Friday, September 24, 2021

கொரனா தொற்று நோய்க்குப் (COVID 19) பின்னரான ஆரோக்கிய மேம்பாடு.

பொதுவாக நோய்கள் மாறியபின் ஆரோக்கியத்துக்கான பராமரிப்பு சித்த மருத்துவத்திலும் சரி தமிழர் பாரம்பரியத்திலும் சரி மிகவும் ஆழமாக கரிசனை காட்டப்படுள்ளது. 

 முக்கியமாக உணவு முறைகள், வாழ்வியல் நடைமுறைகளில் மாற்றம், சிறப்பு சமய வழிபாட்டு முறைகள், உறவினர்கள், நண்பர்கள், குடும்ப மருத்துவர்களது சமூகரீதியிலான அன்பான உள ஆதரவுகள், சித்தமருத்துவர்களது பத்திய அபத்திய நடைமுறைகள், நடைமருந்துகள் என நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் ஆரோக்கிய மேம்பாட்டில் சமூகத்தின் பல மட்டங்களில் இருந்தும் பலவிதமான கரிசனைகள் காணப்படுகின்றன.


தற்போதைய நிலையில் கொரனா தொற்று நோய்நிலையின் பின்னரான உள, உடல் உபத்திரவங்கள் அதிகரித்துக் காணப்படுவதுடன், தடுப்பூசியின் பின்னரான சிறு சிறு உபத்திரவங்களும் மக்களால் முன்வைக்கப்படுகின்றன. இவற்றுள் மெய்ப்பாட்டு முறைப்பாடுகளும் (Somatic complaints) அடங்குகின்றன. 

அதாவது உள ரீதியாக ஒருவருக்கு உடல்ரீதியிலான உபத்திரவங்களை உணர்தல். இங்கு உண்மையாக உடலியல் நோய் நிலைகள் இராது. 

 இன்று பொதுவாக கொவிட்-19 நோய்நிலைக்கு பின்னரான குறிகுணங்கள்.

 1. மூச்சுக் கஸ்டம் அல்லது மூச்சு வாங்கல் (Difficulty breathing or shortness of breath)

 2. களைப்பு அல்லது இழைப்பு (Tiredness or fatigue)

 3. உடலோ மூளையோ விரைவாக செயற்படும்போது மேற்படி குறிகுணங்கள் தீவிரமடைதல். ஒருமுகப்படுத்தி சிந்திக்க முடியாதிருத்தல் (Symptoms that get worse after physical or mental activities, Difficulty thinking and concentration ) 

4. இருமல் (Cough)

 5. தலையிடி, நாரி நோ உழைவு, நெஞ்சு, வயிற்று நோ (Headache, Backpain,Chest or stomach pain) 

6. நெஞ்சு படபடப்பு (Fast-beating or pounding heart) 

7. மூட்டுக்கள், தசைகளில் நோவுதல் அல்லது குத்தி குத்தி வலித்தல் (Joint or muscle pain- Pins-and-needles feeling) 

8. வயிற்றுப்போக்கு (Diarrhea)

9. நித்திரைக்குழப்பம் (Sleep problems) 

10. காய்ச்சல் (Fever)

11. நிற்கும்போது தலை சுற்றல் (Dizziness on standing) 

12. சர்ம தடிப்பக்கள் (Rashes)

13. மனநிலை மாற்றங்கள் (Mood changes) 

14. மணம் சுவைகளில் மாற்றம் (Change in smell or taste) 

15. பெண்களில் மாத சுகயீனத்தில் மாறுதல்கள் (Changes in menstrual period cycles) 

 மேற்படி குறிகுணங்கள் அல்லது உபத்திரவங்கள் குறுகிய காலத்துக்கோ நீண்ட காலத்துக்கோ காணப்படலாம். 

ஆரோக்கிய மேம்பாட்டுக்கான வழிமுறைகள். 

 1. அறிவுசார் சிகிச்சை (Cognitive therapy) 
2. உள ரீதியிலான ஆதரவு 
3. உணவு முறையில் மாற்றம் 
4. ஆன்மீக ஆதரவு 
5. பிராணாயாமம் 
 6. உடற் பயிற்சியும் யோகாசனமும் 
7. சித்தமருத்துவ சிகிச்சைகளும் நடைமருந்துகளும். 



