Monday, November 08, 2021

கந்தசஷ்டி விரதம் முடித்தல் - #பாரணை



விரதம் முடித்தல் என்பது காலையில் செய்ய வேண்டும் என்று கூறுவர். இது சூரிய உதயத்தின் அடிப்படையில் ஆகும். ஆனால் சந்திர நாட்களைக் கருத்தில் கொள்ளும்போது சஷ்டி முடிந்து சுத்தமான முழு எழுமையில் (சப்தமியில்) விரதம் முடித்தலை (பாரணை) மேற்கொள்ளலாம்.

விரதம் முடிக்கும்போது சித்தர்கள் கூறிய ஆரோக்கியமான உணவு உண்ணும் காலத்தை கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் எமது உடல் இயக்கங்கள் சூரிய உதயத்திலும் சூரிய மறைவின் அடிப்படையிலுமே தங்கியுள்ளது. சித்தமருத்துவத்தில் நோயில்லா வாழ்வுக்கான வழிமுறைகளில் சித்தர்களால் கூறப்பட்ட உணவு உண்ணக்கூடிய நேரங்களைக் கருத்தில் கொள்

"தருமநூல் விதியிரண்டே தப்பிமுக்கா லுண்ணவெனில்
சிருமிதலை காலைமுற்றச் சேய்பருவ – வருமுகூர்த்த
மொன்றுக்கு ணாண்குக்கு ளோத மிரண்டுக்கு ளுண்பர்
னன்றுக்குத் தீயோர் நயந்து.”

தரும நூல்களின் அடிப்படையில், இரண்டுவேளை உணவே உண்ணுதல் வேண்டும். இதைத் தவிர்த்து 3 வேளை உண்ண வேண்டுமெனில், சமமாக்கினி உள்ளவர்கள் சூரிய உதயம் தொடங்கி 1 ½ மணி நேரத்துக்குளளாகவும்;, காலைப் பருவமாகிய 6 மணி நேரத்துக்குள்ளாகவும், பொழுதின் மூப்பு பருவமான இரவில் 9 மணிக்குள்ளாகவும் உணவு உட்கொள்ள வேண்டும்.


“மூன்றுநான் காரெண் முகூர்த்தங்க ளின்முறையே
ஞான்று ளுண்ணுமந்த நறுமுணவே – தோன்றுடலுக்
கொக்குமித நோயரமு ரோமுயிற் கந்தரஞ்செய்
விக்குமித மாராய்ந்து விள்”
- #ஆகாரமே #ஆதாரம் நூல், பக்.74-75

சூரியன் உதயமாகி, 4 மணித்தியாலம் 30 நிமிடங்களுக்குள் உண்ணும் நல்ல உணவானது உடலுக்குப்பொருந்தும். 4மணித்தியாலம் 30 நிமிடங்கள் தொடங்கி 6 மணித்தியாலத்துக்குள் உண்ணும் மிதமான உணவானது நோய்களை ஏற்படுத்தாது. 6 மணித்தியாலங்கள் தொடக்கம் 9 மணித்தியாலங்கள் வரை உண்ணும் உணவு நோய்களை உருவாக்கும். 9 மணித்தியாலங்களின் பின் 12 மணித்தியாலங்களுக்குள் உண்ணும் உணவானது உயிரைக் கொள்ளும் நோய்களை வருவிக்கும்.

உதாரணமாக சூரிய உதயம் காலை 6 மணி எனில்,

முற்பகல் மணி 10.30 இற்குள் உணவு உட்கொண்டால் உடலுக்குப் பொருந்தும்.

முற்பகல் 10.30 இல் இருந்து மதியம் மணி 12 இற்குள் உணவு உட்கொண்டால் நோய்கள் ஏற்படாது.

மதியம் 12 இல் இருந்து பிற்பகல் மணி 3 இற்குள் உணவு உட்கொண்டால் நோய்கள் உருவாகும்.

பிற்பகல் 3 இல் இருந்து மாலை 6 மணிக்குள் உணவு உட்கொண்டால் உயிரைக் கொள்ளும் நோய்கள் உருவாகும்.

இவற்றினைக் கருத்தில் கொண்டே விரதம் முடித்தலை (பாரணை) காலையில் செய்தல் வேண்டும் எனக் குறிப்பிடப்படுகின்றது.

ஆனால் இம்முறை போல் (2021) பிற்பகல் 2.29 இற்கு சஷ்டி திதி முடிவடையின், தொடர்ந்து வரும் சப்தமியில், சூரிய உதயத்தை அறிந்து சித்தர்களின் வாக்குக்கமைய இரவு 9 மணிக்கு முன் விரதத்தை முடித்துக்கொள்ளலாம்.

Thursday, November 04, 2021

குழந்தைவரம் தரும் கந்த சட்டி விரதம்.


குழந்தைவரம் வேண்டி முருகனை நினைத்து விரதமிருக்க அவரே குழந்தையாக பிறப்பார் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்தில் உண்மை உள்ளதா?

திருப்புகழில் முருகனே குழந்தையாக வேண்டும் என்று வேண்டுகின்றார் அருணகிரிநாதர்..


செகமாயை
யுற்றெ னகவாழ்வில் வைத்த

     திருமாது கெர்ப்ப ...... முடலூறித்

தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்

     திரமாய ளித்த ...... பொருளாகி

மகவாவி னுச்சி விழியாந நத்தில்

மலைநேர்பு யத்தி ...... லுறவாடி 

மடிமீத டுத்து விளையாடி நித்த

           மணிவாயின் முத்தி ...... தரவேணும் 
      ……………………………………….




இந்த உலக மாயையில் சிக்குண்டு, இல்லற வாழ்வில் எனக்குக் கிட்டிய அழகிய மனைவியின் கருவில் உருவாகி பத்து மாதம் கர்ப்பத்தில் வளர்ந்து, நல்ல அழகோடு  பூமியில்  தோன்றிய குழந்தைச் செல்வமாக நீ எங்களுக்குப் பிறந்து, குழந்தைப் பாசத்தினால் நான் உன்னை உச்சிமோந்து, விழியோடு விழிவைத்துமுகத்தோடு முகம் சேர்த்து, எனது மலை போன்ற தோள்களில் நீ தழுவி உறவாடி, என் மடியில் அமர்ந்து குழந்தையாக விளையாடி,நாள்தோறும்  உன் மணி வாயினால் முத்தம் தந்தருள வேண்டும் என்று திருப்புகழ் பாடுகின்றது

குழந்தைப் பேறின்மைக்கு  பலவாறான உடற்கோளாறுகள் காரணமாகின்றன. சிலவகை உடற்கோளாறுகளுக்கு  “இலங்கணம் பரம ஔடதம்” என்பது சித்த மருத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று. இலங்கணம் இருத்தல் என்பது நீர் கூட அருந்தாமல் விரதமிருப்பது ஆகும்.

இவ் இலங்கன செயற்பாடே தமிழர் வாழ்வியலில் பலவகை விரதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றதன. அவ்விரதங்களில் ஐப்பசி சட்டி விரதம் சிறப்பான ஒன்றாகக் காணப்படுகின்றது. இதனையே “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என பழமொழியாக சொல்லியுள்ளார்கள். அதாவது கந்த சட்டியில் ஆறுநாட்களும் விரதம் இருந்தால் அக பையில் வரும் என்பதாகும்.

அக பையில் என்பது ஆணினது விதைப்பை, பெண்ணினது கர்ப்பப் பைகள் என்பதாகும். இவர்களது இனப்பெருக்க உறுப்புக்களில் ஏதேனும் மாறுபாடுகள், குறைபாடுகள் இருப்பின் அவை நீங்கி குழந்தைப்பேறு உண்டாகும் என்பதே இதன் கருத்தாகும்.

கந்த சட்டி விரதம், ஆறு நாட்கள் கைக்கொள்ளப்படும் ஒரு விரதமாகும். அதாவது ஐப்பசி வளர்பிறைப் பிரதமை முதல் சஷ்டி ஈறான ஆறு நாட்கள் ஆகும்.

சில வேளைககளில் சஷ்டி திதி நேரங்கள் ஆறாவது நாள் மாலை நேரம் வரை தொடராது விடின், சூர சம்காரம் சஷ்டி திதியில் மாலை நேரத்தில் நடைபெற வேண்டும் என்பதால், சஷ்டி திதியை கருத்திற்கொண்டு ஐந்தாவது நாளே சூரசம்காரம் இடம்பெறுவதும் உண்டு. ஆனால் திதி கணக்கின் பிரகாரம் ஆறு நாட்கள் விரதமிருப்பது அவசியமாகும்.

