Sunday, March 31, 2024

ஈழத்துச் சித்தமருத்துவ வரலாற்றில் அமரர் சித்தமரு. பொன். இராமநாதன் MD (Siddha) அவர்களின் நினைவலைத் துளிகள் ...

 


2000  ஆம் ஆண்டில் எனது சித்தமருத்துவ கற்கையின் இரண்டாவது ஆண்டில் குருவாக அறிமுகமானவர் பரம்பரை முதுநிலை விரிவுரையாளர் சித்தமருத்துவர் பொன்னம்பலம் இராமநாதன் (அவர்கள்.

2000 ஆண்டின் ஆரம்பத்திலேயே அவரது "சித்த மருந்து முறையியல்" என்னும் நூலும் என்னுடன் இணைந்து கொண்டது. இன்று வரை எனது கைக்கெட்டிய தூரத்திலேயே அந்நூலானது இருக்கின்றது. நூல்களை பணம் கொடுத்து வேண்டுவது அரிதான இன்றைய காலத்தில் எமது விரிவுரையாளரின் நூல் இரண்டாம் பதிப்பும் பெற்றது. 1987 இல் வெளியான அவரது முதல் நூலான "சித்த ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்கட்கான கைந்நூல்" கூட முதற்பதிப்பு 1987, 1994 என இரண்டு பதிப்புக்களைக் கண்டது.

காலை வேளை சீரான வேகத்தில் வரும் மோட்டார் சைக்கிளில் வந்திறங்கும் ஆசான், மோட்டார் சைக்கிளிலோ, அவரிலோ காணப்படும் தூய்மை அவர்மீதான ஈர்ப்புக்கு முதற்படி. நிதானமாக மோட்டார் வண்டியை நிறுத்தி தலைக்கவசத்தை உரிய இடத்தில் வைத்து,  அலுவலக பையினுள் இருக்கும் சீப்பினை எடுத்து, நன்றாக எண்ணெய் வைத்து வாரப்பட்ட தலையை மீள அழகாக வாரிக்கொண்டு அவர் நடந்து வரும்போது அவரது முகத்தில் திருநீற்றுடன் தவழும் அந்தப்புன்னகை! சில வேளைகளில் எங்களைக் காணும்போது சிரிக்கும் ஓர் நமுட்டுச் சிரிப்பு... ஈர்ப்பின் அடுத்தபடி...

அவரது நூல்களில் தேடியும் பிடிக்க முடியாத எழுத்துப்பிழைகள், கனதியான புத்தக மட்டைகள், மருந்துகள் செய்வது தொடர்பில் ஒரு மாணவனுக்கு அல்லது மருத்துவனுக்கு சந்தேகம் எழ முடியாதவாறான நூல் உருவாக்கம் என்பன நூலின் பெறுமதியாகும். நான் வைத்திருக்கும் புத்தகங்களிலேயே அதிகம் பார்த்து அழுக்கேறி சிதைந்தது "சித்த மருந்து துறையியல்" நூலாகத்தான் இருக்கும்.

கற்பித்தல், மருந்துகளை செய்வித்தல் என எல்லாவற்றிலும் தூய்மையும் நேர்த்தியும் ஓர் ஒழுங்கும் இருக்கும். செய்யும் மருந்துகளைப் பதியும் பதிவேட்டில் உள்ளே இருக்கும் மருந்து செய்முறைப் பதிவுகள் மட்டுமன்றி பதிவேட்டின் வெளிமட்டை அதற்கான உறைவரை அழகாக இருத்தல் வேண்டும். இரசனை மிக்கவர்.

"ஐசே உம்முடைய பதிவேடு பார்த்தேன் அழகாக இருக்கின்றது" மனதினுள் மகிழ்ச்சி ஆனாலும் அவரது நமுட்டுச் சிரிப்பினில் தெரிந்த நக்கல் என் அகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை முகத்தில் தெரிவிக்க, "பயப்படாதையும் நல்லாத்தான் இருக்கு பதிவேட்டின் வெளிமட்டையின் உறை. அந்த இரசனை உள்ளுக்கும் இருக்கவேணும்"

எனக்கு விளங்கியது நான் பதிவேட்டுக்குப் போட்ட உறையில் முழுப்பகுதியும் ஓர் பெண்ணின் முகம் இருக்கத்தக்கவாறு போட்டிருந்ததைக்கூட அவர் அவதானித்ததை. அன்றிலிருந்து பதிவேடு என்னால் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் செய்துகொண்டேன். விளைவு இரண்டாம் வருட முடிவில் அப்பதிவேட்டை அவரே தன்னிடம் இருக்கட்டும் என்றார்.

பின்னாளில் திருகோணமலையில், கப்பல் துறை மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையில்,  கிழக்கு மாகாண சுதேச மருந்து உற்பத்தி மையத்தில் மருந்துகள் புதிதாக செய்யும் போது அவற்றின் மாதிரிகளை யாழ்ப்பாணம் வரும்போது அவரிடம் கொண்டுசென்று காட்டிக்கொள்வேன். அவரது முகத்தில் திருப்தி தெரியும் கொடுத்த மாதிரிகளை திருப்பி திருப்பி பார்த்துக் கொள்வார். அன்று நான் ஏதோ சாதித்ததைப் போன்ற உணர்வு ஏற்படும்.