  1. அறிவுசார் சிகிச்சை (Cognitive therapy) 

 அறிவுசார் சிகிச்சை என்பது நிகழ்கால பிரச்சினைகளை அறிவியல் ரீதியாக தற்கால நடைமுறைகளுக்கு ஏற்ப பார்ப்பதாகும். 

கடந்தகால அனுபவங்களைவிட தற்போதுள்ள நோய்நிலை, அதுபரவும் விதம், அதனால் ஏற்படும் பாதிப்புக்கள், பாதிப்புக்களில் தனியே உடல் ரீதியிலான பாதிப்புக்கள், இறப்புக்கள் என்பதைவிட உள, சமூக, பொருளாதார நிலைகளை அடிப்படையாக கொண்ட பாதிப்புக்கள் என்பவற்றை ஆராய்ந்து அதற்கேற்றவாறு பெருந்தொற்று நிலைகளை அனுகுதல் வேண்டும். 

 உதாரணமாக தடுப்பூசி போடுவதால் என்ன பயன்? தற்போதைய நிலையில் அது எவ்வாறு செயற்படுகின்றது? தடுப்பூசிகளின் பயன் முழுமையாக கிடைக்கவேண்டுமென்றால் சமூகத்தில் 75 வீதத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படவேண்டும் (மந்தை நிர்ப்பீடணம் - Herd Immunity) என்பது தொடர்பான விளக்கம் சமூகத்துக்கு ஊடகங்கள் ஊடாக சுகாதார துறையினர் மற்றும் அறிவியல்சார் துறையினரால் வழங்கப்படவேண்டும். பெருந்தொற்று தொடர்பான துறைசார் விளக்கங்களை சமூகத்தில் உள்ள அனைவரும் விளங்கக்கூடியவாறு விழிப்புணர்வுகளை ஊடகங்கள் ஊடாகவோ வேறு தொடர்பாடல் மூலமாகவோ வழங்கப்படுதல் வேண்டும். இல்லையென்றால் மூடநம்பிக்கைகளும், அவநம்பிக்கைகளும், சந்தேகங்களும் நோய்களின் தாக்கங்களை தனிமனித, சமூகரீதியாக அதிகரித்துவிடுகின்றன. 

  2. உள ரீதியிலான ஆதரவு. 

 நோய்நிலையின் போதும், அது மாறிய பின்பும் உள்ள உபத்திரவங்களாலும், நோய் தொடர்பான செய்திகளாலும், தரவுகளாலும் பெரும்பாலானோர் அதிக பீதிக்குள்ளான நிலையில் உள்ளனர். 

இதனால் பல்வேறு உளவியல் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். தனிமை, ஆதரவற்ற தன்மை, இவ்வளவுதான உறவுகள் என்ற விரக்தி, தனிமையில் ஏதேனும் நடந்துவிடுமோ என்ற பயம், தன்னால் வீட்டில் உள்ள ஏனையவர்களுக்கு நோய் வந்துவிடுமோ என்ற அச்சம், இறந்துவிட்டால் தனக்கான இறுதிக்கரிகைகள் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம், தன்னால் தொடர்ந்து ஆரோக்கியமாக வாழமுடியுமா என்ற சந்தேகம் போன்றன மனதளவில் பாரிய நெருக்கடிகளையும், ஆதரவற்ற தன்மையையும் உருவாக்கும்.

 இவற்றினை இல்லாது செய்ய இயன்றவரை நோய் வந்தவர்களுடன் தொலைபேசிகள் ஊடாக அல்லது முறையான சுகாதார பாதுகாப்புக்களுடன் தொடர்பில் இருத்தல் வேண்டும். அவர்கள் மீது கரிசனை கொண்டிருப்பதனை அவர்களுக்கு உணர்த்துதல் வேண்டும். 

உறவினர்கள், நண்பர்கள் அவ்வப்போது நலம் விசாரித்தலுடன், நேர்மறையான உரையாடல்களை பேணுதல் வேண்டும். நோய் மாறியபின் அவர்களை அரவணைத்துக் கொள்ளல் வேண்டும். அவர்களுக்கான ஆகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்துதல் வேண்டும். யாரேனும் இறப்பின் பெற்றோர், கணவன், மனைவி, பிள்ளைகள் என்போர் உடனிருத்தல் வேண்டும். இதன்போது அச்சுறுத்தல் குறைந்த நபர், தகுந்த சுகாதார பாதுகாப்புக்களுடன் உடனிருத்தல் நன்று. 