சித்தமருத்துவ அடிப்படையில் எமது உடலானது சாரம் (Seruum), இரத்தம், தசை கொழுப்பு, என்பு, மூளை  விந்து அல்லது முட்டை (ஆணில் விந்து, பெண்ணில் கருமுட்டை) வரையான ஏழு அடிப்படை உடல் அமைப்புக்களால் ஆனது. இவற்றில் முதலாவது உடற்கட்டுக்கு, நாம் உண்ணும் உணவின் மூலம்  போசணை சென்று அதனைப் போசித்த பின்னரே ஒழுங்கு முறையில்  ஒவ்வொரு உடல் அமைப்புக்களும் போசணையைப் பெறுகின்றன.

அவ்வாறு பார்க்கும்போது நாம் உண்ணும் உணவானது முதல் நாள் சாரம் (Serum) எனப்படும் உடற் கட்டினைப் போசித்து ஏழாவது நாள் விந்து அல்லது கரு முட்டையை போசிக்கும். இதன் அடிப்படையில் முதல் நாள் விரதம் இருக்கும்போது முதலாவது உடற்கட்டான சாரம், போசணை கிடைக்காது இலங்கணம் காக்கப்படும். ஆனால் முதல் உண்ட உணவுகளின் போசணையானது ஏனைய உடற்கட்டுக்களை தொடர்ந்து போசிப்பதால் அவ்வுடற் கட்டுக்களுக்கான இலங்கணம் நடைபெறமாட்டாது.

இவ்வாறு படிப்படியாக நாட்கள் கூடிச்செல்ல முறையே இரண்டாது, மூன்றாவது என ஏனைய உடற்கட்டுக்களும் இலங்கணத்தை அடைகின்றன. இவ்வாறாக ஆறாவது நாள் இலங்கணத்தின் போது  ஏழாவது உடற்கட்டான விந்து அல்து முட்டை என்பன முன் உண்ட உணவின் போசணையினால் போசிக்கப்டுகின்றன.

ஏழாவது நாழ் பாறணையின்போது உணவினை உட்கொள்ளும்போது மேற்படி ஏழாவது உடற்கட்டுக்கள் இலங்கணத்தை அடைகின்றன. இப்பொழுது உடலின் ஏழு உடற்கட்டுக்களும் இலங்கணத்தை அடைகின்றன. 

ஆனாலும் ஆறு நாட்கள் கடும் விரதம் இருத்தலின் போது அடிப்படை உயிர்நிலை அனுசேப தொழிற்பாடுகளுக்கான சக்தியை வழங்குவதற்காக, ஏழு உடற்கட்டுக்களுக்கும் உடனடியாக சக்தியைத் தரக்கூடிய சாத்வீக குணமுடைய, மாறுபாடுகளை ஏற்படுத்தாத,   உணவான பால்  அல்லது தண்ணீர் மட்டும்  ஒருவேளை உணவாக கொள்ளப்பபடுகின்றது. அல்லது அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப பாலும் மேற்படி வகையான பழவகையும் ஒருவேளை மட்டும் உட்கொள்ளப்படுகின்றது.

இவற்றின் அடிப்படையில், இறைமருத்துவமான சித்தமருத்துவமானது முதற்சித்தன் சிவனின் ஊடாக முருகப்பெருமானுக்கு அருளப்பட்டு முருகப் பெருமானாலேயே அகத்தியர் திருமூலர் முதலான சித்தர்களினூடு மானிடர்களுக்கு வழங்கப்பட்டதாக சித்தமருத்துவ வரலாறு கூறுகின்றது.

அவ்வாறு உருவான மருத்துவம் கூறும் “இலங்கணம் பரம ஓளடதம்” என்பதனை சரிவர மேற்கொள்ள வேண்டுமாயின் ஆறு நாட்களும் இலங்கணம் எனும் விரதமிருத்தல் அவசியமாகின்றது.

ஆறுநாட்களும் இறை சிந்தையுடன் இவ்வாறு விரதமிருக்கும்போது மனம் ஒருநிலைப்பட்டு தெளிவடைகின்றது. தேவையற்ற உளநெருக்கீடுகள் மறைகின்றன. உளநெருக்கீடுகள் ஓமோன் செயற்பாடுகளில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.

முக்கியமாக உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புப் படிவுகள் விரதத்தின்போது கரைவதால் உடல் எடை குறைகின்றது. அதி உடற்பருமன் பல நோய்களுக்கும் குழந்தைப் பேறின்மைக்கும் காரணமாகின்றது.

எனினும் இலங்கணம் மேற்கொள்ளும்போது உடலின் ஆரோக்கியம், நோய்நிலைகளைக் கருத்தில் கொள்வதும், மருத்துவர்களின் ஆலோசனையுடன் மேற்கொள்வதும் இக்காலத்துக்கு அவசியமானதாகும்.

இவற்றினாலேயே கந்தசட்டி விரதம் தமிழர் மத்தியில் சிறப்புப் பெறுகின்றது.

Sunday, October 31, 2021

உடுவில் அரவிந்தன் அவர்களின், ஆகாரமே ஆதாரம் நூல் அறிமுகம்.

 #உடுவில் #அரவிந்தன் அவர்களால் எனது "ஆகாரமே ஆதாரம் " புத்தகத்துக்கான #நூல் #அறிமுகம் - இன்றைய உதயன் சஞ்சீவி வாரமலரில் (30.10.2021).

#நன்றி.



Monday, October 25, 2021

ஆகாரமே ஆதாரம் - எனது நூல் பற்றிய மருத்துவர் க. ஶ்ரீதரன் அவர்களின் பார்வை.


மருத்துவர் தி.சுதர்மன் அவர்கள் எழுதிய ஆகாரமே ஆகாரம் நூல் வெளியிடப்பட்டது. 

இந்நூலானது சித்தமருத்துவத்தில் உணவின் பயன்பாடு. சித்தமருத்துவமும் உணவும் என்பவற்றுடன், பாரம்பரிய உணவு பயன்பாட்டு முறைகள், பத்தியம் காக்கும் முறைகள், நவீன  அறிவியலில் உணவு, துரித உணவுகள். அவற்றின் கேடுகள், இலங்கையின் பாரம்பரியமாக பெண்கள் பூப்பெய்யும் போதும், கர்ப்பகாலத்திலும் அவர்களுக்கு கொடுக்கப்படும் உணவே, மருத்துவ முறைகள் என பல அவரின் சித்தமருத்துவ அறிவு. உணவும் போசணையும் பாடத்தில் பெற்றுக்கொண்ட அறிவினையும் பயன்படுத்தி அனுபவம், தேடல் , களப்பணி என்பவற்றோடு அவற்றை இலகுவாக விளங்கக்கூடிய வகையில் கையடக்கமாக எழுதியிருப்பது நன்று. 


எனினும் சிறு குறைபாடு காணப்படுகிறது. அவர் உளவியலில் பாண்டித்தியம் பெற்றிருந்தும் உளவியலும் உணவும் எனும் தலைப்பில் சிறிதாக ஆராய்ந்திருக்கலாம். 

இன்றைய காலகட்டத்தில் உணவின் மூலம் பல உளவியல்  நோயாளிகளுக்கு சிகிச்சை செய்து வருகிறோம்.  இன்றைய இளம்சமுதாயம் துரித உணவுகளுக்கு அடிமையாகி வரும் காலத்தில் எமக்கு அடுத்த தலைமுறையின் சாவினை பார்க்கும் கடைசித்தலைமுறை நாம் என்ற நிலையில் அதற்கு சிறந்த ஒரு விழிப்புணர்வு கிடைத்திருக்கிறது.

 மொத்தத்தில் தம்பி சுதர்மன் அனுபவம். அறிவு.தேடல். களப்பணி என்பவற்றுடன் இப்புத்தகத்தை உணர்ந்து எழதியிருப்பது சிறப்பானது. அட்டைப்படம் நாம் முன்பு பாடசாலையில் படிக்கும் போது கல்யாணவீடா வாழையிலை வடை பாயசத்தோடு சாப்பிட்ட  அனுபவம்  எமது ஆழ்மனத்தில் இருந்து வருவதை உணர்த்துகிறது. 

மொத்தத்தில் அவருக்கு வாழ்த்துக்கள் இம்மலர் சித்தமருத்துவ மாணவர்களுக்கு. மருத்துவர்கள். ஆராய்ச்சி மாணவர்கள்.  என பலருக்கும் பயனுள்ளதாகவும் எமது பிரதேசத்தில் பாட்டி. தாத்தா போன்றோர் வெளிநாட்டிலும். இறந்து போன நிலையியலும் அவர்கள் எம்மோடு இருப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்துகிறது. 

அன்புடன் 

மருத்துவர் க.ஶ்ரீதரன்

அண்ணன்

மருத்துவர் க. ஶ்ரீதரன்


Tuesday, September 28, 2021

உயர் இரத்த அழுத்தத்துக்கு (High Blood Pressure) ஒவ்வாத சில உணவுகள்.

பெருந்தொற்றுக்காலத்தில் முறையான  சோதனைகள் இன்றி உயர் இரத்த அழுத்த நோயாளிகள் பாதிக்கப்டுகின்றனர். பின்வரம் உணவுகளில் கவனம் எடுத்தல் தங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். 