1973  - 1976  வரை  இலங்கா சித்தாயுர்வேதக் கல்லூரியில் விரிவுரையாளர்

1988 -1987 வரை உள்ளூராட்சி சேவை வைத்தியசாலைகளில் மருத்துவ அதிகாரி

1988 - 1991 வரை  இந்தியாவில் சித்தமருத்துவத்தில் MD பட்டப்படிப்பு

1992 - 1997/04 வரை யாழமாநகர சபையில் பிரதம சித்தமருத்துவ அதகாரி

     இக்காலத்திலேயே (1992-1997/04) நாட்டின் போர்க்கால சூழ்நிலையில் ஏற்பட்ட மருந்துகள் தட்டுப்பாட்டை நீக்க யாழ் மாநகர சபையிலேயே சித்தமருத்துவப் பிரிவில் மருந்துற்பத்தி பகுதியை உருவாக்கி தரம்மிக்க மருந்துகளை உற்பத்தி செய்தனர். அவற்றின் அனுபவம் அவரது நூலின் ஒவ்வொரு சொல்லிலும் தெரியும்.

இன்றுவரை (2024) யாழ் மாநகர சபையில் சித்தமருந்துகள் உற்பத்தி தொடர்கின்றது. உண்மையில் இக்காலப்பகுதி யாழ் மாநகர சபையில் சித்தமருத்துவப் பகுதியின் பொற்காலமாகும்.

1997/5 - இருந்து ஓய்வு பெறும் வரை சித்தமருத்துவத் துறையில் முதுநிலை விரிவுரையாளராக இருந்தார் ஆசான் பொன் இராமநாதன் ஐயா அவர்கள். பாரம்பரிய மருத்துவரான (பரமு சித்த வைத்தியசாலை, தாவடி) ஆசானின் அனுபவம் அறிவு பட்டப்படிப்புக்களின் மெருகூட்டல் யாழ் பல்கலைக்கழக சித்தமருத்துவ அலகுக்கு ஒரு வரப்பிரசாதமே.

மூன்றாம் வருடம் சித்த தத்துவங்கள் கற்பித்தலில், உண்மையில் எங்களை சித்தத்துங்களின்பால் கவர்ந்து வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்தியவர்.

"ஐசே எல்லாருக்கும் கொஞ்ச கொஞ்ச மனக்கிலேசம் ஒவ்வொன்றிலும் இருக்கும். அது எல்லோருக்கும் இருக்கிற அளவில் இருந்தால் அவர் சாதாரணமானவர். கூடிக்குறைந்து இருந்தால் சித்தன் இல்லை பித்தன்."

"தாமரைப் பூவைப்பாரும் நன்றாக இரசியும். இவ்வளவு அழகின் இரகசியம் என்ன என்று தண்ணீருக்குள் கையை விட்டால் நாற்றமுள்ள சேற்றுக்குள்தான் கை போகும்."

இப்படி பல தத்துவங்களை சித்த தத்துவங்களுடன் சேர்த்து நகைச்சுவையாகத் தருவார்.

"ஊரெல்லாம் கூடி உரக்க அழுதிட்டுப்

பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்

சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சட்டிட்டு

நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே"

- திருமந்திரம்

"திருமந்திரத்தில் இலகுவாக அனைவருக்கும் விளங்கக்கூடிய பாடல் இது, ஏன் தெரியுமோ?

எதுவும் நிரந்தரமில்லை என்பதை எல்லோரும் விளங்கிக்கொள்ள வேண்டும் என்று திருமூலர் நினைத்திருக்கின்றார்.

நாளைக்கு எனக்கும் இதுதான் உமக்கும் இதுதான்"

நீங்கள் கூறிய வார்த்தை உங்களுக்குப் பொருந்தாது நாங்கள் இருக்கும்வரை, உங்கள் நூல்கள் இருக்கும் வரை, ஈழத்தில் சித்தமருத்துவம் இருக்கும் வரை நிலைத்திருக்கும் உங்கள் புகழ் நிலைத்திருக்கும் சேர்.

உங்கள் ஆத்மா சிவன்கழல் சேர்ந்து மீண்டும் பிறப்பில்லாப் பேரின்பம் பெற எல்லாம் வல்ல சிவனிடம் வேண்டிக்கொள்கின்றேன்.

மாணவன் சித்தமரு.தியாகராஜா சுதர்மன்

Thursday, May 25, 2023

சலரோகம் தணிக்கும் மாம்பழ வித்து

 இயற்கையின் படைப்பில் எவ்வளவோ அதிசயங்கள் உள்ளன. அவற்றை உணரும் திறன் பெரும்பாலும் எமக்கு இருப்பதில்லை. உணர்ந்தாலும் இன்றைய வாழ்க்கை முறையில் அவற்றைப் பயன்படுத்துவதும் இல்லை. இயற்கையோடு ஒன்றி வாழ விரும்புவதும் இல்லை.