  3. உணவு முறையில் மாற்றம். 

 நோய் உள்ள நிலையிலும் சரி, மாறிய பிற்பாடும் சரி சாதாரணமாக நாம் உள்ளெடுக்கும் உணவுமுறைகளில் மாற்றம் செய்தல் அவசியமாகின்றது. உடலானது நோய்க்கு எதிராக தொழிற்படும்போது மேலதிக சக்தி தேவையாகின்றது. 

அதேபோல் சேதமடைகின்ற கலங்கள் மீளமைக்கப்படவும், கிருமிகளுக்கு எதிரான பிறபொருளெதிரிகளை உருவாக்கவும், உடல் பலவீனம் அதிகரிக்கும்போது வேறு நோய்கள் ஏற்படாதிருக்க, தொற்றுக்கள் ஏற்படாதிருக்கவும் ஊட்டச்சத்துக்கள் அவசியமாகின்றன. 

 புரதச்சத்து அதிகமாகவும், உயிர்ச்சத்துக்கள் (உயிர்ச்சத்து B வகைகள், C, D), தாதுக்கள் (Zinc, Iron) அதிகமாகவும் தேவைப்படுகின்றன. இவ்வூட்டச்சத்துக்ள இலகுவாக சமிபாடு அடையக்கூடியனவாகவும், அகத்துறிஞ்சப்படக்கூடியனவாகவும் இருத்தல் வேண்டும். 

 பழங்கள் அதிகளவில் உள்ளெடுத்தல் வேண்டும். புளிப்பான பழங்கள் நன்று. பழச்சாறுகளாக உள்ளெடுப்பது மேலதிக நீர்த்தேவையையும் நிறைவு செய்வதாக அமையும். 

போதியளவு நீர் அருந்துதல் வேண்டும். போதிய ஓய்வும், காற்றோட்டமான சூழலும் அவசியம். 

 உள்ளெடுக்கக் கூடிய உணவுகள் 

 1. உழுத்தங்களி 
2. கூழ் வகைள் 
3. கஞ்சி வகைகள் 
4. கோழிப்புக்கை (வடமராட்சியில் சிறப்பானது) 
5. சத்துமா உருண்டைகள், எள்ளுருண்டைகள் 
6. கடல் உணவுகள், முட்டை 
7. அவரையின மரக்கறிகள், பச்சை இலைவகைகள். 
8. பால் அல்லது பாலுடன் சிறிதளவு மஞ்சள், மிளகு, உள்ளி சேர்த்து குடித்தல். 
9. பனீர் 
10. பழங்களில் உலர் திராட்சை, தோடம்பழம், பப்பாசிப்பழம் …

4. ஆன்மீக ஆதரவு. 

 எமது சமூகம் ஆன்மீக நாட்டமும், இறை நம்பிக்கையும் கொண்டதாகும். அதிலும் இவ்வாறன பெருந்தொற்றுக் காலத்தில் பாரம்பரியங்கள், ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை ஏற்படுகின்றது.

 கோயில்கள், கூட்டுப்பிரார்த்தனைகள் சாத்தியம் இல்லாத நிலையில் மக்கள் கூடுதலான உளநெருக்கடிக்குள் உள்ளாவார்கள். ஆறுதல் இல்லாது போகின்றனர். தகவல் தொழில் நுட்பங்களைப்பயன்படுத்தி கூட்டுப்பிரார்த்தனைகள், தேவாரம் முதலிய திருமுறைகளை பாடுதல், பஜனைகளை ஒழுங்கமைத்தல், சமூக வலைத்தளங்கள் ஊடு சமய கருத்துகக்களை கடத்துதல் என்பன உள ரீதியிலான அமைதியையும், உளஆரோக்கியத்தையும் தரும் செயற்பாடுகளாக அமைகின்றன. 

 அகில இலங்கை சைவ மகாசபையினர் சூம் (Zoom) ஊடாக பிரதி வெள்ளிதோறும் திருமுறைகள் பாடுவதற்கு ஒழுங்கு செய்து வருகின்றனர். சமய அமைப்புக்கள் இவ்வாறான கூட்டுப்பிரார்த்தனைகளை ஒழுங்கமைப்பது சிறந்தது. குறிப்பாக முதியவர்களுக்கு இவ்வாறான தொழிநுட்ப வசதிகளை அமைத்துக்கொடுப்பது பிள்ளைகளின் கடமையாகும். 