01. உணவக உணவுகள்

பொதுவாக உணவகங்களில் காணப்படும் உணவுகளில் உப்பு, அஜினோ மோட்டோ என்பன சுவைக்காக அதிகம் சேர்க்கப்படுகின்றன. இதனால் இவ்வுணவுகளில் சோடியம் அதிகம் நிறைந்ததாக காணப்படுகின்றது.

பொதுவாக ஒருவருக்கு  ஒருநாளைக்கு 2300mg இற்கு மேற்படாது சோடியம் உணவில் காணப்பட வேண்டும். அதாவது ஒரு தேக்கரண்டி உப்புக்கு மேற்படலாகாது.  

எமது பிரதேசங்களில் காணப்படும். துரித உணவகங்களில், கொத்துரொட்டி போடும் உணவகங்களில் இவை அளவுக்கதிகமாக முக்கியமாக அஸினோமோட்டோ அதிகம் சேர்க்கப்படுகின்றது.

சூப் வகைகளில் அதிகளவு அதிகளவு உப்பு சேர்க்கப்படுவதால் சோடியம் அதிகரித்துக் காணப்படும்.

அதிகரித்த சோடியம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். அத்துடன் சிறுநீரகக்கற்களையும் தோற்றுவிக்கும்.

 

02. உப்புச்சேர்ந்த நொறுக்குத்தீனிகள்

மரவள்ளி, உருளைக்கிழங்கு, கஜு பொரியல்கள், உப்பு பிஸ்கட்ஸ், பொப்கோர்ன்,  போன்ற உப்புச் சேர்க்கப்பட்ட நொறுக்குத்தீனிகளில் பொதிசெய்யப்பட்ட உப்புச்சுவையடைய நொறுக்குத்தீனிகளில் சோடியம் அதிகம் காணப்படுகின்றது. எனவே உப்பு சேர்க்கப்படாத குறைந்தளவு உப்புச் சேர்க்கப்பட்டவற்றை அறிந்து உட்கொள்ளல் சிறந்தது.

03. ஊறுகாய், அச்சாறு, சோஸ் (Sauces) போன்றவற்றில் உப்பு அதிகம் சேர்க்கப்படுகின்றது.

. பாண் - பாண் உப்புச்சுவையாக இல்லாவிடினும் பாணில் அதிளவான உப்பும், கொலஸ்திரோலை அதிகரிக்கக்கூடிய கொழுப்பமிலங்களையும் கொண்டது. அத்துடன் அதிகளவான மாச்சத்து உடற்பருமனையும் அதிகரிக்கும். பொதுவாக வெதுப்பக உணவுகள் இதயத்துக்கு ஆகாதவை. 

05. பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைககளில் ஒரு பரிமாறல் அளவில் (30கிராமில்) 750 மில்லிகிராம் அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் சோடியம் காணப்படுகின்றது. உதாரணமாக துரித உணவகங்களில் காணப்படும் Pizza, Hot dogs, Corned beef, Bacon, Sausage …

உறைநிலையில் உள்ள பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் சோடியம் அதிகளவு காணப்படுகின்றது. இவ்வகையான இறைச்சிகள் கொள்வனவின்போது உணச்சுட்டிகளில் 600 மில்லிகிராம் சோடியம் அல்லது அதற்கு குறைந்த அளவினைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

06. அதிகளவான அற்ககோல் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கின்றது. ஒரு நாளைக்கு ஆண்கள் 28 அவுன்ஸ் பியர், 8 அவுன்ஸ் வைன், 3 அவுன்ஸ் சாராயம் என ஏதேனும் ஒன்றை அருந்தலாம். (ஒரு அவுன்ஸ்- 28மி.லீ). ஆனால் யார் இந்த அளவோடு நிறுத்துவார்கள்? அத்துடன் அற்ககோல் படிப்படியாக உள்ளெடுக்கு அளவை அதிகரிக்கவே செய்யும். எனவே ஆகா பதார்த்தம் ஆகின்றது.

07.  பாற்கட்டிகள் (Cheese) அதிகளவு சோடியம், விலங்குக் கொழுப்புக்களை கொண்டது. எனவே இவற்றினை உட்கொள்ளும்போது சோடியம், கொழுப்புக்களின் அளவுகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.



Friday, September 24, 2021

கொரனா தொற்று நோய்க்குப் (COVID 19) பின்னரான ஆரோக்கிய மேம்பாடு.

பொதுவாக நோய்கள் மாறியபின் ஆரோக்கியத்துக்கான பராமரிப்பு சித்த மருத்துவத்திலும் சரி தமிழர் பாரம்பரியத்திலும் சரி மிகவும் ஆழமாக கரிசனை காட்டப்படுள்ளது. 

 முக்கியமாக உணவு முறைகள், வாழ்வியல் நடைமுறைகளில் மாற்றம், சிறப்பு சமய வழிபாட்டு முறைகள், உறவினர்கள், நண்பர்கள், குடும்ப மருத்துவர்களது சமூகரீதியிலான அன்பான உள ஆதரவுகள், சித்தமருத்துவர்களது பத்திய அபத்திய நடைமுறைகள், நடைமருந்துகள் என நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் ஆரோக்கிய மேம்பாட்டில் சமூகத்தின் பல மட்டங்களில் இருந்தும் பலவிதமான கரிசனைகள் காணப்படுகின்றன.


தற்போதைய நிலையில் கொரனா தொற்று நோய்நிலையின் பின்னரான உள, உடல் உபத்திரவங்கள் அதிகரித்துக் காணப்படுவதுடன், தடுப்பூசியின் பின்னரான சிறு சிறு உபத்திரவங்களும் மக்களால் முன்வைக்கப்படுகின்றன. இவற்றுள் மெய்ப்பாட்டு முறைப்பாடுகளும் (Somatic complaints) அடங்குகின்றன. 

அதாவது உள ரீதியாக ஒருவருக்கு உடல்ரீதியிலான உபத்திரவங்களை உணர்தல். இங்கு உண்மையாக உடலியல் நோய் நிலைகள் இராது. 

 இன்று பொதுவாக கொவிட்-19 நோய்நிலைக்கு பின்னரான குறிகுணங்கள்.

 1. மூச்சுக் கஸ்டம் அல்லது மூச்சு வாங்கல் (Difficulty breathing or shortness of breath)

 2. களைப்பு அல்லது இழைப்பு (Tiredness or fatigue)

 3. உடலோ மூளையோ விரைவாக செயற்படும்போது மேற்படி குறிகுணங்கள் தீவிரமடைதல். ஒருமுகப்படுத்தி சிந்திக்க முடியாதிருத்தல் (Symptoms that get worse after physical or mental activities, Difficulty thinking and concentration ) 

4. இருமல் (Cough)

 5. தலையிடி, நாரி நோ உழைவு, நெஞ்சு, வயிற்று நோ (Headache, Backpain,Chest or stomach pain) 

6. நெஞ்சு படபடப்பு (Fast-beating or pounding heart) 

7. மூட்டுக்கள், தசைகளில் நோவுதல் அல்லது குத்தி குத்தி வலித்தல் (Joint or muscle pain- Pins-and-needles feeling) 

8. வயிற்றுப்போக்கு (Diarrhea)

9. நித்திரைக்குழப்பம் (Sleep problems) 

10. காய்ச்சல் (Fever)

11. நிற்கும்போது தலை சுற்றல் (Dizziness on standing) 

12. சர்ம தடிப்பக்கள் (Rashes)

13. மனநிலை மாற்றங்கள் (Mood changes) 

14. மணம் சுவைகளில் மாற்றம் (Change in smell or taste) 

15. பெண்களில் மாத சுகயீனத்தில் மாறுதல்கள் (Changes in menstrual period cycles) 

 மேற்படி குறிகுணங்கள் அல்லது உபத்திரவங்கள் குறுகிய காலத்துக்கோ நீண்ட காலத்துக்கோ காணப்படலாம். 

ஆரோக்கிய மேம்பாட்டுக்கான வழிமுறைகள். 

 1. அறிவுசார் சிகிச்சை (Cognitive therapy) 
2. உள ரீதியிலான ஆதரவு 
3. உணவு முறையில் மாற்றம் 
4. ஆன்மீக ஆதரவு 
5. பிராணாயாமம் 
 6. உடற் பயிற்சியும் யோகாசனமும் 
7. சித்தமருத்துவ சிகிச்சைகளும் நடைமருந்துகளும். 



  1. அறிவுசார் சிகிச்சை (Cognitive therapy) 

 அறிவுசார் சிகிச்சை என்பது நிகழ்கால பிரச்சினைகளை அறிவியல் ரீதியாக தற்கால நடைமுறைகளுக்கு ஏற்ப பார்ப்பதாகும். 