இன்று உலகில் நீரிழிவின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் எண்ணிக்கையில் மிகவும் அதிகமாகிக் கொண்டு செல்கின்றது. நீரிழிவுக்கு பரம்பரை ஒரு காரணமாகச் சொல்லப்பட்டாலும் உளநலம், உடற்பயிற்சியின்மை, உணவின் மாறுபாடுகள் என்பன பிரதான காரணமாகின்றன. இவற்றை சரிவர பேணுவதுடன் இயற்கையாக பருவகாலத்தில் கிடைக்கும் சில உணவுப்பொருட்களை உரிய முறையில் பயன்படுத்தும்போது சில நோய்நிலைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் அல்லது அவற்றின் தீவிரத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

அவ்வாறான ஒரு பருவாகால உணவுப்பொருளே நாம் அதிகமாக விரும்பி உண்ணும் மாம்பழம். பொதுவாக பழவகைகள் அதிக ஊட்டச்சத்துக்களையும், நார்ச்சத்துக்களையும் கொண்டு பயன் தருபவையாக இருந்தாலும் அவற்றில் உள்ள மாப்பொருளான சுக்ரோஸ் ஆனது மாப்பொருளின் இறுதி விளைவான புரக்டோசையும் குளுக்கோசையும் தருவதால் இவை அளவுக்கு அதிகமாகும்போது பல உபத்திரவங்களைத் தருகின்றன. குறிப்பாக உடற்பருமன், கொலஸ்திரோல், அதிகுருதி அழுத்தம், நீரிழிவு போன்ற தொற்றா நோய் நிலைகளில் மிகவும் பாதிப்பைத் தருகின்றன. அதிகளவு இனிப்பான பழங்களில் குளுக்கோசும் அதிகளவு இருக்கும். எனவே பருவகாலங்களில் பழங்களை உண்ணும்போது  தேவைக்கு ஏற்ற அளவில் அளவாக உண்ணுதல் வேண்டும்.

பழங்கள் உபத்திரவங்களைத் தந்தாலும் அவற்றின் வித்துக்கள் அவற்றின் உபத்திரவங்களைக் குறைக்கக் கூடியனவாகவே காணப்படுகின்றன. அவ்வாறான ஒரு நிலையே மாம்பழத்திலும் மாம்பழ வித்திலும் காணப்படுகின்றன. இது தொடர்பில் யாழ்ப்பாண சித்தமருத்துவ நூலான அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணியில் மாம்பழத்தின் நன்மை தீமைகள் தொடர்பில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

மாம்பிஞ்சு - பழம் - காய் - பூ - வித்து

"வாகுள மாவின் பிஞ்சு வாதமை பித்த மாற்றும்

பாகமாங் கனிக ரப்பன் பகர் வாதம் பித்தந் தானும்

ஆகுங்காய் கிரந்தி வாத மாம்பூவித் திற்கு மந்தம்

ஆகமார்கிராணி வாயு வதிசாரஞ் சலரோ கம்போம்" 

மாவின் பிஞ்சானது  வாதம், பித்தம், கபம் என்று சித்தமருத்துவத்தில் கூறப்பட்டுள்ள உடல் இயக்கத்துக்கு ஆதாரமாக உள்ள உயிர்த்தாதுக்களின் செயற்பாடுகளை சீராக்கி ஆரோக்கியத்தைத் தரும்.

மாம்பழத்தை அளவுக்கு அதிகமாக, தொடர்ச்சியாக  எடுக்கும்போது தோல் நோய்களை ஏற்படுத்துவதுடன் அல்லது அவற்றினைத் தூண்டுவதுடன் வாதம், பித்தம் ஆகிய உயிர்த்தாதுக்களை கேடடையச் செய்து  போன்ற பல்வேறு நோய்கள் (அஜீரணம், மூலம், நீரிழிவு, ஆஸ்துமா. கொலஸ்திரோல்....) ஏற்படுவதற்கு காரணமாகின்றது.

மாங்காய் ஆனது மாம்பழத்தைப் போன்று கிரந்தி போன்ற ஒவ்வாமைகளையும் வாதத்தினையும் அதிகரிக்கும்.

மாம்பூ, மா வித்து என்பன சாதாரணமாக உட்கொள்ளப்படுவதில்லை. ஆனால் இவை சிறந்த மருத்துவகுணங்களைக் கொண்டவை. மருத்துவர்களின் ஆலோசனையின் கீழ் தூளாகவோ, குடிநீராகவோ பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும். இவற்றுக்கு பசியின்மை, அஜீரணம், கழிச்சல் பொன்ற உபத்திரங்கள், வயிற்றுப்பொருமல், உடலில் குத்துழைவு, உடலில் வாயு சேரல், சலரோகம் என்பன கட்டுப்படும். இங்கு உணவின் சீரான சமிபாடு அவற்றின் அகத்துறிஞ்சல் என்பன சீராக்கப்படுகின்றன. 