  5. பிராணாயாமம் (மூச்சுப்பயிற்சி) 

கொரனாத் தொற்றின்போது ஏற்படும் முக்கியமான பிரச்சினை ஓட்சிசன் பற்றாக்குறையாகும். இதன்போது ஆழமான சுவாசம் நடைபெறாமையாலும் சுவாச கலங்கள் பாதிப்படைவதினாலும் குருதியில் ஒட்சிசன் செறிவு குறைவடைகின்றது. 

இதனால் உடற்கலங்களுக்குத் தேவையான ஒட்சிசன் கிடைக்காது போகின்றது. இறப்புக்கள் ஏற்படுவதற்கு முக்கியகாரணம் இதுவாகும். குருதியில் ஒடசிசன் செறிவை அளவிடுவதற்கு Pulse oximeter பயன்படுத்தப்படுகின்றது. இதன்மூலம் குருதியில் ஒடசிசன் செறிவு மட்டம் (SpO2) 95% மேல் இருத்தல் வேண்டும். இதற்கு கீழ் குறையும்போது நோயின் தீவிரம் அதிகரிக்கும். 

பொதுவாக நோய் மாறிய நிலையில் ஒடசிசன் மட்டம் குறைவடையலாம். எனவே உடலுக்குத் தேவையான உட்சிசன் அளவினைக் கூட்ட பிராணாயாமம் செய்வது அவசியமாகின்றது. ஆரம்பத்தில் மெதுவாக முடியுமான அளவுக்கு மூச்சை உள் இழுத்து வெளிவிடவேண்டும். பின்னர் படிப்படியாக பிராணாயாம முறைப்படி செய்தல் வேண்டும். படிப்படியாக நேரத்தினையும் அதிகரித்துக்கொள்ளலாம். 

பிராணாயாமம் செய்ய தொடங்கும்போது மருத்துவர்களின் ஆலோசனைய பெற்றுக்கொள்ளல் வேண்டும். 

மூச்சை உள்ளெடுத்தல், உள்வைத்திருத்தல், வெளிவிடுதல் என்பன பின்வரும் கால இடைவெளிவிகிதத்தில் முறையே அமைதல் வேண்டும். அதாவது முறையே 1:4:2 என்ற விகிதத்தில் அமைதல் வேண்டும். நோய் மாறிய நிலையில் தொடர்ச்சியாக பிராணாயாமம் செய்து வருதல் ஆரோக்கியத்தைத் தருவதுடன் யோகாசன இருக்கைகளில் இருந்து செய்யும்போது சிறப்பான பலனைத்தரும். 

  6. உடற்பயிற்சியும் யோகாசனமும். 

 பொதுவாக கொரனா தொற்றுக்குப் பின்னர் உடல் மிகவும் களைப்பாகவும், பலவீனமாகவும் காணப்படும். கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு அல்லது குறிகுணங்கள் தோன்றி குறைந்தது 14 நாட்களின் பின் குணங்குறிகள் இல்லாது போயிருந்தால், மெதுவாக நடைப்பயிற்சியைத் தொடங்கலாம். 

இதன்போது மூச்சுக்கஸ்டம், களைப்பு தோன்றினால் நடைப்பயிற்சியை நிறுத்திக் கொள்ள வேண்டும். மூச்சுக்கஸ்டமோ, களைப்போ, நெஞ்சுப்படபடப்போ இல்லாவிடின் படிப்படியாக நடையினை ஒவ்வொருநாளும் அதிகரித்துச் செல்லல் வேண்டும். நடைப்பயிற்சி 15 நிமிடத்துக்கு மேற்படாது இருத்தல் வேண்டும். 

 மேற்படி நாட்களில் எதுவித உபத்திரவங்களும் ஏற்படாதவிடத்து சூரிய நமஸ்காரம், புஜங்காசனம், வச்சிராசனம் பொன்ற இலகு ஆசனங்களை செய்து கொள்ளலாம். பின்னர் படிப்படியாக வேறு ஆசனங்களையும் சேர்த்துக்கொள்ளலாம். 

 கொரனா தொற்றின் பின்னர் வச்சிராசனத்தில் இருந்து ஐந்து நிமிடங்கள் பிராணாயாமம் செய்துவருதல் உளஉடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

7. சித்தமருத்துவ சிகிச்சைகளும் நடைமருந்துகளும். 