கடந்தகால அனுபவங்களைவிட தற்போதுள்ள நோய்நிலை, அதுபரவும் விதம், அதனால் ஏற்படும் பாதிப்புக்கள், பாதிப்புக்களில் தனியே உடல் ரீதியிலான பாதிப்புக்கள், இறப்புக்கள் என்பதைவிட உள, சமூக, பொருளாதார நிலைகளை அடிப்படையாக கொண்ட பாதிப்புக்கள் என்பவற்றை ஆராய்ந்து அதற்கேற்றவாறு பெருந்தொற்று நிலைகளை அனுகுதல் வேண்டும். 

 உதாரணமாக தடுப்பூசி போடுவதால் என்ன பயன்? தற்போதைய நிலையில் அது எவ்வாறு செயற்படுகின்றது? தடுப்பூசிகளின் பயன் முழுமையாக கிடைக்கவேண்டுமென்றால் சமூகத்தில் 75 வீதத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படவேண்டும் (மந்தை நிர்ப்பீடணம் - Herd Immunity) என்பது தொடர்பான விளக்கம் சமூகத்துக்கு ஊடகங்கள் ஊடாக சுகாதார துறையினர் மற்றும் அறிவியல்சார் துறையினரால் வழங்கப்படவேண்டும். பெருந்தொற்று தொடர்பான துறைசார் விளக்கங்களை சமூகத்தில் உள்ள அனைவரும் விளங்கக்கூடியவாறு விழிப்புணர்வுகளை ஊடகங்கள் ஊடாகவோ வேறு தொடர்பாடல் மூலமாகவோ வழங்கப்படுதல் வேண்டும். இல்லையென்றால் மூடநம்பிக்கைகளும், அவநம்பிக்கைகளும், சந்தேகங்களும் நோய்களின் தாக்கங்களை தனிமனித, சமூகரீதியாக அதிகரித்துவிடுகின்றன. 

  2. உள ரீதியிலான ஆதரவு. 

 நோய்நிலையின் போதும், அது மாறிய பின்பும் உள்ள உபத்திரவங்களாலும், நோய் தொடர்பான செய்திகளாலும், தரவுகளாலும் பெரும்பாலானோர் அதிக பீதிக்குள்ளான நிலையில் உள்ளனர். 

இதனால் பல்வேறு உளவியல் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். தனிமை, ஆதரவற்ற தன்மை, இவ்வளவுதான உறவுகள் என்ற விரக்தி, தனிமையில் ஏதேனும் நடந்துவிடுமோ என்ற பயம், தன்னால் வீட்டில் உள்ள ஏனையவர்களுக்கு நோய் வந்துவிடுமோ என்ற அச்சம், இறந்துவிட்டால் தனக்கான இறுதிக்கரிகைகள் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம், தன்னால் தொடர்ந்து ஆரோக்கியமாக வாழமுடியுமா என்ற சந்தேகம் போன்றன மனதளவில் பாரிய நெருக்கடிகளையும், ஆதரவற்ற தன்மையையும் உருவாக்கும்.

 இவற்றினை இல்லாது செய்ய இயன்றவரை நோய் வந்தவர்களுடன் தொலைபேசிகள் ஊடாக அல்லது முறையான சுகாதார பாதுகாப்புக்களுடன் தொடர்பில் இருத்தல் வேண்டும். அவர்கள் மீது கரிசனை கொண்டிருப்பதனை அவர்களுக்கு உணர்த்துதல் வேண்டும். 

உறவினர்கள், நண்பர்கள் அவ்வப்போது நலம் விசாரித்தலுடன், நேர்மறையான உரையாடல்களை பேணுதல் வேண்டும். நோய் மாறியபின் அவர்களை அரவணைத்துக் கொள்ளல் வேண்டும். அவர்களுக்கான ஆகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்துதல் வேண்டும். யாரேனும் இறப்பின் பெற்றோர், கணவன், மனைவி, பிள்ளைகள் என்போர் உடனிருத்தல் வேண்டும். இதன்போது அச்சுறுத்தல் குறைந்த நபர், தகுந்த சுகாதார பாதுகாப்புக்களுடன் உடனிருத்தல் நன்று. 

  3. உணவு முறையில் மாற்றம். 

 நோய் உள்ள நிலையிலும் சரி, மாறிய பிற்பாடும் சரி சாதாரணமாக நாம் உள்ளெடுக்கும் உணவுமுறைகளில் மாற்றம் செய்தல் அவசியமாகின்றது. உடலானது நோய்க்கு எதிராக தொழிற்படும்போது மேலதிக சக்தி தேவையாகின்றது. 

அதேபோல் சேதமடைகின்ற கலங்கள் மீளமைக்கப்படவும், கிருமிகளுக்கு எதிரான பிறபொருளெதிரிகளை உருவாக்கவும், உடல் பலவீனம் அதிகரிக்கும்போது வேறு நோய்கள் ஏற்படாதிருக்க, தொற்றுக்கள் ஏற்படாதிருக்கவும் ஊட்டச்சத்துக்கள் அவசியமாகின்றன. 

 புரதச்சத்து அதிகமாகவும், உயிர்ச்சத்துக்கள் (உயிர்ச்சத்து B வகைகள், C, D), தாதுக்கள் (Zinc, Iron) அதிகமாகவும் தேவைப்படுகின்றன. இவ்வூட்டச்சத்துக்ள இலகுவாக சமிபாடு அடையக்கூடியனவாகவும், அகத்துறிஞ்சப்படக்கூடியனவாகவும் இருத்தல் வேண்டும். 

 பழங்கள் அதிகளவில் உள்ளெடுத்தல் வேண்டும். புளிப்பான பழங்கள் நன்று. பழச்சாறுகளாக உள்ளெடுப்பது மேலதிக நீர்த்தேவையையும் நிறைவு செய்வதாக அமையும். 

போதியளவு நீர் அருந்துதல் வேண்டும். போதிய ஓய்வும், காற்றோட்டமான சூழலும் அவசியம். 

 உள்ளெடுக்கக் கூடிய உணவுகள் 

 1. உழுத்தங்களி 
2. கூழ் வகைள் 
3. கஞ்சி வகைகள் 
4. கோழிப்புக்கை (வடமராட்சியில் சிறப்பானது) 
5. சத்துமா உருண்டைகள், எள்ளுருண்டைகள் 
6. கடல் உணவுகள், முட்டை 
7. அவரையின மரக்கறிகள், பச்சை இலைவகைகள். 
8. பால் அல்லது பாலுடன் சிறிதளவு மஞ்சள், மிளகு, உள்ளி சேர்த்து குடித்தல். 
9. பனீர் 
10. பழங்களில் உலர் திராட்சை, தோடம்பழம், பப்பாசிப்பழம் …

4. ஆன்மீக ஆதரவு. 

 எமது சமூகம் ஆன்மீக நாட்டமும், இறை நம்பிக்கையும் கொண்டதாகும். அதிலும் இவ்வாறன பெருந்தொற்றுக் காலத்தில் பாரம்பரியங்கள், ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை ஏற்படுகின்றது.

 கோயில்கள், கூட்டுப்பிரார்த்தனைகள் சாத்தியம் இல்லாத நிலையில் மக்கள் கூடுதலான உளநெருக்கடிக்குள் உள்ளாவார்கள். ஆறுதல் இல்லாது போகின்றனர். தகவல் தொழில் நுட்பங்களைப்பயன்படுத்தி கூட்டுப்பிரார்த்தனைகள், தேவாரம் முதலிய திருமுறைகளை பாடுதல், பஜனைகளை ஒழுங்கமைத்தல், சமூக வலைத்தளங்கள் ஊடு சமய கருத்துகக்களை கடத்துதல் என்பன உள ரீதியிலான அமைதியையும், உளஆரோக்கியத்தையும் தரும் செயற்பாடுகளாக அமைகின்றன. 

 அகில இலங்கை சைவ மகாசபையினர் சூம் (Zoom) ஊடாக பிரதி வெள்ளிதோறும் திருமுறைகள் பாடுவதற்கு ஒழுங்கு செய்து வருகின்றனர். சமய அமைப்புக்கள் இவ்வாறான கூட்டுப்பிரார்த்தனைகளை ஒழுங்கமைப்பது சிறந்தது. குறிப்பாக முதியவர்களுக்கு இவ்வாறான தொழிநுட்ப வசதிகளை அமைத்துக்கொடுப்பது பிள்ளைகளின் கடமையாகும். 

  5. பிராணாயாமம் (மூச்சுப்பயிற்சி) 

கொரனாத் தொற்றின்போது ஏற்படும் முக்கியமான பிரச்சினை ஓட்சிசன் பற்றாக்குறையாகும். இதன்போது ஆழமான சுவாசம் நடைபெறாமையாலும் சுவாச கலங்கள் பாதிப்படைவதினாலும் குருதியில் ஒட்சிசன் செறிவு குறைவடைகின்றது. 