எனவே பருவகாலங்களில் கிடைக்கக்கூடிய மாம்பூ, மா வித்து போன்றவற்றை சேகரித்து தகுந்த மருத்துவ ஆலோசனையின் கீழ் பயன்படுத்தி பயன்பெறுவது ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும். இவ்வாறு பருவகால உணவுகளை வற்றல் செய்துவைத்து ஆண்டு முழுவதும் பயன்படுத்துவார்கள்.  இவ்வாறு மாங்காய் வற்றல் செய்து பயன்படுத்தும்போது கிடைக்கும் பயன்கள் பற்றி கூறும் பாடல்,

 "தாகமே யுழலை பித்தந் தளருமூத் திரக்கி ரிச்சி

சோகமார் வரட்சி வெம்மை துகளுறு மபான ரோகம்

வேகமார் புண்க ளன்றி விளம்பிடு வாத மெல்லாம்

போகுமா மாங்காய் வற்றல் புசித்தவர் தமக்கு மாதோ" 

மாங்காய் வற்றல் உண்டவர்களுக்கு தாகம், எரிவு, போன்ற பித்த தோசத்தால் ஏற்படும்  சிறுநீர்ப் பிரச்சினைகள், உடல் வரட்சி, உடற்சூடு, மூலரோகம், வாத ரோகங்கள் என்பன தீரும்.

இவ்வாறான பல நன்மைகள் கொண்ட மாங்காய் வற்றல் சேர்ந்த சொதி, குழம்பு வகைகளை உண்ணும், நமது பாரம்பரிய உணவுப்பழக்கம் அருகிவருதல் நமது ஆரோக்கியத்துக்கு கேடுதரும் ஒரு விடயமாகும். இங்கு புளிக்குப் பதிலாகவே மாங்காய் வற்றல் பயன்படுத்தப்படுகின்றது. பழப்புளி பெரும்பாலும் நோய் நிலைகளில் அபத்தியப்பொருளாகவே காணப்படுகின்றது. இந்நிலைகளில் மாங்காய் வற்றில் சிறந்ததொரு மாற்று தேர்வாகவும் இருக்கும்.

Monday, February 20, 2023

நீரிழிவும் (Type II Diabetes) ஆவரசும் Cassia auriculata

நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்கள் ஆவரசின் பாகங்களையோ சம்மூலமாகவோ பயன்படுத்தி சிறந்த பலனைப்பெறலாம். பொருளாதார நெருக்கடியில் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எமது பிரதேசங்களில் இலகுவாக இயற்கையாகக் கிடைக்கும் ஆவரசு மூலிகையின் பயன்களை பெற்றிடல் நன்று.

காரைநகர், பொன்னாலை, கல்லூண்டாய் பகுதிகளில் தாராளமாகக் கிடைக்கின்றது. சித்தமருத்துவ வைத்தியசாலைகளில் கூட நிரிழிவுக்கான மருந்துகள் பொருளாதார நெருக்கடியில் விலை அதிகரிப்புக்களால் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்ற நிலையில் உரிய அவ்வப் பிரதேச  மட்டத்தினர் இதனைக் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

கீழே காணப்படும் குறிப்புகள் விழிப்புணர்வுக்காகவே  அன்றி.  சுயமருத்துவத்துக்கானது அல்ல. ரோகிபலம், ரோகபலம் என்பவற்றினைப் பொறுத்து  சித்தமருத்துவர்களின் ஆலோசனையுடன் கிழ்வரும் திருக்குறள் வழி நடந்து பயன் அடைந்திடுவோம்.

"உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று

அப்பால் நாற்கூற்றே மருந்து"

 மருந்து என்பது, நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து அல்லது அருகிருந்து கொடுப்பவன் என நான்கும் சேர்ந்ததே மருந்தாகும்.

"ஆவாரை பூத்திருக்க சாலாரைக் கண்டதுண்டோ" என்பது சித்தர் வாக்கு.

ஆவாரை ஓர் காயகற்ப (Antioxidant) மூலிகை

ஆவரசுப் பஞ்சாங்கம் - இலை, பூ, பிஞ்சு, பட்டை, வேர்

யாழ்ப்பாண நூலான அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணியில் ஆவரசு....

"மேகங்கண் ணோயே தாகம் விரைசல ரோகம் மூல

ரோகமே பயித்தி யத்தை யோட்டுமா வரைப்பஞ்சாங்கம்.."

தாகத்துடன் கூடிய அதிகமாக சிறுநீர்கழியும் சலரோகம், மூல ரோகம் மற்றும் வெயில் காலத்தில்  பித்த அதிகரிப்பினால் ஏற்படும் வெப்பு நோய்கள் என்பவற்றை ஆவாரைப் பஞ்சாங்கம் நீக்கும்.

பெரும்பாலும் ஆவரசின் பூ, இலை, காய், மொட்டு என்பனவே இவற்றினைச் செய்யும். ஆவரசம் பூ, மொட்டு என்பனவற்றின் தூள் கொண்டு தயாரிக்கப்படும் குடிநீர் இந்நோய்களில் இருந்து பாதுகாக்கும். 