 சித்தமருத்துவ சிகிச்சை முறைகளில் நோய்க்குப்பின்னான பராமரிப்புக்கள் காணப்படுகின்றன. இவை சித்த மருத்துவ மனைகளில் மருத்துவர்களால் நோயாளிகளின் நிலைக்கேற்ப செய்யப்படக்கூடிய மருத்துவ முறைகளாகும். 

1. நசியம் – பொதுவாகவே நோய்கள் அணுகாதிருக்க இரண்டுமாதங்களுக்கு ஒருமுறை நசியம் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. கொரனா தொற்றின்போது சுவாசத்தொகுதியே கூடுதலாக பாதிக்கப்படுகின்றது. 

இதில் தொண்டைக்கு மேல் உள்ள சுவாச வழிகளை சுத்தப்படுத்தி கொள்ள நசியம் செய்தல் வேண்டும். இதனைச் சித்தமருத்துவர்கள் நோயாளியின் உடல் நிலைக்கு ஏற்ப செய்வார்கள். 

 நசியம் செய்வதினால் கொரனா தொற்றின் பின்னர் ஏற்படும் உபத்திரவங்களான தலைவலி, மணம்சுவைகளில் ஏற்படும் மாற்றம், நித்திரையின்மை, மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் என்பன குறைவடைவதுடன், மனநிலை மாற்றங்களினால் ஏற்படும் நெருக்கீடுகள், படபடப்பு, இரத்த அழுத்தம் என்பனவும் குறைவடைகின்றன. 

  2. மர்த்தன சிகிச்சையும் ஒத்தடம் கொடுத்தலும் – 

 மர்த்தன சிகிச்சை எனப்படுவது உடற்பகுதிகளில் எண்ணெய் பூசி பிடித்துவிடுவதலும் ஒத்தடம் கொடுத்தலும் ஆகும். இதனால் தசைப்பிடிப்பு, நாரிநோ என்பன குறைவடையும். 

  3. உடற்தேற்றி மருந்துகள் – 

 நோய் வாய்ப்பட்ட பின் பலவீனமடைந்திருக்கும் உடலையும் உடல் உறுப்புக்களையம் தேற்றுவதற்காக வழங்கப்படும் மருந்துகளாகும். பெரும்பாலும் இலேகியங்கள், மணப்பாகுகள், சூரணவகைகள் ஆகும். 

 4. நடை மருந்துகள் - நடைமருந்துகள் எனப்படுபவை உடற்தேற்றியாகவும் அதேவேளை குறிப்பாக நோயினால் பாதிக்கப்பட்ட உறுப்புக்களை சீரமைக்கக்கூடியனவாகவும், மீள நோய் வராமல் தடுக்ககூடியனவாகவும் அமைவதோடு நீண்டநாட்கள் (42 நாட்கள்- ஒரு மண்டலம்) இருக்கும். 

 நடைமருந்துகள் நோய்த்தொற்றின் பின்னர் ஏற்பட்ட உபத்திரவங்களுக்கு ஏற்பவும் அமையும். அத்துடன் பசியைத் தூண்டக்கூடியனவாகவும் நன்றாக சமிபாடு அடையச்செய்யக்கூடியனவாகவும் அமைகின்றன. 

 இலேகியங்கள், குடிநீர்கள் (மூலிகைத் தேநீர்கள்) வடகங்கள், நெய், பிட்டு, மணப்பாகு, தேனூறல்…. என பல காணப்படுகின்றன.   

இவற்றைவிட நோயாளிகளின் நிலைக்கேற்ப வேறு சிகிச்சை முறைகளும் மருத்துவர்களின் நிதானிப்புக்களுக்கமைவாக மேற்கொள்வர். 

கொரனா நோய்த்தொற்றுக்கு பின்னரான பராமரிப்பில் ஒருங்கிணைந் உள,சமூக, மருத்துவ செயற்பாடுகள் தேவைப்படுகின்றன. இவற்றைவிட பாதிக்கப்பட்டவர்கள் தமது ஆரோக்கியத்தில் கூடுதல் கரிசனைகொள்வதே முக்கியமானதாகும்.

No comments:

உள நெருக்கீடுகளில் சித்த மருத்துவத்தின் பங்கு.