இதனால் உடற்கலங்களுக்குத் தேவையான ஒட்சிசன் கிடைக்காது போகின்றது. இறப்புக்கள் ஏற்படுவதற்கு முக்கியகாரணம் இதுவாகும். குருதியில் ஒடசிசன் செறிவை அளவிடுவதற்கு Pulse oximeter பயன்படுத்தப்படுகின்றது. இதன்மூலம் குருதியில் ஒடசிசன் செறிவு மட்டம் (SpO2) 95% மேல் இருத்தல் வேண்டும். இதற்கு கீழ் குறையும்போது நோயின் தீவிரம் அதிகரிக்கும். 

பொதுவாக நோய் மாறிய நிலையில் ஒடசிசன் மட்டம் குறைவடையலாம். எனவே உடலுக்குத் தேவையான உட்சிசன் அளவினைக் கூட்ட பிராணாயாமம் செய்வது அவசியமாகின்றது. ஆரம்பத்தில் மெதுவாக முடியுமான அளவுக்கு மூச்சை உள் இழுத்து வெளிவிடவேண்டும். பின்னர் படிப்படியாக பிராணாயாம முறைப்படி செய்தல் வேண்டும். படிப்படியாக நேரத்தினையும் அதிகரித்துக்கொள்ளலாம். 

பிராணாயாமம் செய்ய தொடங்கும்போது மருத்துவர்களின் ஆலோசனைய பெற்றுக்கொள்ளல் வேண்டும். 

மூச்சை உள்ளெடுத்தல், உள்வைத்திருத்தல், வெளிவிடுதல் என்பன பின்வரும் கால இடைவெளிவிகிதத்தில் முறையே அமைதல் வேண்டும். அதாவது முறையே 1:4:2 என்ற விகிதத்தில் அமைதல் வேண்டும். நோய் மாறிய நிலையில் தொடர்ச்சியாக பிராணாயாமம் செய்து வருதல் ஆரோக்கியத்தைத் தருவதுடன் யோகாசன இருக்கைகளில் இருந்து செய்யும்போது சிறப்பான பலனைத்தரும். 

  6. உடற்பயிற்சியும் யோகாசனமும். 

 பொதுவாக கொரனா தொற்றுக்குப் பின்னர் உடல் மிகவும் களைப்பாகவும், பலவீனமாகவும் காணப்படும். கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு அல்லது குறிகுணங்கள் தோன்றி குறைந்தது 14 நாட்களின் பின் குணங்குறிகள் இல்லாது போயிருந்தால், மெதுவாக நடைப்பயிற்சியைத் தொடங்கலாம். 

இதன்போது மூச்சுக்கஸ்டம், களைப்பு தோன்றினால் நடைப்பயிற்சியை நிறுத்திக் கொள்ள வேண்டும். மூச்சுக்கஸ்டமோ, களைப்போ, நெஞ்சுப்படபடப்போ இல்லாவிடின் படிப்படியாக நடையினை ஒவ்வொருநாளும் அதிகரித்துச் செல்லல் வேண்டும். நடைப்பயிற்சி 15 நிமிடத்துக்கு மேற்படாது இருத்தல் வேண்டும். 

 மேற்படி நாட்களில் எதுவித உபத்திரவங்களும் ஏற்படாதவிடத்து சூரிய நமஸ்காரம், புஜங்காசனம், வச்சிராசனம் பொன்ற இலகு ஆசனங்களை செய்து கொள்ளலாம். பின்னர் படிப்படியாக வேறு ஆசனங்களையும் சேர்த்துக்கொள்ளலாம். 

 கொரனா தொற்றின் பின்னர் வச்சிராசனத்தில் இருந்து ஐந்து நிமிடங்கள் பிராணாயாமம் செய்துவருதல் உளஉடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

7. சித்தமருத்துவ சிகிச்சைகளும் நடைமருந்துகளும். 

 சித்தமருத்துவ சிகிச்சை முறைகளில் நோய்க்குப்பின்னான பராமரிப்புக்கள் காணப்படுகின்றன. இவை சித்த மருத்துவ மனைகளில் மருத்துவர்களால் நோயாளிகளின் நிலைக்கேற்ப செய்யப்படக்கூடிய மருத்துவ முறைகளாகும். 

1. நசியம் – பொதுவாகவே நோய்கள் அணுகாதிருக்க இரண்டுமாதங்களுக்கு ஒருமுறை நசியம் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. கொரனா தொற்றின்போது சுவாசத்தொகுதியே கூடுதலாக பாதிக்கப்படுகின்றது. 

இதில் தொண்டைக்கு மேல் உள்ள சுவாச வழிகளை சுத்தப்படுத்தி கொள்ள நசியம் செய்தல் வேண்டும். இதனைச் சித்தமருத்துவர்கள் நோயாளியின் உடல் நிலைக்கு ஏற்ப செய்வார்கள். 

 நசியம் செய்வதினால் கொரனா தொற்றின் பின்னர் ஏற்படும் உபத்திரவங்களான தலைவலி, மணம்சுவைகளில் ஏற்படும் மாற்றம், நித்திரையின்மை, மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் என்பன குறைவடைவதுடன், மனநிலை மாற்றங்களினால் ஏற்படும் நெருக்கீடுகள், படபடப்பு, இரத்த அழுத்தம் என்பனவும் குறைவடைகின்றன. 

  2. மர்த்தன சிகிச்சையும் ஒத்தடம் கொடுத்தலும் – 

 மர்த்தன சிகிச்சை எனப்படுவது உடற்பகுதிகளில் எண்ணெய் பூசி பிடித்துவிடுவதலும் ஒத்தடம் கொடுத்தலும் ஆகும். இதனால் தசைப்பிடிப்பு, நாரிநோ என்பன குறைவடையும். 

  3. உடற்தேற்றி மருந்துகள் – 

 நோய் வாய்ப்பட்ட பின் பலவீனமடைந்திருக்கும் உடலையும் உடல் உறுப்புக்களையம் தேற்றுவதற்காக வழங்கப்படும் மருந்துகளாகும். பெரும்பாலும் இலேகியங்கள், மணப்பாகுகள், சூரணவகைகள் ஆகும். 

 4. நடை மருந்துகள் - நடைமருந்துகள் எனப்படுபவை உடற்தேற்றியாகவும் அதேவேளை குறிப்பாக நோயினால் பாதிக்கப்பட்ட உறுப்புக்களை சீரமைக்கக்கூடியனவாகவும், மீள நோய் வராமல் தடுக்ககூடியனவாகவும் அமைவதோடு நீண்டநாட்கள் (42 நாட்கள்- ஒரு மண்டலம்) இருக்கும். 

 நடைமருந்துகள் நோய்த்தொற்றின் பின்னர் ஏற்பட்ட உபத்திரவங்களுக்கு ஏற்பவும் அமையும். அத்துடன் பசியைத் தூண்டக்கூடியனவாகவும் நன்றாக சமிபாடு அடையச்செய்யக்கூடியனவாகவும் அமைகின்றன. 

 இலேகியங்கள், குடிநீர்கள் (மூலிகைத் தேநீர்கள்) வடகங்கள், நெய், பிட்டு, மணப்பாகு, தேனூறல்…. என பல காணப்படுகின்றன.   

இவற்றைவிட நோயாளிகளின் நிலைக்கேற்ப வேறு சிகிச்சை முறைகளும் மருத்துவர்களின் நிதானிப்புக்களுக்கமைவாக மேற்கொள்வர். 

கொரனா நோய்த்தொற்றுக்கு பின்னரான பராமரிப்பில் ஒருங்கிணைந் உள,சமூக, மருத்துவ செயற்பாடுகள் தேவைப்படுகின்றன. இவற்றைவிட பாதிக்கப்பட்டவர்கள் தமது ஆரோக்கியத்தில் கூடுதல் கரிசனைகொள்வதே முக்கியமானதாகும்.

Tuesday, August 31, 2021

கொரனாவும் தனிமனித, சமூகப் பிரச்சினைகளும்

உயிர்கள் கூடிக் கதைப்பதில், கொண்டாடுவதில், பகிர்தலில் மகிழ்வுறும், திருப்தியுறுவன. அதிலும் மனித இனம் இதில் சந்தோசத்தை அனுபவிப்பதும், ஆறுதலடைவதும், வாழ்க்கையை சிறப்பாக கொண்டு செல்வதிலும் சமூகப்பிராணியாக நேரடியான தொடர்பாடலிலும், கூட்டாக வாழ்வதில் தங்கியே வாழ்கின்றான்.