நீரிழிவு தொடர்பான ஏடுகளில் இருந்து தொகுக்கப்பட்ட மேகவாகடத்திரட்டு என்னும் நூலில் ஆவரசு 

"சொல்லுதற்கு மட்டோ தொலையாத மேகநீர்

எல்லாமொ ழிக்கு எரிவகற்று - மெல்லவச

ஆவாரைப் பம்பரம்போ லாட்டு தொழில் அணங்கே

ஆவாரை மூலியது" 

நீரிழிவு உட்பட அனைத்து மேகரோகங்களில் ஏற்படும் அடிக்கடி சிறுநீர் கழிதல், உடல் எரிவு (பாத எரிவு) என்பன போக்கும்.

சித்தமருத்துவ நூலான பதார்த்தகுண சிந்தாமணியில் ஆவரசும் பூ, ஆவரசுப் பஞ்சாங்கம்.

"தங்க மெனவே சடத்திற்குக் காந்திதரு

மங்காத நீரை வறட்சிகளை - யங்கத்தா

மாவைக் கற்றாழை மணத்தை யகற்றிடும்

பூவைச் சேராவாரம் பூ" 

உடலுக்கு குளிர்ச்சி தந்து உடலை அழகாக்கும். அடிக்கடி சிறுநீர்கழிதல், நாவரட்சி, உடலில் ஏற்படும் கெட்ட நாற்றத்தினை ஆவரசம் பூ அகற்றிடும்.

"மேகத்தினாலே விளைந்த சலம் வெட்டையன

லாகத்தின பண்ணோ யருங்கிரணி - போகததால்

ஆவாரைப் பஞ்சகங்கொ ளத்திசுரந் தாகமும்போ

மைவாரைக் கண்மட மாதே" 

நீரிழிவினால் ஏற்படும் சிறுநீர் கழிதல், வெள்ளை சாய்தல் மற்றும் உடற்சூடு, சில வகை நாட்பட்ட கழிச்சல், என்புச் சூடு, தாகம் என்பன போகும்.

Tuesday, November 08, 2022

#SUPER #FOOD - மந்த போசணையை குறைப்போம்.

 


நவராத்திரியின் போது கோயில்களில் வீடுகளில், பாடசாலைகள் என்பவற்றில் கும்பம் வைத்து நவதானியம் விதைத்து முளைக்கவிடுவார்கள்.

தற்போது முளைக்க விட்ட நவதானியங்களை காதிலும் புத்தகங்களில் வைக்கப்படுகின்றன. இது தவறான செயற்பாடாக தெரிந்ததால் சிவாச்சாரியர் ஒருவரிடம் இதுபற்றி கேட்டபொழுது அவர் மேலும் பலரிடம் கேட்டு அதன் உண்மை தார்ப்பரியத்தை இவ்வாறு கூறினார்.
உண்மையில் பெறப்படும் நவதானிய முளைப் பயர்களில் சிலதை சிறிதா நறுக்கி கோயிலில் தரப்படும் தீர்த்தத்துள் ஊறவிட்டு அத்தீர்த்தத்தை மக்களுக்கு வழங்குவார்கள். மிகுதியை சிறிது சிறிதாக அரிந்து பஞ்சாமிர்தத்துடன் கலந்து மக்களுக்கு கொடுப்பார்கள்.
முக்கியமாக நவராத்திரிவிழா கற்கும் சிறுவர்கள், போர்வீரர்கள், உழைப்பாளிகளை நோக்கிய விழாவாக அமைந்திருக்கும். இவர்களுக்கு தேவையான போசாக்கான உணவு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடே நவதானிய விதைப்பாகும்.
ஆனால் கால ஓட்டத்தில் காதிலும் புத்தகத்துள்ளும் வைப்பதாக அமைந்திருப்பது வேதனைக்குரியதாகும்.

