை மாற்றங்கள்

1. குடும்பத்தில் பிரச்சினைகள், வன்முறைகள்.

2. நீண்ட நேர சமூக வலைத்தளப் பாவனையும் அதற்கு அடிமைப்படுதலும்.

3. மதுப்பாவனை அதிகரிப்பு.

4. நோய் தொடர்பாக அனைவரையும் சந்தேகத்துடன் பார்த்தல், விலகியிருத்தல்.

5. புயத்தினால் அடிக்கடி நோய்ப்பாதுகாப்பு முறைகளை தேவையற்று செய்தல் - நிர்ப்பந்த பீடிப்புக் கோளாறுக்குள்ளாகுதல்.

மேற்படி பல்வேறு உடல், உள, நடத்தை, சமூக மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இவைதொடர்பான சரியான பகுத்தறிவுசார்ந்த விழிப்புணர்வு ஒவ்வொருவரிலும் ஏற்படுதலும், ஏற்படுத்துதலும் வேண்டும். இதற்கு அனைவரும் அனைவருக்கும் அனைத்து வழிகளிலும் உதவுதலுடன், அன்புடன் ஆதரவாக இருத்தலானது ஆரோக்கியமான சமுதாயத்தை நிலைத்திருக்க உதவும்.


No comments:

உள நெருக்கீடுகளில் சித்த மருத்துவத்தின் பங்கு.