நேரடியாக தொடர்பாடல்களை மேற்கொள்ளும்போது திருப்தியடையும் விதமாகவே மனிதனின் மரபணு அமையப் பெற்றுள்ளதாக உளவியளார்கள் கூறுகின்றார்கள். இந்நிலையில் தொடர்பாடல் சாதனங்களின் வளர்ச்சி மனிதர்களின் சமூக நிலையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தினாலும், தொடர்பாடல் சாதனங்களின் வளர்ச்சியில் நன்மைகள் அதிகம் காணப்பட்டாலும், தீமைகளும் காணப்படத்தான் செய்தன. இதனால் பல சமூகப்பிறழ்வுகள், உறவுகளில் இடைவெளி என பல பிரச்சனைகள் மக்களிடையே மெலிதான வெறுமையை, குறிப்பாக வயோதிபர்களிடம் ஏற்படுத்தியிருக்கின்றன.

இதனால் வெறுமை, தனிமை, பதகளிப்பு, மனச்சோர்வு, விரக்தி, தற்கொலை எண்ணங்கள் என பல்வேறு உளச்சிக்கல்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

இதன் இரண்டாம் அலையாக 2020 மார்ச்சில் இருந்து இன்று வரை கொரனா நோய்த்தொற்றின் காரணமாக வலிந்து உருவாக்கப்பட்ட தனிமை, தனிமைப்படுத்தல்கள், சமூக இடைவெளி, முகக்கவசம், நோய்த்தொற்று மீதாக பயம், பொருளாதார நெருக்கடி என்பன மக்களிடம் அதிகரித்து இன்று பல உளரீதியிலான பிர்ச்சினைகளை எதிர்கோள்ள வேண்டியவர்களாக இருக்கின்றனர்.

ஆரம்பத்தில் தொலைபேசி, இணையமூல தொடர்பாடல்களுக்கு ஓரளவு பழக்கப்பட்டிருந்த மக்களுக்கு கொரனா முடக்கங்கள், தனிமைப்படுத்தல்கள், பயனத்தடைகள் ஏற்படுத்திய பாதிப்புக்கள் பெரிதாக தெரியவில்லை. அத்துடன் கொஞ்சக்காலத்துக்குத்தானே என்ற உணர்வும் உளத் தாக்கங்கங்களை அதிகப்படுத்தப்படுத்தவில்லை.

காலம் போகப்போக மாதம் மாதங்களாகி, வருடம் வருடங்களாக…. நோய்த்தொற்று தொடர்பான பயமும், தொழில்களில் ஏற்பட்ட நெருக்கடிகள், நாட்டின் பொருளாதார தொய்வும் அதனால் ஏற்பட்ட பொருட்களின் விலையுயர்வுகளும் மக்களிடம் பலவிதமான உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தியதுடன், தலையிடி, நாரிநோ, மாதவிடாய் தொடர்பான கோளாறுகள்,  என பல மெய்பாட்டு முறைப்பாடுகளும், உடற்பருமன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் என தொற்றாநோய்களின் தீவிரமும் அதிகரித்துள்ளன. அதிலும் மக்கள் வரப்பிரசாதமாக எண்ணி அதீத நம்பிக்கை கொண்ட தடுப்பூசிகள் தொடர்பான வதந்திகள், தடுப்பூசி போட்டவர்களுக்கும் ஏற்பட்ட நோய்த்தொற்று இவ்வாறான பிரச்சினைகளை மேலும் அதிகரித்துகொண்டது.

பொதுவாக மனித நடத்தையானது நீண்ட கால உளநெருக்கடிகள் ஏற்படும்போது மாற்றமடையத் தொடங்குகின்றன. ஆனால் அந்நடத்தை மாற்றங்கள் எவ்வாறானதாக அமையும் அது தனிமனித வாழ்க்கைக்கு, சமூக வாழ்க்கைக்கு இசைவானதாக இருக்குமா என்பதே கேள்வியாகும்.

இன்று சமூகவலைத்தளங்களில் கேலிக்குரியதாகவும், நகைச்சுவையாகவும் பரிமாறப்படும் படங்கள் நாடு முடக்கப்படும்போது, அல்லது ஏதேனும் பயனத்தடைகள் வரும்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் முண்டியடித்து வரிசையில் நிற்பது. ஆனால் இதில் ஒரு பகுதியினர் மதுபானசாலைகளில் வரிசையில் நிற்பது என்பது எமது பாரம்பரிய நடத்தைமாற்றங்களில்  முக்கியமானதொன்றாக கவனிக்கப்படவேண்டியது. திருமணங்கள் பேசும்போது மாப்பிள்ளை பியர் மட்டுந்தான்! குடிக்கிறவர் என்பதை சர்வசாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்படுவது. அதேபோல் க.பொ.த. உயர்தரத்தில் வெற்றியடைந்தமைக்காக வீட்டில் நடாத்தப்படும் கொண்டாட்டத்தில் கூட பியர் பரிமாறுவது. இவ்வாறான சமூக மாற்றங்கள் படிப்படியாக நீண்டகால போரின் பின்னரான மனநிலை மாற்றங்களாக ஏற்பட்டுள்ளன. இவை தொடர்பாக சமூகமட்டத்திலோ, அரசியல் மட்டத்திலோ, நிர்வாக மட்டத்திலோ போதிய விழிப்புணர்வோ, செயற்பாடுகளோ இல்லாமை கவனத்திற் கொள்ளப்படவேண்டியது ஆகும்.

பொதுவாக இவ்வாறான அறிவியலை மிஞ்சிய இயற்கை அனர்த்தங்கள், நோய்கள் ஏற்படும்போது மக்களிடையே பாரம்பரியங்கள் தொடர்பான நம்பிக்கைகள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள், கலாச்சாரங்கள், தெய்வநம்பிக்கைகள் அதிகரித்துக் காணப்படும். ஆனால் நம்பிக்கைகள் நம்பிக்கைகளாகவே இருக்கும் நடைமுறைப்படுத்தமாட்டார்கள். கடவுள் விட்ட வழி என தமது பொறுப்புக்ளை தட்டிக்கழிக்கும் மனோநிலைக்கு தள்ளப்பட்டிருப்பார்கள்.

இப்படியான நிலையில் சமூகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், ஆன்மீகத் தலைவர்கள் மக்களை சரியான வழிக்கு திசைதிருப்புதல் வேண்டும். இது அவர்களது கட்டாயக் கடமையாகும். ஆனால் இவ்வாறான செயற்பாடுகளுக்கு அவர்கள் சரியான தகுதியுடையவர்களாக, விழிப்புணர்வைக் கொடுக்கக் கூடியவர்களாக, அறிவியல் ரீதியலாக பிரச்சினைகளை அணுகக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும். மாறாக இவ்வாறன சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி மூடநம்பிக்கைகளை விதைப்பவர்களாக இருத்தல் கூடாது.

இன்றைய சமூகத்தில் சமூக மாற்றங்களில் முக்கியமாக செயற்படுபவர்கள் மேற்கூறியவர்களை விட ஊடகவியலாளர்களே. முக்கியமாக சமூகவலைத்தள ஊடகவியலாளர்களே. இவர்கள் தனியே முந்திக்கொண்டு, பரபரப்புக்காக செய்திகளை வெளியிடாமல் சமூகப்பொறுப்புடன், ஒவ்வொரு களநிலைமைகளையும் ஆராய்ந்து, உரிய துறையினருடன் கலந்துரையாடி தகவல்களைப் பெற்று செய்திகளைப் பதிவிட வேணடும்;. உதாரணமாக இன்றைய சூழலில் தடுப்பூசி தொடர்பான ஏராளமான வதந்திகளும், தவறான தரவுகளுமே பதியப்படுகின்றன. சாதாரணமாக பதிவிடுபவர்கள் ஒன்றை யோசிப்பதில்லை, அதாவது உணர்ச்சி பூர்வமாக போதிய ஆதாரங்கள் இல்லாது தங்களைச் சுற்றியுள்ள சில சம்பவங்களை அல்லது நபர்களை மட்டும் வைத்துக்கொண்டு, அல்லது ஆதாரமற்ற வேறு சமூகவலைத்தள செய்திளை வைத்துக்கொண்டு பதிவுகளை மேற்கொள்ளும்போது, தடுப்பூசியை உருவாக்கும்போது எவ்வளவு தூரம் எத்தனை துறைசார் நபர்கள், எத்தனை அமைப்புக்கள் அவற்றில் தொழிற்படுகின்றார்கள் என்பதை பற்றியும், நாம் இந்தக் காலத்தில் என்ன செய்தோம் என்பது பற்றியும் ஆகும்.

இவ்வாறன பொறுப்பற்ற பதிவுகள், ஏற்கனவே நோய்த்தடுப்பில் ஈடுபடுபவர்களை சிக்கலிலும் அவர்களது பணிச்சுமையை அதிகரிப்பதிலுமே செல்வாக்கு செலுத்துவதோடு அவர்களை உள ரீதியாக மனச்சோர்வுக்கும், விரக்திக்கும், சலிப்புக்குமே தள்ளுவதனால் அவர்களது பணியில் தொய்வுநிலையையும் ஏற்படுத்திவிடும். இதைவிட ஏற்கனவே நோய் தொடர்பான அச்சல் உள்ள மக்களை மேலும் அச்சத்துக்குள்ளாக்குவதோடு பல உள ரீதியிலான நெருக்கீட்டுக்கு மக்களை கொண்டு செல்வதாக அமைகின்றது.