முளைவிட்ட தானியங்களில் இருந்து செய்யப்படுகின்ற உணவுகளை இன்று ஊட்டச்சத்துகள் நிறைந்த செறிந்த சிறப்புவாய்ந்த உணவுகளாக (Super foods) பயன்படுத்தப்படுகின்றது.
உதாரணமாக முளைக்க முன் பயற்றில் உள்ள புரதச் சத்தின் அளவை விட முளைவிட்ட பயற்றில் பலமடங்கு புரதச்சத்து அதிகரிப்பதுடன் புரத வகைகளின் (அமினோ அமிலங்கள்) எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது. இதைப் போலவே உயிர்ச் சத்துக்கள் (Vitamins) கனிமச் சத்துக்களும் (Minerals) அதிகரிக்கின்றன.
இவற்றை விட உணவுக்கூறுகள் சிக்கலான (Complex) நிலையில் இருந்து மனித உடலில் இலகுவாக அகத்துறிஞ்சப்படக்கூடிய நிலைக்கு மாறுகின்றன.
தானியங்களில் உள்ள சத்துக்களை எமது உடலால் அகத்துறிஞ்ச முடியாது தடுக்கும் தாவர இரசாயனங்கள் (Anti Nutritional properties) அழிக்கப்படுகின்றன.
பருப்பு வகை உணவுகளில் உள்ள வாய்வுத்தன்மையும் இல்லாது போகின்றது.
நார்ச்சத்தின் அளவு அதிகரிக்கின்றது.
கற்ப இரசாயனங்கள் (Antioxidants) அதிகரிக்கின்றன.
முளைவிட்ட தானியங்களை தனியாகவோ ஏனைய உணவுகளுடனோ சேர்த்து உணவாக்கிக் கொள்ளலாம்.
நீண்டகாலம் வைத்திருந்து பயன்பெற வேண்டுமாயின் இளவெயிலில் அல்லது நிழலில் உலர்த்தி அல்லது இளவறுப்பாக வறுத்து அதனை அரைத்து மாவாக்கி காற்றுப்புகாதவாறு கண்ணாடிப் போத்தலினுள் பத்திரப்படுத்திக்கொள்ளவும். தேவைக்கேற்றவாறு நாளாந்த உணவுகளுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
கோதுமை அரிசி முளைக்கவிடப்பட்டு இவ்வாறு தயாரிக்கப்பட்டு wheat grass powder ஆக விற்பனையில் உள்ளது.

Monday, November 08, 2021

கந்தசஷ்டி விரதம் முடித்தல் - #பாரணை



விரதம் முடித்தல் என்பது காலையில் செய்ய வேண்டும் என்று கூறுவர். இது சூரிய உதயத்தின் அடிப்படையில் ஆகும். ஆனால் சந்திர நாட்களைக் கருத்தில் கொள்ளும்போது சஷ்டி முடிந்து சுத்தமான முழு எழுமையில் (சப்தமியில்) விரதம் முடித்தலை (பாரணை) மேற்கொள்ளலாம்.

விரதம் முடிக்கும்போது சித்தர்கள் கூறிய ஆரோக்கியமான உணவு உண்ணும் காலத்தை கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் எமது உடல் இயக்கங்கள் சூரிய உதயத்திலும் சூரிய மறைவின் அடிப்படையிலுமே தங்கியுள்ளது. சித்தமருத்துவத்தில் நோயில்லா வாழ்வுக்கான வழிமுறைகளில் சித்தர்களால் கூறப்பட்ட உணவு உண்ணக்கூடிய நேரங்களைக் கருத்தில் கொள்

"தருமநூல் விதியிரண்டே தப்பிமுக்கா லுண்ணவெனில்
சிருமிதலை காலைமுற்றச் சேய்பருவ – வருமுகூர்த்த
மொன்றுக்கு ணாண்குக்கு ளோத மிரண்டுக்கு ளுண்பர்
னன்றுக்குத் தீயோர் நயந்து.”

தரும நூல்களின் அடிப்படையில், இரண்டுவேளை உணவே உண்ணுதல் வேண்டும். இதைத் தவிர்த்து 3 வேளை உண்ண வேண்டுமெனில், சமமாக்கினி உள்ளவர்கள் சூரிய உதயம் தொடங்கி 1 ½ மணி நேரத்துக்குளளாகவும்;, காலைப் பருவமாகிய 6 மணி நேரத்துக்குள்ளாகவும், பொழுதின் மூப்பு பருவமான இரவில் 9 மணிக்குள்ளாகவும் உணவு உட்கொள்ள வேண்டும்.


“மூன்றுநான் காரெண் முகூர்த்தங்க ளின்முறையே
ஞான்று ளுண்ணுமந்த நறுமுணவே – தோன்றுடலுக்
கொக்குமித நோயரமு ரோமுயிற் கந்தரஞ்செய்
விக்குமித மாராய்ந்து விள்”
- #ஆகாரமே #ஆதாரம் நூல், பக்.74-75

சூரியன் உதயமாகி, 4 மணித்தியாலம் 30 நிமிடங்களுக்குள் உண்ணும் நல்ல உணவானது உடலுக்குப்பொருந்தும். 4மணித்தியாலம் 30 நிமிடங்கள் தொடங்கி 6 மணித்தியாலத்துக்குள் உண்ணும் மிதமான உணவானது நோய்களை ஏற்படுத்தாது. 6 மணித்தியாலங்கள் தொடக்கம் 9 மணித்தியாலங்கள் வரை உண்ணும் உணவு நோய்களை உருவாக்கும். 9 மணித்தியாலங்களின் பின் 12 மணித்தியாலங்களுக்குள் உண்ணும் உணவானது உயிரைக் கொள்ளும் நோய்களை வருவிக்கும்.

உதாரணமாக சூரிய உதயம் காலை 6 மணி எனில்,

முற்பகல் மணி 10.30 இற்குள் உணவு உட்கொண்டால் உடலுக்குப் பொருந்தும்.

முற்பகல் 10.30 இல் இருந்து மதியம் மணி 12 இற்குள் உணவு உட்கொண்டால் நோய்கள் ஏற்படாது.