இவ்வாறான செயற்பாடுகள் காலப்போக்கில் தொற்றா நோய்களின் தீவிரத்தை அதிகரிக்க கூடும். அதேபோல் தொற்றா நோய்களால் ஏற்படும் இறப்புக்களையும் அதிகரிக்கக் கூடிய சாத்தியக்கூறுகளே அதிகம்.

பெருந்தொற்றான கொரனா காலத்தில் ஏற்பக்கூடிய உடல் உளப் பிரச்சினைகள் ஏற்படக் காரணங்கள்.

1. நோய் தொற்றி விடுமோ என்ற பயம்,

2. பொருளாதார நெருக்கடி தொடர்பான பயம்.

3. நோய்த்தொற்று தொடர்பான தொடர் செய்திகள்.

4. விரும்பியோ விரும்பாமலோ நீண்ட கால நோய்த் தொற்று, நோய்த் தொற்று தடுப்பு செயற்பாடுகளில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம்.

5. தொழில் இழப்பு.

6. மங்கல நிகழ்வுகள் தடைப்படல் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட நிகழ்வுகள்.

7. நோயினால் ஏற்படும் இறப்புக்கள்.

8. நீண்ட கால நேரடி கல்விச் செயற்பாடுகள் இல்லாது இருத்தல் மற்றும் தொழிநுட்ப ரீதியிலான கல்விச் செயற்பாடுகள்.

9. பொருட்களின் விலை அதிகரிப்பு.

10. நண்பர்கள், உறவினர்களுடன் இயல்பாக ஒன்றுகூட முடியாமை.

11. தனிமைப்படுத்தல்களில் ஏற்படும் குடும்ப உறுப்பினர்களின் பிரிவு.

உடல் ரீதியிலான பிரச்சினைகள்

1. உடற்பயிற்சி, உடற்தொழிற்பாடுகள் குறைவு, உடற்பருமன் அதிகரிப்பு.

2. மெய்பாட்டு முறைப்பாடுகள் - தலையிடி, உடல் குத்துழைவு, நாரிநோ, பெண்களில் மாதவிடாய் தொடர்பான ஒழுங்கீனங்கள்.….

3. தொற்றா நோய்களின் அதிகரிப்பு.

உள ரீதியிலான பிரச்சினைகள்

1. பயம் - நோய் தொற்றிவிடுமோ என, பொருளாதார நிலை தொடர்பாக, தொழில் நிலையின்மையால் ஏற்படும் எதிர்காலம் பற்றி….

2. புதகளிப்பு - கூடுதலாக நோய்த்தொற்று தொடர்பான எதிர்மறையான தொடர் செய்திகள். ….

3. மனச்சோர்வு – நீண்டகால நோய்த்தொற்று, முடக்கம், தனிமை, தனிமைப்படுத்தல்கள், தொழில் இழப்புக்கள்,  இறப்புக்கள் ….

4. விரக்தி – நோய்த்தொற்றின் தொடர் அலைகள், முடிவில்லா தன்மை…..

5. மெய்ப்பாட்டு முறைப்பாடுகள் - முக்கியமாக தடுப்பூசி தொடர்பான பக்க விளைவுகள்…..

6. பலவீனமடைந்திருப்பதாக உணர்தல்.

7. தேவையற்று கோபப்படல்.

8. தற்கொலை எண்ணங்கள், தற்கொலைகள் - நோய்த்தொற்றை சமூக இழுக்காக கற்பனை செய்வதால், தொழில் இழப்பு பொருளாதார நெருக்கடி…

தனிமனித சமூக நடத்தை மாற்றங்கள்

1. குடும்பத்தில் பிரச்சினைகள், வன்முறைகள்.

2. நீண்ட நேர சமூக வலைத்தளப் பாவனையும் அதற்கு அடிமைப்படுதலும்.

3. மதுப்பாவனை அதிகரிப்பு.

4. நோய் தொடர்பாக அனைவரையும் சந்தேகத்துடன் பார்த்தல், விலகியிருத்தல்.

5. புயத்தினால் அடிக்கடி நோய்ப்பாதுகாப்பு முறைகளை தேவையற்று செய்தல் - நிர்ப்பந்த பீடிப்புக் கோளாறுக்குள்ளாகுதல்.

மேற்படி பல்வேறு உடல், உள, நடத்தை, சமூக மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இவைதொடர்பான சரியான பகுத்தறிவுசார்ந்த விழிப்புணர்வு ஒவ்வொருவரிலும் ஏற்படுதலும், ஏற்படுத்துதலும் வேண்டும். இதற்கு அனைவரும் அனைவருக்கும் அனைத்து வழிகளிலும் உதவுதலுடன், அன்புடன் ஆதரவாக இருத்தலானது ஆரோக்கியமான சமுதாயத்தை நிலைத்திருக்க உதவும்.


Sunday, August 29, 2021

கொரனா காலமும் உணவுகளும்.

 கொரனா ஆனது பெருந்தொற்று மட்டுமல்ல மிகநீண்ட காலத் தொற்றாகவும் மக்களை அச்சுறுத்தி வருகின்றது. தொடர்ந்து இக்காலத்தில் வாழ வேண்டுமென்றால்,

1.   சமூக இடைவெளி

2.   முகக்கவசம்

3.   கைகளை சவர்க்காரமிட்டு கழுவுதல்

4.   தொற்றுநீக்கி திரவத்தினை (Sanitizer) பயன்படுத்தல்

5.   தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளல்

போன்ற சுகாதார நடைமுறைகளை அவசியம் கைக்கொள்ள வேண்டும். ஆனால் இவையாவற்றையும் சரிவர முறையாக சமூகத்தில் உள்ள அனைவரும் முறையாக கடைப்பிடிக்கும்போதுதான் நூறு வீத பலனடைய முடியும்.

எம்மைத் தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றால் முக்கியமாக எமது உடல் ஆரோக்கியமாக இருத்தல் வேண்டும். நோயுடன் போராடக்கூடிய திறனுடன் இருத்தல் வேண்டும். இதற்கு சரியான உணவும், உணவுப் பழக்கவழக்கங்களையும், சரியான உடற்பயிற்சிகளையும் கைக்கொள்ள வேண்டும்.

சரியான உணவு எனும்போது ஊட்டச்சத்துக்கள் சரிவிகிதசமனாக அமைதல் வேண்டும். சித்தமருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு உடற் கட்டமைப்புக்கள் ஆன சாரம் (Serum), செந்நீர் (Blood), தசை (Muscle), மூளை Brain), என்பு (Bone), கொழுப்பு (Fat), வெண்ணீர் (Sperm) அல்லது முட்டை (Ovum) என்பன ஆரோக்கியமானவையாக இருத்தல் வேண்டும்.

இவற்றில் ஏதேனும் ஒன்று பலவீனமாக இருந்தால்கூட நோய் எதிர்ப்பு சக்தியானது பலவீனமாகவே காணப்படும். மருந்துகள் முறையாக கண்டுபிடிக்க முடியாத கொரனா போன்ற நோய்நிலைகளில் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமே நோயிலிருந்து எம்மைக்காப்பாற்றக்கூடியது.

உணவே மருந்து, மருந்தே உணவு என்பதற்கு அமைய இவ் நோய் எதிர்ப்பு சக்திக்கு உணவும் உணவுப்பழக்கவழக்கங்களும் நோய்க்கு மருந்தாக அமைகின்றன. முக்கியமான உணவுப்பொருட்களில் உள்ள தாவர இரசாயனங்கள் (Phytochemicals – Secondary Nutrition) முக்கிய பங்காற்றுகின்றன.

உணவின் முதல் நிலைச் சத்துக்களான (Primary Nutrition) மாப்பொருள், புரதம், கொழுப்பு, உயிர்ச்சத்துக்கள், கனிமங்கள் என்பன உடலுக்கு தேவையான சக்தி, உடல் வளர்ச்சி, உடல் அனுசேபத் தொழிற்பாடுகளை ஒழுங்காக்குதல் என்பவற்றுக்கும் சில உயிர்ச்சத்துக்கள் வளர்சிதை மாற்றங்களைத் தடுப்பதிலும் (Antioxidants) உதவுகின்றன.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு உடலில் ஆதாரமாக அமைவது நீர் ஆகும். எனவே போதுமான அளவு நீர் பருகுதல் வேண்டும். தாகத்தை உணரமுன் தேவையான நீரினை பருகுதல் நன்று. பொதுவாக 1.5 லீற்றர் – 2 லீற்றர் வரை பருகுதல் வேண்டும். நன்றாக கொதிக்க வைத்த நீர் போதுமானது.

உணவில், முக்கியமாக தாவர உணவில் உள்ள இரண்டாம் நிலைச்சத்துகள் (Secondary Nutrition) ஆன தாவர இரசாயனங்கள் நோயெதிர்ப்பு சக்தியைத் தரக்கூடியனவாகவும், நோயின்போது கிருமிகளை அழிக்கக் கூடியனவாகவும், கிருமித்தொற்றுக்களால் ஏற்படும் உடல் சிதைவுகளை விரைவாக குணமாக்கக் கூடியனவாகவும் இது போன்று பல்வேறு மருத்துவ குணமுடையனவாகவும் காணப்பட்டு உடலை நோய்களால் பாதிக்காவண்ணம் தடுக்கின்றன. இவ்வாறான தாவர இரசாயனங்களே சித்தமருத்துவத்தில் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

இவ்வாறான விடயங்களைக் கருத்திற் கொண்டு உணவுகளை உண்ணும் பொழுது, உண்ணும் சிறுபொழுதுகள் (காலை, மதியம், இரவு …. ), பருவ காலங்களையும் கருத்தில் கொண்டு உணவுகளை உட்கொள்ளுதல் வேண்டும்.

உதாரணமாக சிறுபொழுதுகளைக் கருத்திற் கொள்ளும் பொழுது,

1.   காலை உணவில் – பயறு, கடலை, துவரை, உழுந்து போன்ற அவரையின பொருட்கள், எள்ளு, என்பனவற்றை பிரதானமாகவும்,கடுகு, மிளகு, வேர்க்கொம்பு, பெருங்காயம் போன்றவற்றை அதிகமாகவும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

2.   மதிய உணவில் – கிழங்கு, கீரை, இலைவகைகள், பழவகைகள், பால்சார் உணவுகள், மாமிச வகைகள் பிரதானமாக சேர்க்க வேண்டும்.

3.   இரவு உணவில் – பால், துவரம் பருப்பு, கண்டங்கத்தரி, தூதுவளை, சுண்டங்கத்தரி, பிஞ்சு மரக்கறிகள் என்பன சேர்த்தல் வேண்டும்.

இதேபோல் பாரம்பரியமாக கைக்கொள்ளப்படும் பருவகால உணவுகளையும் கவனத்திற் கொள்ள வேண்டும். ஏனெனில் பருவகாலங்களில் ஏற்படும் உடற்பலவீனங்களை பருவகால உணவுகள் சீர்செய்யக்கூடியன.

எக்காலத்திலும் உடலில் ஏற்படும் சமநிலைக்குழப்பங்களை சரி செய்து நோயின்றி வாழ பின்வரும் முக்குற்றசம திரவியங்களை உணவுடன் முறைப்படி சேர்த்துக்கொள்ளல் வேண்டும்.

1.   ஏலம்

2.   மஞ்சள்

3.   சீரகம்

4.   பெருங்காயம்

5.   வேர்க்கொம்பு அல்லது இஞ்சி

6.   வெந்தயம்

7.   உள்ளி

8.   மிளகு

உணவு உண்ணும்போது கவனிக்க வேண்டிய விடயங்கள்.

1.   நன்கு பசியேற்பட்ட பின்னர் உணவு உட்கொள்ளவேண்டும்.

2.   கைகளை நன்கு கழுவிக்கொள்ளல்

3.   இறைவனை வணங்குதல்

4.   சரியான இருக்கையில் அமர்தல் (உணவினை அவமதிக்காது)

5.   வேறு கவனங்கள், சிந்தனைகள் இன்றி உண்ணுதல் வேண்டும்.

6.   அதிக சூடான உணவுகளை உண்ணக்கூடாது.

7.   அற்ப சூடுள்ளதாக உணவு இருத்தல் வேண்டும்.

8.   உண்ணமுன் தொண்டைசிறிது நனைக்க சிறிது நீர், உணவின் மத்தியில் நீர் அருந்துதல் வேண்டும்.

உண்ணும் உணவுகள் இருக்கவேண்டிய அளவுகள். – ஒரு நாளுக்கானது

1.   தானியங்கள் மற்றும் மாச்சத்துள்ள உணவுகள் – 6 - 11 பரிமாறல் அளவுகள் (Serving size) – 1பரிமாறல் அலகு 200ml குவளை (Cup), பாண் என்றால் ஒன்பது சமதுண்டுகளாக பிரித்த ஒருபங்கு (50கிராம்).

2.   மரக்கறிகள் – 3 – 5 பரிமாறல் அளவு, ஒரு பரிமாறல் அளவு – சமைத்த மரக்கறிகள் எனின் ½ குவளை, சமைக்காத மரக்கறி எனின் 1 குவளை.

3.   புரத உணவுகள் – 3 – 4 பரிமாறல் அளவு, ஒரு பரிமாறல் அளவு – சமைத்த மாமிச உணவு – 30கிராம், முட்டை -  1, பருப்பு வகை – 3 மேசைகக்கரண்டி, கருவாடு – 15 கிராம். (இவற்றில் ஏதேனும் ஒருவகை ஒரு நளைக்கு).

4.   எண்ணெய்கொள் விதைகள் (nuts) – 2 – 4 பரிமாறல் அளவு. ஒரு பரிமாறல் அளவு – ஒரு மேசைக்கரண்டி – 15 கிரராம்.

5.   பால் பால்சார் உணவுகள் – 1 – 2 பரிமாறல் அளவு, ஒரு பரிமாறல் அளவு பால் எனின் ஒரு குவளை (200ml), தயிர் எனின் 100ml, பால்மா வகை எனின் 2 மேசைக்கரண்டி (30g).

6.   பழங்கள் – 2 – 3 பரிமாறல் அளவு, ஒரு பரிமாறல் எனின் நடுத்தர அளவுள்ள வாழைப்பழம், தோடமடபழம், வெட்டிய பழங்கள் எனின் ½ குவளை, உலர் பழங்கள் எனின்  இரண்டு மேசைக்கரண்டி.

கொரனா பெருந்தொற்றுக் காலத்தில் …

1.   பரிமாறல் அளவுகளின் கூடுதலான அளவு அல்லது தேவைக்கேற்ப புரத உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

சைவ உணவுப்பழக்கமுள்ளோர் அதிகம் பயங்கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் எமது சைவ உணவுப்பழக்கமானது பால், பால்சார் உணவுகளை கொண்டது. எனவே இவற்றினை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். பாலில் இருந்து செய்யப்படும் பனீர் சிறந்ததாக இருக்கும். குறிப்பாக சிறுவர்களுக்கு.

அத்துடன் உழுத்தங்களி சிறந்த புரத உணவாகும்.

2.   பழ வகைகள், மரக்கறி, இலைவகைகள் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் சேர்த்து ஒரு நாளைக்கு குறைந்தது கட்டாயமாக 500 கிராம் இருத்தல் வேண்டும்.

3.   உணவில் மேற்குறிப்பிட்ட முக்குற்ற சம திரவியங்கள் ஆன வேர்க்கொம்பு, பெருங்காயம், மஞ்சள், உள்ளி, மிளகு என்பவற்றை அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இவற்றினைப்பயன்படுத்தி இரசம் செய்து சிறிது சிறிதாக (30ml) அவ்வப்போது பருகுதல் நன்று.

4.   நீராகாரங்கள் அதிகம் சோத்துக்கொள்ள வேண்டும்.  பழரசங்களாக, கஞ்சி வகைகளாக உட்கொள்ளுதல் நன்று.

கஞ்சியில் புளிக்கஞ்சி சிறப்பான பலனையளிக்கும்.

5.   அதிளவிலான மாப்பொருள் உணவுகள், தனியே கலோரிகள் கொண்ட உணவுகளைத் தவிர்தல் வேண்டும். பரிமாறல் அளவுகளின் குறைந்த அளவுகளைக் கொள்ளல் வேண்டும்.

ஆனால் நோயுற்றபோது உடற்தொழிற்பாட்டுக்குத் தேவையான சக்தியை வழங்கக் கூடியதாக கலோரி அதிகமுள்ள உணவுகளை  எடுத்தல் வேண்டும். (இளநீர், குளிர்சாதனப் பெட்டியில் வைக்காத சோடா வகைகள்)

6.   நோய்த்தொற்றுள்ளபோது எந்த உணவானாலும் இலகுவாக சமிபாடு அடையக்கூடிய உணவுகளாக இருத்தல் வேண்டும். மாமிச உணவுகளில் மீன்வகைகள், முட்டை, இறைச்சிவகைகள் எனில் இரசமாக (Soup) இருத்தல் நன்று.

7.   நோய்த்தொற்றுள்ளபோது களி வகைகளாக, நீராகாரங்களாவே இருத்தல் நன்று. (கூழ், கஞ்சி வகைகள்)

  

 

 

உள நெருக்கீடுகளில் சித்த மருத்துவத்தின் பங்கு.