மதியம் 12 இல் இருந்து பிற்பகல் மணி 3 இற்குள் உணவு உட்கொண்டால் நோய்கள் உருவாகும்.

பிற்பகல் 3 இல் இருந்து மாலை 6 மணிக்குள் உணவு உட்கொண்டால் உயிரைக் கொள்ளும் நோய்கள் உருவாகும்.

இவற்றினைக் கருத்தில் கொண்டே விரதம் முடித்தலை (பாரணை) காலையில் செய்தல் வேண்டும் எனக் குறிப்பிடப்படுகின்றது.

ஆனால் இம்முறை போல் (2021) பிற்பகல் 2.29 இற்கு சஷ்டி திதி முடிவடையின், தொடர்ந்து வரும் சப்தமியில், சூரிய உதயத்தை அறிந்து சித்தர்களின் வாக்குக்கமைய இரவு 9 மணிக்கு முன் விரதத்தை முடித்துக்கொள்ளலாம்.

Thursday, November 04, 2021

குழந்தைவரம் தரும் கந்த சட்டி விரதம்.


குழந்தைவரம் வேண்டி முருகனை நினைத்து விரதமிருக்க அவரே குழந்தையாக பிறப்பார் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்தில் உண்மை உள்ளதா?

திருப்புகழில் முருகனே குழந்தையாக வேண்டும் என்று வேண்டுகின்றார் அருணகிரிநாதர்..


செகமாயை
யுற்றெ னகவாழ்வில் வைத்த

     திருமாது கெர்ப்ப ...... முடலூறித்

தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்

     திரமாய ளித்த ...... பொருளாகி

மகவாவி னுச்சி விழியாந நத்தில்

மலைநேர்பு யத்தி ...... லுறவாடி 

மடிமீத டுத்து விளையாடி நித்த

           மணிவாயின் முத்தி ...... தரவேணும் 
      ……………………………………….




இந்த உலக மாயையில் சிக்குண்டு, இல்லற வாழ்வில் எனக்குக் கிட்டிய அழகிய மனைவியின் கருவில் உருவாகி பத்து மாதம் கர்ப்பத்தில் வளர்ந்து, நல்ல அழகோடு  பூமியில்  தோன்றிய குழந்தைச் செல்வமாக நீ எங்களுக்குப் பிறந்து, குழந்தைப் பாசத்தினால் நான் உன்னை உச்சிமோந்து, விழியோடு விழிவைத்துமுகத்தோடு முகம் சேர்த்து, எனது மலை போன்ற தோள்களில் நீ தழுவி உறவாடி, என் மடியில் அமர்ந்து குழந்தையாக விளையாடி,நாள்தோறும்  உன் மணி வாயினால் முத்தம் தந்தருள வேண்டும் என்று திருப்புகழ் பாடுகின்றது

குழந்தைப் பேறின்மைக்கு  பலவாறான உடற்கோளாறுகள் காரணமாகின்றன. சிலவகை உடற்கோளாறுகளுக்கு  “இலங்கணம் பரம ஔடதம்” என்பது சித்த மருத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று. இலங்கணம் இருத்தல் என்பது நீர் கூட அருந்தாமல் விரதமிருப்பது ஆகும்.

இவ் இலங்கன செயற்பாடே தமிழர் வாழ்வியலில் பலவகை விரதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றதன. அவ்விரதங்களில் ஐப்பசி சட்டி விரதம் சிறப்பான ஒன்றாகக் காணப்படுகின்றது. இதனையே “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என பழமொழியாக சொல்லியுள்ளார்கள். அதாவது கந்த சட்டியில் ஆறுநாட்களும் விரதம் இருந்தால் அக பையில் வரும் என்பதாகும்.

அக பையில் என்பது ஆணினது விதைப்பை, பெண்ணினது கர்ப்பப் பைகள் என்பதாகும். இவர்களது இனப்பெருக்க உறுப்புக்களில் ஏதேனும் மாறுபாடுகள், குறைபாடுகள் இருப்பின் அவை நீங்கி குழந்தைப்பேறு உண்டாகும் என்பதே இதன் கருத்தாகும்.

கந்த சட்டி விரதம், ஆறு நாட்கள் கைக்கொள்ளப்படும் ஒரு விரதமாகும். அதாவது ஐப்பசி வளர்பிறைப் பிரதமை முதல் சஷ்டி ஈறான ஆறு நாட்கள் ஆகும்.

சில வேளைககளில் சஷ்டி திதி நேரங்கள் ஆறாவது நாள் மாலை நேரம் வரை தொடராது விடின், சூர சம்காரம் சஷ்டி திதியில் மாலை நேரத்தில் நடைபெற வேண்டும் என்பதால், சஷ்டி திதியை கருத்திற்கொண்டு ஐந்தாவது நாளே சூரசம்காரம் இடம்பெறுவதும் உண்டு. ஆனால் திதி கணக்கின் பிரகாரம் ஆறு நாட்கள் விரதமிருப்பது அவசியமாகும்.

சித்தமருத்துவ அடிப்படையில் எமது உடலானது சாரம் (Seruum), இரத்தம், தசை கொழுப்பு, என்பு, மூளை  விந்து அல்லது முட்டை (ஆணில் விந்து, பெண்ணில் கருமுட்டை) வரையான ஏழு அடிப்படை உடல் அமைப்புக்களால் ஆனது. இவற்றில் முதலாவது உடற்கட்டுக்கு, நாம் உண்ணும் உணவின் மூலம்  போசணை சென்று அதனைப் போசித்த பின்னரே ஒழுங்கு முறையில்  ஒவ்வொரு உடல் அமைப்புக்களும் போசணையைப் பெறுகின்றன.

அவ்வாறு பார்க்கும்போது நாம் உண்ணும் உணவானது முதல் நாள் சாரம் (Serum) எனப்படும் உடற் கட்டினைப் போசித்து ஏழாவது நாள் விந்து அல்லது கரு முட்டையை போசிக்கும். இதன் அடிப்படையில் முதல் நாள் விரதம் இருக்கும்போது முதலாவது உடற்கட்டான சாரம், போசணை கிடைக்காது இலங்கணம் காக்கப்படும். ஆனால் முதல் உண்ட உணவுகளின் போசணையானது ஏனைய உடற்கட்டுக்களை தொடர்ந்து போசிப்பதால் அவ்வுடற் கட்டுக்களுக்கான இலங்கணம் நடைபெறமாட்டாது.

இவ்வாறு படிப்படியாக நாட்கள் கூடிச்செல்ல முறையே இரண்டாது, மூன்றாவது என ஏனைய உடற்கட்டுக்களும் இலங்கணத்தை அடைகின்றன. இவ்வாறாக ஆறாவது நாள் இலங்கணத்தின் போது  ஏழாவது உடற்கட்டான விந்து அல்து முட்டை என்பன முன் உண்ட உணவின் போசணையினால் போசிக்கப்டுகின்றன.

ஏழாவது நாழ் பாறணையின்போது உணவினை உட்கொள்ளும்போது மேற்படி ஏழாவது உடற்கட்டுக்கள் இலங்கணத்தை அடைகின்றன. இப்பொழுது உடலின் ஏழு உடற்கட்டுக்களும் இலங்கணத்தை அடைகின்றன. 

ஆனாலும் ஆறு நாட்கள் கடும் விரதம் இருத்தலின் போது அடிப்படை உயிர்நிலை அனுசேப தொழிற்பாடுகளுக்கான சக்தியை வழங்குவதற்காக, ஏழு உடற்கட்டுக்களுக்கும் உடனடியாக சக்தியைத் தரக்கூடிய சாத்வீக குணமுடைய, மாறுபாடுகளை ஏற்படுத்தாத,   உணவான பால்  அல்லது தண்ணீர் மட்டும்  ஒருவேளை உணவாக கொள்ளப்பபடுகின்றது. அல்லது அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப பாலும் மேற்படி வகையான பழவகையும் ஒருவேளை மட்டும் உட்கொள்ளப்படுகின்றது.

இவற்றின் அடிப்படையில், இறைமருத்துவமான சித்தமருத்துவமானது முதற்சித்தன் சிவனின் ஊடாக முருகப்பெருமானுக்கு அருளப்பட்டு முருகப் பெருமானாலேயே அகத்தியர் திருமூலர் முதலான சித்தர்களினூடு மானிடர்களுக்கு வழங்கப்பட்டதாக சித்தமருத்துவ வரலாறு கூறுகின்றது.

அவ்வாறு உருவான மருத்துவம் கூறும் “இலங்கணம் பரம ஓளடதம்” என்பதனை சரிவர மேற்கொள்ள வேண்டுமாயின் ஆறு நாட்களும் இலங்கணம் எனும் விரதமிருத்தல் அவசியமாகின்றது.

ஆறுநாட்களும் இறை சிந்தையுடன் இவ்வாறு விரதமிருக்கும்போது மனம் ஒருநிலைப்பட்டு தெளிவடைகின்றது. தேவையற்ற உளநெருக்கீடுகள் மறைகின்றன. உளநெருக்கீடுகள் ஓமோன் செயற்பாடுகளில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.

முக்கியமாக உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புப் படிவுகள் விரதத்தின்போது கரைவதால் உடல் எடை குறைகின்றது. அதி உடற்பருமன் பல நோய்களுக்கும் குழந்தைப் பேறின்மைக்கும் காரணமாகின்றது.

எனினும் இலங்கணம் மேற்கொள்ளும்போது உடலின் ஆரோக்கியம், நோய்நிலைகளைக் கருத்தில் கொள்வதும், மருத்துவர்களின் ஆலோசனையுடன் மேற்கொள்வதும் இக்காலத்துக்கு அவசியமானதாகும்.

இவற்றினாலேயே கந்தசட்டி விரதம் தமிழர் மத்தியில் சிறப்புப் பெறுகின்றது.

உள நெருக்கீடுகளில் சித்த மருத்துவத்தின் பங்கு.